`கம்பராமாயணத்தில் ராமனும், தமிழகத்தில் ஸ்டாலினும் நடத்தும் ஆட்சி ஒன்றுதான்! - சொல்கிறார் ரகுபதி

புதுக்கோட்டை நகர மன்ற வளாகத்தில் நடைபெற்ற கம்பன் கழகத்தின் விழாவில் பங்கேற்ற தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

"கம்பராமாயணத்தில் ராமனை பற்றி சொல்லி இருக்கக்கூடிய கருத்துகள் திராவிட மாடல் ஆட்சியை ஒட்டிய கருத்துகள். திராவிட மாடல் கொள்கையில் கம்பன் எந்த அளவுக்கு ஈடுபட்டிருந்தார்... உடன்பட்டு இருந்தார்... சமரசப்பட்டு இருந்தார் என்பதைத்தான் நான் குறிப்பிட்டேன். சமத்துவம், சமூகநீதி என்பது எல்லோருக்கும் எல்லாம். இதுதான் திராவிட மாடல் ஆட்சி. குகனோடு சேர்ந்து ஐவரானம் சுக்கிரனோடு சேர்ந்து அறுவர் ஆனோம். விபீஷனனோடு சேர்ந்து ஏழ்வரானோம் என்று எல்லோரையும் தன்னுடன் இணைத்துக் கொள்கின்ற அந்த சகோதரத்துவதோடு நாங்கள் எல்லாம் தசரதனின் குழந்தைகள் என்று சொல்கின்ற பொழுது அனைவரையுமே தனது சகோதரர்களாக ஏற்றுக் கொண்டிருக்கின்ற அந்தப் பக்குவம்... அதுதான் திராவிட மாடல் ஆட்சி. அதைத்தான் நாங்கள் முன்னிறுத்தி இருக்கின்றோம். அயோத்திக்கு வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நான் செல்வேன். நான் அனைத்து கோயிலுக்கும் செல்பவன்தான். அயோத்திக்கும் சென்று பார்க்கத்தான் வேண்டும். அயோத்தியில் இருப்பது பால ராமர் தான். நலத்திட்ட உதவிகளுக்காக மற்ற மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு என்ன நிதி ஒதுக்கியுள்ளது, தமிழ்நாட்டிற்கு என்ன நிதி ஒதுக்கி உள்ளது என்பதை அண்ணாமலை கூற வேண்டும். ரூ.10,700 கோடி தமிழ்நாட்டிற்கு கொடுத்திருக்கிறார்கள் என்றால், உத்தரப்பிரதேசத்திற்கும், மத்தியப் பிரதேசத்திற்கும், ராஜஸ்தானிற்கும், பஞ்சாப்புக்கும் எவ்வளவு கொடுத்திருக்கின்றார்கள் என்றம் , அனைத்தும் மாநிலத்திற்கும் எவ்வளவு கொடுத்திருக்கிறார்கள் என்பதையும் சொல்ல வேண்டும். இது வழக்கமாக கொடுக்கக்கூடிய தொகை தானே தவிர, தமிழ்நாட்டிற்கென்று கூடுதலாக எந்தத் தொகையும் ஒன்றிய அரசு தந்ததாக தெரியவில்லை. எடப்பாடி பழனிசாமி உண்மையான குற்றவாளிகளை பிடிக்கவில்லை என்று தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார். அதனால் தான் உண்மையான குற்றவாளி அவருக்கு தெரிந்திருக்கும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தான் அவருக்கு குற்றவாளி தெரிந்திருந்தால் சொல்லட்டும் என்ற அடிப்படையில் நான் தெரிவித்திருந்தேன். உண்மையான குற்றவாளிகள் பிடிக்கப்படவில்லை என்று அவர் கூறுகிறார். நாங்கள் ஆதாரத்துடன் தற்போது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை பிடித்துள்ளோம். வீடியோ ஆதாரம் வெளியிட்டுள்ளோம். இதற்குப் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை சி.பி.சி.ஐ.டி புலனாய்வு செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். என்னுடைய தகுதியைப் பற்றி பேசுவதற்கு எடப்பாடிக்கு எந்த தகுதியும் கிடையாது.

