சலூன் கடையில் லைப்ரரி, 3,000 புத்தகங்கள் - எம்.பி முதல் பிரதமர் வரை கவனம் ஈர்த்த பொன்மாரியப்பன்!

டீக்கடைக்கு அடுத்தபடியாக அதிகளவில் அரசியல் பேசப்படும் இடம், சலூன். அந்த அரசியலுக்கு நடுவே புத்தகங்களையும் புகுத்திவருகிறார், தூத்துக்குடி மாவட்டம் மில்லர்புரத்தைச் சேர்ந்த பொன்மாரியப்பன். பல ஆண்டுகளாக சலூன் கடை நடத்தி வரும் இவர், 2014-ம் ஆண்டிலிருந்து தனது கடையில் சிறிய நூலகத்தை உருவாக்கி தன் வாடிக்கையாளர்களுக்கு வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தி வருகிறார்.

தற்போது இவருடைய நூலகத்தில் 3000-க்கும் அதிகமான புத்தகங்கள் உள்ளன. இதோடு, போட்டித் தேர்வுகளுக்காக படிக்கும் மாணவர்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகளுக்காகவும் புத்தகங்களை வைத்துள்ளார். பொன்மாரியப்பனிடம் பேசினோம்.

"ஆரம்பத்துல என்னோட கடையில டிவி, ரேடியா எல்லாம் வெச்சிருந்தேன். கடைக்கு வர்ற எல்லாரும் மொபைல்தான் பயன்படுத்திட்டு இருந்தாங்க.

அவங்கள எல்லாம் மாத்தி புத்தகம் வாசிக்க வைக்கணும் அப்படீனு நினச்சு, நான் வாசிக்கிற புத்தகங்களை கடையில வெச்சேன். அதை வாசிக்க ஆரம்பிச்ச வாடிக்கையாளர்கள் எல்லாரும், ’இந்த ஐடியா நல்லா இருக்கு. தொடர்ந்து இதைப் பண்ணுங்க’ன்னு சொன்னாங்க. அதனால, 150 புத்தகங்களை வெச்சு ஒரு சின்ன லைப்ரரியை கடைக்குள்ள அமைச்சேன். அதுல வரலாறு, இலக்கியம், கவிதை, கட்டுரை புத்தகங்கள் இருந்துச்சு.

பொன்மாரியப்பன்

கடைக்கு வர்ற ஒவ்வொருத்தரும் புத்தகங்களை எடுத்து வாசிக்க ஆரம்பிச்சாங்க. குறிப்பா, மாணவர்கள் வாசிக்க ஆரம்பிச்சாங்க. அவங்க வாசிக்கிறதைப் பார்த்த உத்வேகத்துல புத்தகங்களோட எண்ணிக்கைய மூவாயிரமா அதிகரிச்சேன். எனக்கு ரொம்ப பிடிச்ச எழுத்தாளர்களான எஸ். ராமகிருஷ்ணன், கவிக்கோ அப்துல் ரகுமான், கி. ராஜநாராயணன் உள்ளிட்டோரின் புத்தகங்களை வாங்கி வெச்சிருக்கேன்.

இதுபோக, வாடிக்கையாளர்களும் அன்பளிப்பா புத்தகங்கள் தர ஆரம்பிச்சாங்க. என் கடைக்கு வர்ற ஒவ்வொருத்தரும் வாடிக்கையாளரா வர்றாங்க. ஆனா, திரும்பிப் போகும்போது ஒரு வாசகரா போறாங்க. என்னோட முயற்சியைப் பாராட்டி பிரதமர் நரேந்திர மோடி, மனதின் குரல் நிகழ்ச்சியில என்னைப் பத்தி பேசினாரு. அதுக்கப்புறம், டெல்லியில நடந்த மனதின் குரல் நிகழ்ச்சியோட 100-வது நாள் நிகழ்ச்சிக்கு என்னையும் அழைச்சிருந்தாங்க.

நான் அதுவரை விமானத்துல பயணம் பண்ணுனது இல்ல. அந்த நிகழ்ச்சியில கலந்துக்க முதன்முறையா விமானத்துல பயணம் செஞ்சதை மறக்க முடியாது. 2023-ம் வருஷம் டெல்லியில நடந்த குடியரசு தின விழாவுக்கும் என்னை அழைச்சிருந்தாங்க. இந்த நிகழ்வுகளுக்கு அப்புறம் நிறைய பதிப்பகங்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள் எனக்குப் பாராட்டு தெரிவிச்சதோட மட்டுமில்லாம நிறைய புத்தகங்களையும் என்னோட சலூன் லைப்ரரிக்கு அன்பளிப்பா தர ஆரம்பிச்சாங்க.

அதனால, இப்ப புத்தகங்களோட எண்ணிக்கையும் அதிகமாயிடுச்சு. தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, நூலகத்துக்கே நேரடியா வந்து கலைஞர் கருணாநிதி எழுதின புத்தகங்களை அன்பளிப்பா கொடுத்தாங்க. நடிகர் கமல்ஹாசனும் என்னைப் பாராட்டி லைப்ரரிக்கு புத்தகங்கள் தந்தாரு" என்கிறார் பெருமையுடன்.

நாம் சென்றபோது அங்கு வந்திருந்த குட்டி வாசகரான மூன்றாம் வகுப்பு படிக்கும் சௌமியன், "நான் ரொம்ப நாளா இந்த லைப்ரரிக்கு வந்துட்டு இருக்கேன். இங்க வந்து படங்கள் வரைவேன். எனக்கு புடிச்ச புத்தகத்தை எடுத்து வாசிப்பேன்" என்றார்.

சலூனில் புத்தகம் வாசிக்கும் சிறுவன்

"சலூன் லைப்ரரியில ஒரு மைக் வாங்கி வெச்சிருக்கேன். பள்ளிக்கூடம் படிக்கும்போது மேடையில ஏறி மைக்ல பேசணும்னா சிலருக்கு தயக்கமாவும் கூச்சமாவும் இருக்கும். அப்படி கூச்சப்பட்டதால நானும் நிறைய வாய்ப்புகளை இழந்துருக்கேன். என் லைப்ரரிக்கு வர்ற மாணவர்கள் மைக் மேல இருக்குற பயத்தைவிட்டு வெளிய வரணும்னுதான் மைக் வாங்கி வெச்சேன். அதுல பேசி பழகுற மாணவர்கள், அண்ணே... இன்னைக்கு எங்க பள்ளிக்கூடத்துல நடந்த பேச்சுப்போட்டியில, நான் பயப்படாம பேசுனேன் அப்படீன்னு என்கிட்ட வந்து சொல்லும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கும்" என்கிறார் புன்னகையுடன்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.