Scam Revealed: பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் மோசடி; வெளிச்சம் போட்ட அறப்போர் இயக்கம்!

இந்தாண்டு பொறியியல் படிப்புக்கு 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருக்கிறார்கள். 

கடந்தாண்டை விட இந்தாண்டு விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை அதிகம். பொறியியல் படித்தால் எப்படியும் வாழ்க்கை மாறிவிடும் என்ற எதிர்பார்ப்பிலும் நம்பிக்கையிலும் பொறியியல் கல்லூரியை நாடி வருகிறார்கள் இளைஞர்கள். அவர்களது நம்பிக்கையில் மண்ணள்ளிப்போட்டு ஏமாற்றுகின்றன சில பொறியியல் கல்லூரிகள். அறப்போர் இயக்கம் கண்டறிந்து வெளியிட்டுள்ள அறிக்கை, தமிழக பொறியியல் கல்லூரிகள் செய்யும் முறைகேடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன.

தமிழகத்தில் 441 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. மொத்த இடங்கள் 2,32,376. ஒவ்வொரு கல்லூரியிலும் தகுதி வாய்ந்த பேராசிரியர்கள் முழுநேரமாகப் பணியாற்ற வேண்டும், போதிய அளவுக்கு உள்கட்டமைப்பு இருக்கவேண்டும் என்றெல்லாம் விதிமுறைகளை வகுத்து வைத்திருக்கிறது AICTE. கல்லூரியில் பணிபுரியும் முழுநேர பேராசிரியர்கள் மற்றும் முனைவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தே அந்த கல்லூரியில் பாடப்பிரிவுகளுக்கும், மாணவர்கள் எண்ணிக்கைக்கும் அனுமதி அளிக்கப்படும். இதை உறுதி செய்ய அண்ணா பல்கலைக் கழகத்தின் CAI பிரிவு Inspection Committee ஆண்டுதோறும் தமிழ்நாட்டில் இருக்கும் இன்ஜினீயரிங் கல்லூரிகளை நேரடி ஆய்வு செய்கிறது. 2023-24 கல்வியாண்டில் தகுதியற்ற நூற்றுக்கணக்கான கல்லூரிகளுக்கு அனுமதி அளித்து இந்தக்குழு மோசடி செய்துள்ளதை அம்பலப்படுத்தியிருக்கிறது அறப்போர் இயக்கம். ஒரு கல்லூரியில் பணியாற்றும் முழுநேர பேராசிரியர், ஒரே நேரத்தில் மற்றொரு கல்லூரியில் முழுநேர பேராசிரியராக பணிபுரிய முடியாது. 

AICTE Logo

AICTE விதிமுறைகளின்படி அப்படி பணி புரிந்தால் மோசடி. பி.ஹெச்டி முடித்த தகுதி வாய்ந்த பேராசிரியர்களுக்கு அதிக சம்பளம் தரவேண்டியிருக்கும் என்பதால் முதுநிலை பட்டப் படிப்பை முடித்த இளைஞர்களை சொற்ப சம்பளத்துக்கு ஆசிரியர்களாக நியமிக்கின்றன பல பொறியியல் கல்லூரிகள். Guest Lecture எனப்படும் சிறப்பு பேராசிரியர்கள் முழுநேர பேராசிரியர்கள் அல்ல. நிறைய கல்லூரிகள், தங்களுக்குள் சிண்டிகேட் அமைத்துக்கொண்டு ஒரே பேராசிரியரின் பெயரை அவரவர் கல்லூரிகளில் பணிபுரிவதாக காட்டி AICTE-ஐ மட்டுமின்றி மாணவர்களையும் பெற்றோரையும் ஏமாற்றியுள்ளனர்.

2023-24-ல் அங்கீகரிப்பட்ட கல்லூரிகள் மற்றும் அங்கு பணிபுரியும் பேராசிரியர் விபரங்களை அண்ணா பல்கலைக் கழகத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து ஆய்வு மேற்கொண்டத்தில் 353 பேராசியர்கள், ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் முழுநேர பேராசிரியராக இருப்பதை அறப்போர் இயக்கம் கண்டறிந்துள்ளது. இரண்டு பேராசிரியர்கள் ஒரே நேரத்தில், வேறு வேறு மாவட்டத்தில் உள்ள 11 கல்லூரிகளில் முழுநேரப் பேராசிரியர்களாக மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதாக அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதை அறப்போர் இயக்கம் சுட்டிக்காட்டியுள்ளது. 

Scam (Representational Image)

அதேபோல மூன்று பேராசிரியர்கள் ஒரே நேரத்தில் வேறு வேறு மாவட்டங்களில் உள்ள 10 கல்லூரியில் பணியாற்றுவதாக தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
"இதுபோல 353 முழு நேர பேராசிரியர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் முழுநேர பேராசிரியர்களாகப் பணிபுரிகின்றனர். அப்படி பொய்யாக நிரப்பப்பட்ட முழுநேர பேராசிரியர்கள் பணியிடத்தின் எண்ணிக்கை 972. இந்த போலி பேராசிரியர்கள் 224 கல்லூரிகளில் முழுநேர பேராசிரியர்களாக பணி புரிகின்றனர்..." என்று அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள பாதி பொறியியல் கல்லூரிகளில் இந்த முறைகேடு நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை முறைகேட்டை மறைத்து அண்ணா பல்கலைக் கழகத்தின் Inspection Committee அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இது தொடர்பாக அறப்போர் இயக்கம் விரிவான செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
"அண்ணா பல்கலைக்கழகத்தின் Inspection Committee 2023-24-ல் கல்லூரிகளுக்கு நேரடி ஆய்வுக்கு சென்ற தேதி விபரங்களை RTI மூலம் பெற்றோம். 02.06.2023 அன்று ஒரே நாளில், இரு கல்லூரிகளுக்கு ஆய்வு குழு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த இரு கல்லூரிகளிலும் ஒரு பேராசிரியர் முழுநேர பேராசிரியராக பணியாற்றுவதாக அந்த இரு கல்லூரிகளுமே தெரிவித்துள்ளன.