அமைச்சர் ரகுபதி

எனக்கு எல்லா தகுதியையும் எங்களுடைய தலைவர் முதலமைச்சர் தந்துள்ளார். அந்த தகுதி அடிப்படையில் தான் நான் பேசுகிறேனே தவிர, என்னுடைய தகுதியை பற்றி கூறுவதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு எந்த அருகதையும் கிடையாது. ஒன்றிய அரசு வேலையில் இருப்பவர்கள் ஆர்.எஸ்.எஸ்-ஸில் சேரலாம் என்ற ஒன்றிய அரசின் அனுமதி குறித்து கேட்கிறீர்கள். அவர்கள் ஆர்.எஸ்.எஸ்-ஸிலும் சேர்ப்பார்கள்...பா.ஜ.க-விலும் சேர்ப்பார்கள். எதில் வேண்டுமானாலும் சேர்ப்பார்கள். ஏனென்றால், எல்லாமே அவர்கள் கையில் இருக்கிறது. இதற்கு மக்கள் நிச்சயம் ஒரு முடிவு கட்டுவார்கள். செந்தில் பாலாஜி ஓர் ஆண்டு காலமாக சிறையில் இருக்கிறார். ஏற்கனவே, அவருக்கு பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டுள்ளது.

அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதில் எந்த தவறும் கிடையாது. சிறையில் அவரை நன்றாகத்தான் பார்த்துக் கொண்டு வந்தோம். நல்ல நிலைமையில் அவர் இருப்பார். அவருக்கு சிகிச்சைகள் தேவைப்பட்டால் மருத்துவமனையில் கொடுத்துதான் ஆக வேண்டும். அதனால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

செந்தில் பாலாஜி

தி.மு.க தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டது என்பதற்கு ஒருங்கிணைப்பு குழு அமைத்தது ஒரு அடையாளமாக உள்ளது. கட்சியினரை உற்சாகப்படுத்துவதற்கும், ஒருங்கிணைப்பதற்காகவும் தான். எந்தவித பிளவும் வந்து விடக் கூடாது. இங்க இருக்கக்கூடிய அனைவரையும் ஒருங்கிணைத்து அவர்களுக்குள் எந்த சண்டை சச்சரவுகளும் போட்டி, பொறாமைகளும் இல்லாமல் தங்களது வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும் என்ற 2026 இலக்கைக் குறிவைத்து தற்போது தி.மு.க பாயத் தொடங்கிவிட்டது. தேர்தலில் நாங்கள் தனி மெஜாரிட்டி பெறுவோம். தனியாக ஆட்சி அமைப்போம். எங்களது தோழமைக் கட்சிகளையும் அரவணைத்து செல்வோம். அவர்களுக்கு வேண்டியதை தருவோம். அதாவது, வேண்டிய இடங்களை கொடுப்போம். எங்களைப் பொறுத்தவரை எங்களது தலைவரின் உழைப்புக்கு அவர் முதலமைச்சராக இருந்து ஆற்றி இருக்கக்கூடிய பணிகளுக்கு தனி மெஜாரிட்டி தி.மு.க-வுக்கு கிடைக்கும். யாருடைய தயவிலும் ஆட்சி அமைக்கக்கூடிய சூழ்நிலை எங்களுக்கு ஏற்படாது. நிச்சயமாக துணை முதல்வர் பதவி என்பது தி.மு.க-வில் இருக்கக்கூடிய அனைவருமே உதயநிதி ஸ்டாலினுக்குத்தான் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கையை தொடர்ந்து வைத்து வருகிறார்கள். கட்சிக்காரர்கள் தங்களது கோரிக்கைகளை சொல்வதில் எந்த தவறும் கிடையாது." என்றார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.