ஆம்ஸ்ட்ராங் கொலை: பொன்னை பாலு, அருளிடம் கிடுக்கிப்பிடி விசாரணை; சிக்கிய பிரபல ரௌடி- விசாரணை அப்டேட்!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி கொலைசெய்யப்பட்டார். இந்த வழக்கில் கூலிப்படைத் தலைவன் ஆற்காடு சுரேஷின் தம்பியான பொன்னை பாலு, அவரின் மைத்துனர் வழக்கறிஞர் அருள், வழக்கறிஞர் ஹரிகரன் உட்பட 15 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அதில் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தபோது ரௌடி திருவேங்கடம், தப்பிச் செல்ல முயன்றபோது என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். வழக்கறிஞர் அருளிடம் நடத்திய விசாரணை அடிப்படையில் தோட்டம் சேகரின் மனைவி வழக்கறிஞர் மலர்கொடி மற்றும் ஆற்காடு சுரேஷின் தோழி பெண் தாதா அஞ்சலை ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். அடுத்து அ.தி.மு.க-விலிருந்த கவுன்சிலர் ஹரிதரன் கைதுசெய்யப்பட்டார். அவர் அளித்த தகவலின்படி திருவள்ளூர் வெங்கத்தூரில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் வீசப்பட்ட கொலையாளிகளின் செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் பொன்னை பாலு, வழக்கறிஞர்கள் அருள், ஹரிகரன் உள்ளிட்டோரை மீண்டும் போலீஸ் காவலில் எடுக்க செம்பியம் போலீஸார் எழும்பூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதனவர்கள்

இதையடுத்து பொன்னை பாலு உள்ளிட்டோரை புதுப்பேட்டையில் உள்ள ஆயுதப்படை குடியிருப்பில் வைத்து இன்று தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில் ஆம்ஸ்ட்ராங் கொலைக்குப் பின்னணியில் இன்னும் யார், யார் இருக்கிறார்கள், எவ்வளவு பணம் கைமாறியது என்று போலீஸார் கேள்விகளைக் கேட்டு துளைத்தெடுத்தார்கள். அதற்கு பொன்னை பாலு, வழக்கறிஞர் அருள் ஆகியோர், ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிக்குப் பழிவாங்கத்தான் ஆம்ஸ்ட்ராங்கை தீர்த்துக் கட்டினோம் என்று தங்களின் பழைய டயலாக்கை கூறியுள்ளனர். அதைக் கேட்டு கடுப்பான தனிப்படை போலீஸார், எங்களுக்கு எல்லாம் தெரியும், இந்தக் கொலைக்குப் பின்னணியில் மிகப்பெரியளவில் நெட்வொர்க் ஒன்று செயல்பட்டிருக்கிறது. அதற்கான ஆதாரங்களையும் தடயங்களையும் சேகரித்துக் கொண்டிருக்கிறோம் என்று கூறியிருக்கிறார்கள். இதையடுத்து வழக்கறிஞர் ஹரிகரனிடம், பிரபல ரௌடி சம்பவ செந்தில் குறித்த கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. அதற்கு நானும் அவரும் வழக்கறிஞர் என்று ஹரிகரன் பதிலளித்ததாகத் தெரிகிறது இதற்கிடையில் போலீஸாரிடம் சிக்காமல் தலைமறைவாகவே சில ஆண்டுகளாக இருக்கும் சம்பவ செந்தில் பதுங்கியிருக்கும் இடம் குறித்த தகவல் தனிப்படை போலீஸாருக்கு கிடைத்திருக்கிறது. அதனால் அவரை இன்னும் சில தினங்களில் தனிப்படை போலீஸார் பிடித்து விடுவார்கள் என சென்னை போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதுகுறித்து தனிப்படை போலீஸாரிடம் பேசினோம். ``ரௌடி திருவேங்கடத்தின் என்கவுன்ட்டர் சம்பவத்துக்குப் பிறகு மற்றவர்கள் பீதியிலிருக்கிறார்கள். அதனால்தான் போலீஸ் காவலில் எடுக்க மனு தாக்கல் செய்ததும் அதற்கு பொன்னை பாலு, வழக்கறிஞர்கள் அருள், ஹரிகரன் ஆகியோர் கடும் ஆட்சேபனையை நீதிமன்றத்தில் தெரிவித்தனர். ஆனாலும் இந்த வழக்கின் விசாரணைக்காக நீதிமன்றம் அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்தது. கடந்த தடவை ரௌடி திருவேங்கடம் தப்பிச் செல்ல முயன்றபோது என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். அதைப் போல இந்தத் தடவையும் நடக்காமலிருக்க மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகிறோம். இந்த வழக்கில் ஆற்காடு சுரேஷ் கொலையைத் தாண்டி இன்னும் சில காரணங்கள் பின்னணியிலிருக்கின்றன. அந்தக் கோணத்தில்தான் எங்களின் விசாரணை சென்றுக் கொண்டிருக்கிறது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு

உளவுத்துறை எச்சரிக்கையின்படி ஆம்ஸ்ட்ராங் கொலைக்குப் பழிக்குப்பழியாக இன்னொரு அசம்பாவித சம்பவம் நடைபெறாமலிருக்க கூடுதல் கவனத்துடன் செயல்பட்டு வருகிறோம். ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்களாக இருக்கும் பிரபல ரௌடி ஒருவர் உட்பட சிலர் எங்களின் கண்காணிப்பு வளையத்திலிருந்து வருகிறார்கள். ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடைய இரண்டு பிரபல ரௌடிகளில் ஒருவர் (சீசிங் ராஜா) எங்களிடம் சிக்கிக் கொண்டார். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு ஸ்கெட்ச் போட்டது முதல் அவரைக் கொலை செய்துவிட்டு தப்பியது வரை என அனைத்து தகவல்களையும் அவர் கூறியுள்ளார். அதனால் இந்தக் கொலைக்குப் பின்னணியிலிருப்பவர்கள் குறித்த முழு தகவல்களை சேகரித்து வருகிறோம். அதனால் ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடைய அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள்" என்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.