Puja Khedkar: அ முதல் ஃ வரை அனைத்திலும் மோசடி - பூஜா கேட்கர் எனும் போலி ஐ.ஏ.எஸ்-ஸின் கதை!

அஸ்திவாரத்திலிருந்து ஒரு கல்லை உருவியதும் மொத்தக் கட்டடமும் சரிந்து விழுவதைப் போல பூஜா கேட்கர் விவகாரத்தால் இந்தியாவின் உயர் பொறுப்பான ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் தேர்வு முறை மீதான நம்பகத்தன்மை சரிந்து விழுந்திருக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலம் பூனாவில் பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்த பூஜா, ஒருவேளை தனக்கு சொந்தமான சொகுசு ஆடி காரில் சைரன் பொருத்தி வலம் வந்திருக்காவிட்டால், தனக்கு தனி அலுவலகமும் பணியாளர்களும் வேண்டும் என்று கலெக்டரிடம் சண்டை போட்டிருக்காவிட்டால், துணை கலெக்டரின் அலுவலகத்தை ஆக்கிரமித்து தன் அலுவலகமாக மாற்றியிருக்காவிட்டால், இந்த உண்மைகள் எதுவுமே வெளிவந்திருக்காது. அவர் அந்த அதிகாரப் பதவியில் தொடர்ந்து இருந்திருப்பார்.

ஐ.ஏ.எஸ்

ஐ.ஏ.எஸ் அதிகாரி என்று போலி அடையாள அட்டையை உருவாக்கி மோசடி செய்து பிடிபடும் நபர்கள் பலரைப் பார்த்திருக்கிறோம். ஆனால், இந்தியாவின் மிகக்கடுமையான தேர்வுமுறையாகக் கருதப்படும் யு.பி.எஸ்.சி தேர்வையே போலியான பல ஆவணங்களை உருவாக்கி வளைத்து உள்ளே நுழைந்து ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆகிவிட முடியும் என்று காட்டியிருக்கிறார் பூஜா. பல லட்சம் பேர் தங்கள் இளமையையே தொலைத்து ஐ.ஏ.எஸ் கனவுடன் உருகிக்கொண்டிருக்க, அதிகார வெறி மிகுந்த ஒரு குடும்பம் நினைத்தால் தங்கள் வாரிசை ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆக்கிவிட முடியும் அளவுக்கு இந்த அமைப்பு பலவீனமாக இருக்கிறது என்பதையும் அவர் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார்.  

இப்படியெல்லாம் யாராவது செய்ய முடியுமா என்று யோசிக்கக்கூட முடியாத அளவுக்கான மோசடிகளை பூஜா செய்திருக்கிறார். தினம் தினம் வெளியாகும் தகவல்கள் மலைக்க வைக்கின்றன. சிவில் சர்வீஸ் தேர்வை பொதுப்பிரிவைச் சேர்ந்த ஒருவர் 32 வயது வரை அதிகபட்சம் 6 முறை எழுத முடியும். ஓ.பி.சி பிரிவினர் 35 வயது வரையும், மாற்றுத்திறனாளிகள் 42 வயது வரையும் 9 முறை எழுத முடியும். எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினர் 37 வயது வரை எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால், பூஜா 12 முறை தேர்வு எழுதியிருக்கிறார். கேட்கர் பூஜா திலீப்ராவ், பூஜா மனோரமா திலீப் கேட்கர் என்று இரு வெவ்வேறு பெயர்களில் அவர் தேர்வு எழுதியிருக்கிறார். ஒவ்வொரு பெயருக்கும் தனித்தனியாக முகவரி, கையெழுத்து, இமெயில், சாதிச் சான்றிதழ் என்று எல்லாவற்றையும் உருவாக்கியிருக்கிறார். அப்பா பெயரையும் அம்மா பெயரையுமே மாற்றியிருக்கிறார். இட ஒதுக்கீடு சலுகையைப் பெறுவதற்காக பொய்யான மாற்றுத்திறனாளி சான்றிதழையும் வாங்கியிருக்கிறார்.

