ஒலிம்பிக் ஹீரோக்கள்: கிரவுட் ஃபண்டிங் மூலம் ஒலிம்பிக் பயணம் - கே.டி.ஜாதவ் வெண்கலம் வென்ற கதை!

"இந்த உலகத்திலேயே நான் மேலானவன். இந்த விளையாட்டில் என்னை மிஞ்ச, உலகின் எந்த மூலையிலும் வேறு யாரும் கிடையாது!" - ஒலிம்பிக்ஸ் தனிநபர் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்லும் ஒவ்வொருவரும் உலகத்தின் கூரையே அதிர்கிற மாதிரி இப்படிக் கூச்சல் போடலாம். ஆமாம்... தங்கம் ஜெயிப்பது அவ்வளவு பெரிய சாதனை!

சின்னஞ்சிறு நாடுகள் கூட தங்கப் பதக்கங்களை அள்ளும்போது, இந்தியாவால் ஏன் சாதிக்க முடியவில்லை? இதற்கான காரணங்களைத் தெரிந்துகொள்ள, நாம் கஷாபா ஜாதவ்வின் வாழ்க்கையைப் படிக்க வேண்டும்.

சுதந்திர இந்தியாவின் முதல் தனிநபர் ஒலிம்பிக்ஸ் பதக்கத்தை வசப்படுத்திய ஒருவரைப் பற்றி விரல்விட்டு எண்ணக்கூடிய இந்தியர்களுக்கு மட்டுமே தெரியும்! அவர், கஷாபா தாதாசாகேப் ஜாதவ் என்கிற கே.டி.ஜாதவ். 1952 ஹெல்சிங்கி ஒலிம்பிக்ஸில் வெண்கலப் பதக்கம் வென்றவர்.

KF Jadav

மேற்கு மகாராஷ்டிராவின் சதாரா பகுதியைச் சேர்ந்த கோலேஸ்வர் கிராமத்தில் பிறந்தவர் கஷாபா. சாதாரண விவசாயக் குடும்பம். தினமும் காலையில் வயல்வெளி வேலை. பின்னர் பள்ளி, மாலையில் விளையாட்டு எனக் கழிந்த இளம் பருவத்தில், பத்து வயதில் ஒரு மகத்தான திருப்பம் அவருக்கு நிகழ்ந்தது.

அவர் வீடு இருக்கும் அதே தெருவிலேயே ஒரு உடற்பயிற்சிக்கூடம். திடீரென ஒருநாள் வேட்கையோடு அதற்குள் நுழைந்தார் கஷாபா. எங்கு திரும்பினாலும் இளைஞர்கள் பளு தூக்கியபடி, உடற்பயிற்சி செய்தபடி, குத்துச்சண்டை போட்டபடி இருக்க, கஷாபாவுக்கு அந்தச் சூழல் பிடித்துவிட்டது!

அடுத்த ஒரே வருடத்தில் கஷாபா மல்யுத்தம் செய்தார்... பளு தூக்கினார்.... வட்டு எறிந்தார்... நீச்சலில் ஜெயித்தார். வெகுசீக்கிரமே கஷாபா அந்த ஊரில் பிரபலமாகிவிட்டார். உள்ளூரில் இருந்த கங்காராம் கல்லூரியில் படிக்க போனபோது, ஏதாவது ஒன்றில் மட்டுமே கவனம் செலுத்துவது நல்லது என்று அவருக்குத் தோன்ற, மல்யுத்தத்தைத் தேர்வு செய்தார்.

1948 ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்குப் போக கஷாபாவுக்கு ஆசை. ஆனால், ஹாக்கி அணியைத் தவிர, வேறு யாரையும் அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை. விளையாட்டுத் துறை அதிகாரிகள் இப்போது போலவேதான் அப்போதும் இருந்தார்கள். இந்தியர்கள் யாரும் பதக்கம் வாங்கிவிடமாட்டார்கள் என்ற திடமான நம்பிக்கை அவர்களுக்கு! விளையாட்டு வீரர்களைக் குறைவாக அழைத்துக்கொண்டு, அதிகாரிகள் நிறையப் பேர் போனார்கள். ஜாலியாக ஷாப்பிங் செய்தார்கள்... சூதாட்டம் ஆடினார்கள்... கொஞ்சமும் வெட்கமின்றித் திரும்பி வந்தார்கள்!

