சென்னை: காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி; ஆன்லைனில் ஆர்டர் செய்து பழிவாங்கிய சிறுவன் - என்ன நடந்தது?

சென்னை கிழக்கு மண்டல சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் சென்னையச் சேர்ந்த ஒருவர் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், `என்னுடைய மகளின் செல்போன் நம்பருக்கு அடிக்கடி தொடர்பு கொண்டு இளைஞர் ஒருவர் தொல்லைக் கொடுக்கிறார். மேலும் அந்த நபர், என் மகளின் அனுமதியில்லாமல் ஆன்லைனில் பொருள்களை எங்கள் வீட்டின் முகவரிக்கு ஆர்டர் செய்து மனஉளைச்சலை ஏற்படுத்துகிறார் என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் இளம்பெண்ணுக்கு தொல்லைக் கொடுத்த இளைஞர் குறித்து சைபர் க்ரைம் போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் அவர் 17 வயது சிறுவன் எனத் தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்து இரண்டு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு சிறுவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் போலீஸார் சேர்த்தனர். சிறுவனிடம் விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

காதல் டார்ச்சர்

இது குறித்து சைபர் க்ரைம் போலீஸார் கூறுகையில், ``நடிகர் சிம்பு, நயன்தாரா நடித்து வெளியான வல்லவன் திரைப்படத்தில், நடிகர் சிம்பு தன்னைவிட வயது அதிகமான நடிகை நயன்தாராவை காதலிப்பதாக காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கும். அதே பாணியில்தான் இந்தச் சம்பவமும் நடந்திருக்கிறது. தொந்தரவுக்குள்ளான 21 வயதான இளம்பெண், கல்லூரியில் படித்து வருகிறார். அவரிடம் டியூசன் படிக்க அந்த 17 வயது சிறுவன் சென்றுள்ளான். அப்போது வயது வித்தியாசம் அதிகமிருந்தாலும் மாணவி மீது சிறுவனுக்கு காதல் ஏற்பட்டுள்ளது. இந்தக் காதலை மாணவியிடம் சிறுவன் கூறியபோது அவனைக் கண்டித்ததோடு அறிவுரையும் கூறியிருக்கிறார் அந்த மாணவி. ஆனாலும் சிறுவன் தன்னுடைய எண்ணத்தை மாற்றிக் கொள்ளவில்லை.

மாணவியின் மீதான காதலை மறக்க முடியாத சிறுவன், தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறார். அப்போது அவனை குடும்பத்தினர் காப்பாற்றியுள்ளனர். இதன்பிறகு மாணவியை செல்போனில் தொடர்பு கொண்டு பேச முயன்றுள்ளார். ஆனால் மாணவியோ, போனை எடுத்து பேசவில்லை. அதனால் ஆத்திரமடைந்த சிறுவன், மாணவியை நூதன முறையில் பழிவாங்க பிளான் போட்டிருக்கிறார். இதற்காக மாணவியின் முகவரிக்கு உணவு மற்றும் கிஃப்ட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்து அனுப்பி வைத்திருக்கிறார். அதனால் மாணவியின் வீட்டுக்கு ஆன்லைனில் ஆர்டர் செய்த பொருள்கள், உணவுகளை கொடுக்க வந்த ஊழியர்களிடம் நான் ஆர்டரே செய்யவில்லை என்று மாணவி கூறி அதை வாங்காமல் திரும்ப அனுப்பி வைத்திருக்கிறார். இதில் மாணவியின் குடும்பத்தினருக்கும் ஆன்லைன் டெலிவரி ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதமும் ஏற்பட்டுள்ளது. அதை சிறுவன் வேடிக்கை பார்த்து வந்திருக்கிறார்.

லவ் டார்ச்சர் (சித்திரிப்புப் படம்)

இதையடுத்து மாணவியின் குடும்பத்தினர், யார் இப்படி ஆர்டர் செய்கிறார்கள் என்பதை விசாரித்தபோது சிறுவன் என்று தெரியவந்தது. ஆன்லைனில் உணவு, கிஃப்ட் மட்டுமல்லாமல் பைக் டாக்ஸியையும் புக் செய்து மாணவியின் குடும்பத்தினருக்கு தொல்லைக் கொடுத்திருக்கிறான் சிறுவன். அதை பொறுக்க முடியாத மாணவியின் பெற்றோர் எங்களிடம் புகாரளித்தனர். அதன்பேரில்தான் அந்தச் சிறுவனைப் பிடித்து விசாரித்தோம். அப்போது அவனின் ஐ.பி அட்ரஸ், செல்போன் நம்பரிலிருந்துதான் இந்த ஆர்டர்கள், முன்பதிவுகள் சென்றிருப்பது ஆதாரங்களுடன் கிடைத்தன. அப்போது சிறுவனுக்கு நாங்களும் கவுன்சலிங் அளித்தோம். ஆனால் சிறுவனோ, மாணவியின் மீதான காதல் மயக்கத்திலிருந்ததோடு அவரையும் மாணவியின் குடும்பத்தினரையும் பழிவாங்கும் நோக்கத்திலேயே இருந்தார். சிறுவனின் எதிர்காலம் கருதி அவருக்கு தொடர்ந்து கவுன்சலிங் அளிக்கப்பட்டு அவரின் பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளோம்" என்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.