பூஜா கேட்கர்
32 வயது பூஜா கேட்கர் செய்த மோசடிகள் குறித்து விசாரணை நடத்த மத்திய அரசு ஒரு நபர் கமிட்டி ஒன்றை அமைத்துள்ளது. இந்த விசாரணை ஒரு பக்கம் நடக்க, பூஜா மீது கிரிமினல் வழக்கையும் மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் பதிவு செய்துள்ளது. `உங்களை ஏன் ஐ.ஏ.எஸ் பயிற்சி அதிகாரி பொறுப்பிலிருந்து நீக்கக்கூடாது? என்று நோட்டீஸும் அனுப்பியுள்ளது. விசாரணையின் முடிவில் அவரது தேர்வு ரத்து செய்யப்படலாம். அதை எதிர்த்து அவர் நீதிமன்றம் போகவும் வாய்ப்பிருக்கிறது.

2022-ம் ஆண்டின் சிவில் சர்வீஸ் தேர்வில் பூஜா 821-வது ரேங்க் வாங்கியிருந்தார். இவ்வளவு கடைசியில் ரேங்க் வாங்குபவர்களுக்கு வழக்கமாக ஐ.ஏ.எஸ் பணி ஒதுக்கீடு கிடைக்காது. ஆனால், பூஜா இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மாற்றுத் திறனாளி என்று இரட்டைப் பிரிவுகளிலும் ஒதுக்கீடு பெற்றதால் ஐ.ஏ.எஸ் ஆனார். ஆனால், இந்த இரண்டு பிரிவுகளிலுமே ஒதுக்கீடு பெறுவதற்கு அவர் தகுதியற்றவர்.

கடந்த 1995-ம் ஆண்டு முதல் மத்திய அரசுப் பணிகளில் 27% இட ஒதுக்கீடு இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆனால், இதில் பொருளாதார அளவுகோல் உண்டு. இந்த இட ஒதுக்கீடு சலுகையைப் பெற வேண்டும் என்றால், குடும்பத்தின் ஆண்டு வருமானம் 8 லட்ச ரூபாய்க்குள் இருக்க வேண்டும். பூஜா தன்னுடைய குடும்பத்தின் ஆண்டு வருமானம் 8 லட்ச ரூபாய்க்குள் இருப்பதாக வருமானச் சான்றிதழ் ஒன்றை முறைப்படி அரசிடம் பெற்று சமர்ப்பித்து இருக்கிறார்.

Pooja | பூஜா கேட்கர்

அதன் அடிப்படையில் கோட்டா ஒதுக்கீடு பெற்றிருக்கிறார்.  
ஆனால், அது போலியான சான்றிதழ். சிவில் சர்வீஸ் தேர்ச்சி பெற்று முசௌரி லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடமியில் சேரும்போது, ஒவ்வொரு பயிற்சி அதிகாரியும் தனது சொத்து விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்பது விதி. அப்போது பூஜா தனக்கு 22 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துகள் இருப்பதாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார். பூஜாவின் தந்தை திலீப் கேட்கர் மகாராஷ்டிரா அரசுப்பணியில் இருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி. தனது பணிக்காலத்தில் இரண்டு முறை ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக இடைநீக்கம் செய்யப்பட்டவர். மகாராஷ்டிரா மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரியாக இருந்து ஓய்வுபெற்றிருக்கும் அவர், சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அகமது நகர் தொகுதியில் போட்டியிட்டார். பிரகாஷ் அம்பேத்கரின் வஞ்சித் பகுஜன் ஆகாதி கூட்டணி சார்பில் வேட்பாளராகப் போட்டியிட்டபோது, தனது சொத்து மதிப்பு 40 கோடி ரூபாய் என்று தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.  