RTI

இரு கல்லூரிகளுக்கும் சென்ற ஆய்வுக்குழு அதை ஒப்புக்கொண்டது.

ஒவ்வொரு பேராசிரியருக்கும் AICTE இணையத்தில் கல்லூரி நிர்வாகம் தனிப்பட்ட ஐ.டியை  உள்ளீடு செய்ய வேண்டும். ஒவ்வொரு பேராசிரியருக்கும் தனித்தனியாக ஐ.டி வழங்கப்படுவதால் ஒருவர் பெயரை இரண்டு முறை பதிவு செய்ய முடியாது.  ஆனால் முறையான AICTE வழங்கிய Unique ID-ஐ Entry செய்யாமல், போலித்தனமாக AU, AUU, AU1, Number1, AU1000 போன்று போலியான ID-களை வழங்கி முழுநேர பேராசிரியராக இருப்பவர்கள் எண்ணிக்கை மட்டும் 13,891 பேர். தனிபட்ட ID தரவுகள் வழங்கப்படாமல் பணிபுரிவதாகச் சொல்லப்படும் இந்த 13,891 பேர் பேராசிரியராக பணிபுரிவதை ஆய்வு செய்து தகுதியான பேராசிரியர்களா என்பதை உறுதி செய்யவேண்டும்..."  என்றும் அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது.

college students (representational image)

2023-24 காலக்கட்டத்தில் பணியாற்றிய அப்போதைய CAI இயக்குநர், ஆய்வுக்குழு உறுப்பினர்கள், 224 கல்லூரி நிர்வாகிகள், 353 பேராசிரியர்கள், இவ்வளவு பெரிய முறைகேட்டை கண்டும் காணாமலும் இருந்த அண்ணா பல்கலைக்கழக செனட், சிண்டிகேட் உறுப்பினர்கள் அனைவரும் விசாரிக்கப்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ், மத்திய உயர்கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், மத்திய உயர்கல்வித்துறை செயலர் லட்சுமிநாராயண் மிஸ்ரா, AICTE சேர்மன் T.G சீதாராம், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநர், தலைமைச்செயலர் சிவதாஸ் மீனா, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, உயர்கல்வித்துறை செயலர் பிரதீப் யாதவ் ஆகியோருக்கு அறப்போர் இயக்கம் புகார் அனுப்பியுள்ளது.

இது தொடர்பாக அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசனிடம் பேசினோம்.
"தமிழகத்தில் செயல்படும் சரிபாதி பொறியியல் கல்லூரிகள் இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளன. அதற்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பலரும் துணை போயிருக்கிறார்கள். நடப்புக் கல்வியாண்டில் அந்தப் பல்கலைக்கழகங்களின் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கக்கூடாது. கல்லூரி நிர்வாகங்கள், அண்ணா பல்கலைக்கழக ஆய்வுக்குழுவினர் மீது கிரிமினல் நடவடிக்கையும்  துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டும். ஒரே நாளில் அந்தக்குழு இரண்டு கல்லூரிகளில் ஆய்வு செய்கிறது.

அறப்போர் ஜெயராமன்

இரண்டு கல்லூரியிலும் ஒரு பேராசிரியரின் பெயரைச் சொல்கிறார்கள். அதை ஏற்றுக்கொண்டு அங்கீகாரம் அளித்திருக்கிறார்கள். ஆய்வுக்குழுவினரின் பெயரை தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி கேட்டபோதும் தர மறுக்கிறார்கள். கீழ் அளவில் மட்டுமின்றி மேல் நிலை வரை முறைகேட்டில் தொடர்பு இருந்துள்ளது. இதற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியும் உயர்கல்வித்துறை செயலரும் முழுப்பொறுப்பேற்க வேண்டும்" என்கிறார் அவர்.
கல்வி தங்கள் வாழ்க்கையை மாற்றிவிடும் என்ற நம்பிக்கையில் பொறியியல் படிப்பைத் தேர்வு செய்து கல்லூரிக்கு வருகிறார்கள் மாணவர்கள். அவர்களை ஏமாற்றியிருக்கின்றன பொறியியல் கல்லூரிகள். அதற்கு அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் துணை போயிருக்கிறார்கள். உயர்கல்வியில் புரையோடிக்கிடக்கும் ஊழலையும் முறைகேடுகளையும் வெளிக்காட்டுகிறது இந்த அவலம். முதல்வர் இந்த விவகாரத்தில் நேரடியாகத் தலையிட வேண்டும். தவறிழைத்த அனைவரையும் சமரசமின்றி சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்!  

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.