கோலாப்பூர் மகாராஜாவிடம் போய் கஷாபா உதவி கேட்டார். அந்த ஒலிம்பிக்ஸுக்குப் போக அவர் பணம் கொடுக்க, கஷாபா முதல் தடவையாகப் போட்டியில் கலந்து கொண்டார். ஆனால், மணல் பரப்பில் மல்யுத்தம் பழகிய அவருக்கு ரெடிமேட் தரை விரிப்பு மீது நடத்தப்பட்ட ஒலிம்பிக்ஸ் போட்டி புதிதாக இருக்க, அவருக்குப் பதக்கம் கிடைக்கவில்லை. ஆனாலும் அனுபவமே இல்லாமல் அவரால் ஆறாவது இடத்தைப் பிடிக்க முடிந்தது.

அந்த அனுபவம் 1952 ஒலிம்பிக்ஸில் நிச்சயம் தங்கப் பதக்கம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை அவருக்குக் கொடுத்தது. இம்முறை அவருக்கு ஹெல்சிங்கி போக தேவை பதினோராயிரம் ரூபாய். அப்போது பம்பாய் மாகாண முதல்வராக இருந்த மொரார்ஜி தேசாயைச் சந்தித்து உதவி கேட்க முயன்றார் கஷாபா.

ஆனால், "ஒலிம்பிக்ஸ் முடிஞ்சப்புறம் வந்து பார்க்கச் சொல்லு” என்று உதவியாளர் மூலம் தகவல் சொல்லி அனுப்பி விட்டார் மொரார்ஜி. (பின்னர் கஷாபா பதக்கத்தோடு திரும்பிய போது அவருக்கு முதல் மாலை போட்டது இதே மொரார்ஜிதான்!)
கே.டி.ஜாதவ்

சோகமாக வீடு திரும்பிய கஷாபாவுக்கு ஆறுதல் சொன்னார், அவர் படித்த கங்காராம் கல்லூரியின் முதல்வர் கார்டிகார். தன் வீட்டை அடமானம் வைத்து ஏழாயிரம் ரூபாய் வட்டிக்கு வாங்கித் தந்து, “நீ ஜெயிப்பே! எனக்கு நம்பிக்கை இருக்கு என்று தன் முன்னாள் மாணவனை மனதார வாழ்த்தி அனுப்பினார் கார்டிகார். ஜாதவின் கோச் தனியாகக் கொஞ்சம் கடன் வாங்கி தன் சீடனுக்குக் கொடுத்தார். ஊர் மக்களும் பக்கத்து கிராமங்களைச் சேர்ந்தவர்களும் தங்களால் முடிந்த தொகையைக் கொண்டுவந்து கொடுக்க, அந்த வகையில் மேலும் நான்காயிரம் ரூபாய் சேர்ந்தது. கிட்டத்தட்ட கிரௌட் ஃபண்டிங் உதவியில்தான் ஹெல்சிங்கி பயணித்தார் கஷாபா.

பயிற்சியாளர் கிடையாது. மன உறுதி தரும் வார்த்தைகள் பேச நண்பர்கள் கிடையாது. 57 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவில் ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு பேருடன் மோத வேண்டிய சூழல். ஒரு போட்டிக்கும் அடுத்த போட்டிக்கும் அரை மணி நேர இடைவெளி என்பது கட்டாயம். ஆனால், அந்த ஓய்வைக்கூட அவருக்குக் கொடுக்காமல் ரஷ்யாவின் ரஷித் மம்மத்பெயோவ் என்ற உலகின் நம்பர் 1 வீரருடன் மோத விட்டார்கள். அதில் தோற்றாலும், அடுத்தடுத்த போட்டிகளில் வென்றார். தங்கக் கனவோடு போன அவருக்குக் கிடைத்தது வெண்கலம்தான்!

ஆனாலும், அது சாதனை. ஹீரோக்களுக்காக ஏங்கிய ஒரு நாட்டில் 56 வருடங்கள் கழித்து ஒரு ஹீரோ அவதரித்து விட்டார். மும்பை திரும்பியபோது அவருக்கு பிரமாண்ட வரவேற்பு. சதாராவுக்கு அவர் வந்தபோது சொந்த ஊரான கோலேஸ்வரில் இருந்து 151 மாட்டு வண்டிகளைக் கட்டிக்கொண்டு ஊரே ரயில்வே ஸ்டேஷனுக்குத் திரண்டுவந்து தங்கள் நாயகனை வரவேற்றது.

மூன்று வருஷங்கள் கழித்து மாநில அரசு அவருக்கு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வேலை கொடுத்தது. அதோடு அவரை எல்லோரும் மறந்து விட்டார்கள். கஷாபாவால் மல்யுத்தத்தை மறக்க முடியவில்லை.