பூஜாவின் அம்மா மனோரமா கேட்கர், அவர்களது பூர்விக கிராமத்தில் பஞ்சாயத்துத் தலைவியாக இருந்தவர். அங்கு ஏராளமான நிலங்கள் அவர்கள் குடும்பத்துக்குச் சொந்தம். பூனாவிலும் பல வீடுகள் அவர்கள் குடும்பத்துக்கு உள்ளன. நிலத்தகராறு ஒன்றுக்காக தங்கள் கிராமத்தில் விவசாயிகள் சிலரைத் துப்பாக்கியைக் காட்டி அவர் மிரட்டிய வீடியோ காட்சி ஒன்று சமீபத்தில் வெளியானது. இதன் அடிப்படையில் போலீஸ் அவரைக் கைது செய்துள்ளது. அவர்களது நெருங்கிய உறவினர்கள் சிலர் பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சிகளில் முக்கியப் பொறுப்புகளில் உள்ளனர். இப்படிப்பட்ட செல்வாக்கான குடும்பத்தைச் சேர்ந்த பூஜா, தான் பொருளாதார வசதி இல்லாதவர் என்று போலி சான்றிதழ் கொடுத்து இட ஒதுக்கீடு பெற்றுள்ளார்.  

மனோரமா

சிவில் சர்வீஸ் தேர்வுகளில் கடந்த 2006-ம் ஆண்டு முதல் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. பொதுப்பிரிவு, இதர பிற்படுத்தப்பட்டோர், எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவு என்று எல்லா பிரிவுகளிலும் மூன்று சதவிகித இடங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கப்படுகின்றன. இவற்றில் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் மாற்றுத்திறனாளி இட ஒதுக்கீட்டில் பூஜா கேட்கர் சலுகை பெற்றுள்ளார். பூனா மருத்துவமனை ஒன்றில் அவர் பெற்றுள்ள சான்றிதழின்படி, அவரது இடது கால் மூட்டுப் பகுதி இயங்குவதில் கோளாறு இருக்கிறது. ஆனால், அந்த பாதிப்பு வெறும் 7% மட்டுமே என்று மருத்துவச் சான்றிதழ் குறிப்பிடுகிறது. உடல்ரீதியான பாதிப்பு 40% என்ற அளவுக்கு மேல் இருந்தால் மட்டுமே மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு பெற முடியும். ஆனால், வெறும் 7% பாதிப்பு மட்டுமே இருந்தாலும் பூஜா கேட்கர் தன்னை மாற்றுத்திறனாளி என்று காட்டி ஐ.ஏ.எஸ் பதவியைப் பெற்றிருக்கிறார்.

பொதுவாக மாற்றுத்திறனாளி சான்றிதழ் பெறுவதற்கு ஆதார் அட்டை கட்டாயம். ஆனால், பூஜா கேட்கர் தனது ஆதார் அட்டையைக் காண்பிக்காமல், ரேஷன் கார்டை ஆதாரமாகக் காட்டி மாற்றுத்திறனாளி சான்றிதழ் பெற்றிருக்கிறார். அந்த ரேஷன் கார்டும் போலி என்று இப்போது கண்டறியப்பட்டுள்ளது. புனே அருகிலுள்ள தால்வடே என்ற பகுதியில் ஒரு முகவரியைக் கொடுத்து அவர் ரேஷன் கார்டு வாங்கியிருந்தார். ஆனால், அந்த முகவரியில் வீடு எதுவும் இல்லை. Thermoverita Engineering Private Limited என்ற நிறுவனத்தின் முகவரி அது. அந்த நிறுவனமும் சொத்து வரி பாக்கி வைத்திருந்ததால் நகராட்சியால் சீல் வைக்கப்பட்டிருந்தது. சாமர்த்தியமாக அந்த முகவரியில் அவர் ரேஷன் கார்டு வாங்கி வைத்திருந்தார்.
பூஜா மற்றும் அவரது கார்

