Doctor Vikatan: கோபம், அழுகை, தனிமை, பயம்... மாறும் மனநிலையை சரிசெய்யுமா பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்?
Doctor Vikatan: திடீர் திடீரென மனநிலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு காரணம் என்ன? திடீரென இனம்புரியாத சோகம், தனிமை, பயம் போன்ற உணர்வுகள் வருவது ஏன்? அழுகை வருவது ஏன்? வேறு விஷயங்களில் மனதைத் திருப்ப முடியாமல் தவிக்கிறேன். பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின் எடுத்துக்கொண்டால் இந்தப் பிரச்னை சரியாகும் என்கிறாள் தோழி. அது எந்த அளவுக்கு உண்மை?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் சுபா சார்லஸ்.
மனம் ஒரு குரங்கு என அந்தக் காலத்திலேயே பாடிவிட்டார் கவிஞர் கண்ணதாசன். உண்மையில் அப்படித்தான்....மனம் என்பது குரங்கைப்போல தாவிக்கொண்டே இருக்கும்.
மனமானது திடீரென எதையோ நினைத்து கோபப்படும், திடீரென வருத்தப்படும், திடீரென சந்தோஷப்படும். ஆங்கிலத்தில் மூட் ஸ்விங்ஸ் (mood swings) என்று சொல்லப்படுகிற இந்த நிலை எல்லோருக்கும் இயல்பானதுதான். ஆனால், மனநிலையில் தீவிரமான மாற்றங்கள், தடுமாற்றங்கள் இருக்கக்கூடாது. அதாவது எதிலுமே கவனமின்றி, உணர்வுகள் நொடிக்கொரு முறை மாறிக்கொண்டே இருப்பது சரியானதல்ல.
ஒரு விஷயத்தை யோசித்தோம், அது குறித்து முடிவெடுத்தோம், பிறகு செயல்படுத்தினோம் என்றில்லாமல், எப்போதும் உணர்ச்சிப் பிழம்பாகத் தவிப்பது சரியானதல்ல. சிலர் செய்யும் வேலைகளை, வகிக்கும் பொறுப்புகளைப் பார்த்து, இவர்களால் எப்படி இதெல்லாம் முடிகிறது என்று வியந்து போவோம். அந்தத் திறமையை நாமும் வளர்த்துக்கொள்ள வேண்டுமானால், உணர்வுகளைக் கட்டுப்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும். மனநிலையாது பெண்டுலம் போன்றது. மேலும் கீழுமாக மாறி மாறிச் சுழலும். ஏதோ ஒருநாள் மிகவும் சந்தோஷமாக உணர்ந்தோம் என்றால், நம் உடலானது தானாக தளர்வடைந்து அடுத்து சற்று மந்தமாக உணரவைக்கும். அதுதான் இயல்பும்கூட.

நம்மை உயிர்ப்புடன் வைத்திருப்பதில் நரம்பு மண்டலத்துக்கு மிக முக்கியப் பங்கு உண்டு. நரம்புகளின் செயல்பாட்டுக்கும் ஆரோக்கியத்துக்கும் பி காம்ப்ளெக்ஸ் (B Complex) வைட்டமின் மிக முக்கியம். இந்தச் சத்து குறையும்போது உணர்வுத் தடுமாற்றங்களையும் உணர்வீர்கள். கீரைகள், காய்கறிகள் என ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தைப் பின்பற்றுவோருக்கு இந்தச் சத்துக் குறைபாடு ஏற்படாது. குறைபாடு ஏற்பட்டால், மருத்துவ ஆலோசனையுடன் பி காம்ப்ளெக்ஸ் சப்ளிமென்ட் எடுத்துக்கொள்ளலாம்.
அது மட்டுமன்றி, வைட்டமின் டி (vitamin D) சத்தும் நமக்கு மிக முக்கியம். அது சூரிய வெளிச்சத்திலிருந்து கிடைக்கும். வெயில் பட்டால் இலைகள் எப்படி குளோரோபில் எனப்படும் பச்சையத்தைத் தயாரிக்கின்றனவோ, அதேபோல நம் சருமமும் வைட்டமின் டி சத்தை தயாரிக்கும். தினமும் காலை மற்றும் மாலை வெயில் படும்படி சிறிது நேரம் இருப்பது வைட்டமின் டி சத்து குறையாமல் தடுக்கும். இவை தவிர, மெக்னீசியம் சத்தும் அவசியம். இந்த மூன்றும் குறையாமல் பார்த்துக்கொண்டாலே, உங்களுடைய உணர்வுத் தடுமாற்றங்கள் சரியாகி, நல்ல மனநிலையில் இருப்பீர்கள். உடல்நலமும் மேம்படும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