"எனக்குப் பயிற்சியாளர் வேலை கொடுங்கள். ஒலிம்பிக்ஸில் தங்கம் வெல்லும் திறமைசாலிகளை உருவாக்குகிறேன் என்று இந்திய விளையாட்டு ஆணையத்துக்குக் கடிதம் எழுதி எழுதி சலித்துப் போனார். காவல் துறையின் நான்கு சுவர்களுக்குள் அவரது திறமை முடங்கிப் போனது. கிட்டத்தட்ட 22 வருடங்கள் வேலை பார்த்து, ரிட்டயராக ஆறுமாதங்கள் இருக்கும்போது உதவி கமிஷனர் ஆனார். பின் ஒரு நாள், சாலை விபத்தில் இறந்து போனார்.

ஒலிம்பிகா நிவாஸ் எனப் பெயரிடப்பட்ட அவரது வீடு இடிந்து கிடக்க, தங்கள் மகன் ரஞ்சித்துக்கு வேலை கேட்டு மாநில அரசிடம் மன்றாடினார் கஷாபாவின் மனைவி. கஷாபா என்ற ஹீரோ புறக்கணிக்கப்பட்டதும், அவரது குடும்பம் நிர்க்கதியாக நிற்பதும் தலைப்புச் செய்திகளாக வரவே, மகாராஷ்டிர அரசு அவர் மகனுக்கு உடனே வேலை கொடுத்தது. கஷாபா பதக்கம் வாங்கி ஐம்பது வருடங்கள் கழித்து, 2002-ல் அவருக்கு அர்ஜுனா விருது கொடுத்தது மத்திய அரசு. பாவம், அதுவரை அந்த விருதுக்குத் தகுதியானவராக அவரை அரசு கருதவில்லை போலும்!

கஷாபா ஜாதவின் சாதனைக்குப் பிறகு 44 ஆண்டுகள் கழித்து 1996-ம் ஆண்டில் லியாண்டர் பயஸ் இந்தியாவுக்காக மீண்டும் ஒரு தனிநபர் ஒலிம்பிக்ஸ் பதக்கம் வாங்கினார். அப்போதுகூட, தரவரிசைப் பட்டியலில் நூறு ரேங்க்கைத் தாண்டியிருந்த இவர் எங்கே ஜெயிக்கப் போகிறார் என்று இந்திய அதிகாரிகளே கேலி செய்தார்கள். ஆனால், அரை இறுதி வரை போய் அப்போதைய நம்பர் ஒன் வீரரான ஆண்ட்ரே அகாஸியிடம் தோற்றாலும், வெண்கலத்துக்கான போட்டியில் பிரேசில் வீரரான பெர்னாண்டோ மெலிகெனியை வீழ்த்தி பதக்கம் வென்றார் பயஸ். அந்த ஒலிம்பிக்ஸில் பயஸ் வீழ்த்திய பலர் அவரை விடச் சிறந்த வீரர்கள். இந்தியாவுக்காக ஆடுகிறோம் என்ற நினைப்புதான் என்னை ஜெயிக்க வைத்தது என்று நெஞ்சு நிமிர்த்தி சொன்னார் பயஸ்.

லியாண்டர் பயஸ்

அதற்கு அடுத்த ஒலிம்பிக்ஸில் கர்ணம் மல்லேஸ்வரியின் கதையும் இதுதான். 2000-த்தில் நடைபெற்ற சிட்னி ஒலிம்பிக்ஸுக்கு இந்திய அதிகாரிகள் அவரைப் பரிசீலிக்கவே இல்லை. "திருமணத்துக்குப் பிறகு மல்லேஸ்வரி அவ்வளவாக சோபிக்கவில்லை. எனவே, இவரைக் கூட்டிப் போவதைவிட குஞ்ஞராணி தேவியை நம்பி கூட்டிப் போகலாம் என்றனர் அதிகாரிகள். கடைசி நேர சாய்ஸாக மல்லேஸ்வரி தேர்வானார். தற்செயலாக இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்கள் பலர் ஏமாற்றியபோது, சடாரென 240 கிலோ தூக்கி வெண்கலம் வென்ற ஒரே ஆள் அவர்தான். ஒரு இந்தியப் பெண் பெற்ற முதல் ஒலிம்பிக்ஸ் பதக்கம் அதுதான்.

நிராகரிக்கப்படுகிறவர்களிலிருந்துதான் சாதனையாளர்கள் உருவாக வேண்டும் என்பது இந்தியாவின் தலையெழுத்து போலிருக்கிறது!

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.