பூஜா கேட்கரின் தகிடுதத்தங்கள் இத்துடன் முடியவில்லை. மாற்றுத்திறனாளி சான்றிதழ் பெற்று இட ஒதுக்கீடு கோரும் சிவில் சர்வீஸ் வெற்றியாளர்கள் எல்லோரையுமே டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் மருத்துவக் குழு ஒன்று மதிப்பிடும். அவர்களின் உடல்நல பாதிப்பு உண்மைதானா என்று இந்த சோதனையில் அளவிடப்படும். 2022-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட பூஜா கேட்கர், அந்த ஆண்டு ஏப்ரலில் தனக்கான சோதனைக்கு ஆஜராக மறுத்துவிட்டார். கொரோனா தொற்று தீவிரமாக இருப்பதால் தனக்கான பரிசோதனையைத் தள்ளி வைக்க வேண்டும் என்று கோரினார். எய்ம்ஸ் குழுவினர் பலமுறை தொடர்புகொண்டும் அவர் அங்கு செல்ல மறுத்துவிட்டார். அதற்கு பதிலாக தனியார் மருத்துவமனை ஒன்றில் எடுக்கப்பட்ட எம்.ஆர்.ஐ பரிசோதனை ரிப்போர்ட்டை எய்ம்ஸ் மருத்துவமனையில் கொடுத்தார்.

இதற்குமுன்பே பூஜா தனக்குப் பார்வைக் குறைபாடு இருப்பதாகவும், மனநல பாதிப்பு இருப்பதாகவும் மகாராஷ்டிராவின் அகமது நகர் மாவட்ட அரசு மருத்துவமனையில் சான்றிதழ்கள் வாங்கிக் கொடுத்திருந்ததாகவும், அவற்றை மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு எய்ம்ஸ் மருத்துவக் குழு நிராகரித்துவிட்டதாகவும் இப்போது தகவல்கள் வெளியாகின்றன.    

அரசின் நலத்திட்டங்களையும் கொள்கை முடிவுகளையும் நடைமுறைப்படுத்தும் பொறுப்பில் இருப்பவர்கள் சிவில் சர்வீஸ் அதிகாரிகள்தான். அவர்களுக்குக் கொடுக்கப்படும் அதிகாரங்களும் அதிகம். அதனால்தான் இவர்களைத் தேர்வு செய்வதற்குக் கடுமையான நடைமுறை பின்பற்றப்படுகிறது. சிவில் சர்வீஸில் தேர்வாகி வந்தபிறகும் அவர்களின் பின்னணியை மத்திய அரசின் இன்டலிஜென்ஸ் பீரோ தொடங்கி உள்ளூர் போலீஸ் வரை ஆராயும். அவர்கள் தரும் ஆவணங்களும் சான்றிதழ்களும் பல கட்ட பரிசோதனைகளுக்கு உள்ளாகும்.
இத்தனை நடைமுறைகளையும் ஏமாற்றி, போலி சான்றிதழ்களைக் கொடுத்து பூஜா கேட்கரால் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆக முடிந்தது எப்படி? ஒட்டுமொத்த சிஸ்டமே சீர்கெட்டுப் போயிருக்கிறதா என்று முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பலர் கேட்கிறார்கள்.

பூஜா கேட்கர்

பூஜா கேட்கர் விவகாரத்தைத் தொடர்ந்து இப்படி தவறான சான்றிதழ்கள் மூலம் பலர் இட ஒதுக்கீடு சலுகைகளைப் பெற்று சிவில் சர்வீஸ் அதிகாரிகளாக நுழைந்திருப்பதாக செய்திகள் வெளியாகின்றன. சரியாக இந்த நேரத்தில், யு.பி.எஸ்.சி தலைவராக இருந்த மனோஜ் சோனி ராஜினாமா செய்திருக்கிறார். கடந்த ஆண்டு மே மாதம்தான் அவர் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். குஜராத்தைச் சேர்ந்த அவர், 2029 வரை இந்தப் பதவியில் நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால், ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாகவே அவர் ராஜினாமா செய்தது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

நீட், சிவில் சர்வீஸ் என்று எல்லாத் தேர்வுமுறைகளும் நம்பகத்தன்மை இழப்பது ஆரோக்கியமானது அல்ல! செல்வாக்கும் பணமும் இருப்பவர்கள் நினைத்தால் குறுக்குவழியில் எதையும் அடைந்துவிட முடியும் என்ற சூழல் மாறியாக வேண்டும். அதுவே இளைய தலைமுறைக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.