Union Budget 2024-25 Live: பட்ஜெட் எதிரொலி... பங்குச் சந்தையில் ஏற்ற, இறக்கம்!
பட்ஜெட் தாக்கல்: நாடாளுமன்றம் வந்தார் நிர்மலா சீதாராமன்
புதிய பட்ஜெட்டுக்கான ஒப்புதலை குடியரசுத் தலைவரிடமிருந்து பெற்றுவிட்டு நாடாளுமன்றம் வந்து சேர்ந்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
அப்போது குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மூ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இனிப்பு ஊட்டி பட்ஜெட்டுக்கான ஒப்புதலை வழங்கினார்.
இன்று 2024-25ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் இன்றைய இந்தியப் பங்குச் சந்தைகள் ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகம் ஆகின்றன. காலை 10 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 80,500 புள்ளிகள் என்ற நிலையிலும், நிஃப்டி 24500 என்ற நிலையிலும் வர்த்தகமாகின்றன.
பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படும் சலுகைகள்...
ஒவ்வோர் ஆண்டும் பட்ஜெட்டில் நிறைய எதிர்பார்ப்புகள் இருந்தாலும், வருமான வரி சார்ந்த அறிவிப்புகள்தான் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக இருக்கும்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க தனிப் பெரும்பான்மை இழந்து கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளது. எனவே, இந்த பட்ஜெட்டில் பாப்புலிஸ்ட் அம்சங்கள் இருக்கும் என்பதே பிரதான எதிர்பார்ப்பு. அதிலும், வருமான வரிச் சலுகைகள்தான் ஹைலைட்டாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய சூழலில் மத்திய பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படும் வருமான வரிச் சலுகைகள்....
நிலைக் கழிவு:
2018-ம் ஆண்டு பட்ஜெட்டில் முதல்முறையாக நிலைக் கழிவு (standard deduction) அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது 40,000 ரூபாய் நிலைக் கழிவு கொண்டுவரப்பட்டது.
2019-ம் ஆண்டு பட்ஜெட்டில் நிலைக் கழிவு 50,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது. அதற்குப் பிறகு நிலைக் கழிவு மாற்றப்படாமலேயே உள்ளது.
எனவே, இந்த பட்ஜெட்டில் நிலைக் கழிவு 60,000 ரூபாய் அல்லது 70,000 ரூபாய் வரை உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.
பிரிவு 80சி:
வருமான வரிச் சட்டம் பிரிவு 80சி (Section 80C) கீழ் ஆண்டுக்கு 1.5 லட்சம் ரூபாய் வரை வருமான வரி சலுகை வழங்கப்படுகிறது. 2014-ம் ஆண்டுக்குப் பின் இந்த 1.5 லட்சம் ரூபாய் வரம்பு உயர்த்தப்படவே இல்லை.
ஆனால், இடைப்பட்ட காலகட்டத்தில் பணவீக்கம் கடுமையாக உயர்ந்துவிட்டது. எனவே, 80சி பிரிவின் கீழ் வழங்கப்படும் 1.5 லட்சம் ரூபாய் வருமான வரி சலுகை மேலும் உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வருமான வரி உச்சவரம்பு:
தற்போது வருமான வரி உச்சவரம்பு 3 லட்சம் ரூபாயாக உள்ளது. வரும் பட்ஜெட்டில், உச்சவரம்பு 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரிச் சலுகை உச்சவரம்பை உயர்த்த வேண்டும் என பல தரப்பினரும் அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
5 லட்சம் ரூபாய் வருமான வரி உச்சவரம்பு அமல்படுத்தப்பட்டால், ஆண்டுக்கு 8.5 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுவோர் வரி செலுத்த வேண்டியதில்லை என்ற நிலை உருவாகும்.
தேசிய ஓய்வூதியத் திட்டம்:
என்.பி.எஸ் (NPS) எனப்படும் தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் பயனாளிகளுக்கு Section 80CCD 1B கீழ் கூடுதலாக 50,000 ரூபாய் வரை வருமான வரிச் சலுகை வழங்கப்படுகிறது. இந்த வரம்பு பட்ஜெட்டில் உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வீட்டு வாடகைப் படி:
நகர்ப்புறங்களில் வீட்டு வாடகை செலவுகள் தாறுமாறாக அதிகரித்து வரும் நிலையில், வீட்டு வாடகைப் படித் தொகைக்கு (HRA) வழங்கப்படும் வரி சலுகையை உயர்த்த வேண்டும் என்பதும் வரி செலுத்துவோர் மத்தியில் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.
மருத்துவக் காப்பீடு:
மருத்துவச் செலவுகள் அதிகரித்து வரும் காலகட்டத்தில், Section 80D கீழ் மருத்துவக் காப்பீட்டு பிரீமியத்துக்கு வழங்கப்படும் வருமான வரி சலுகையை உயர்த்த வேண்டும் என்பதும் பிரதான எதிர்பார்ப்புகளில் ஒன்று.
தற்போது, தனிநபர்களுக்கு 25,000 ரூபாய் வரையிலும், சீனியர் சிட்டிசன்களுக்கு 50,000 ரூபாய் வரையிலும் வரிச் சலுகை வழங்கப்படுகிறது. இந்த வரம்பை தனிநபர்களுக்கு 50,000 ரூபாயாகவும், சீனியர் சிட்டிசன்களுக்கு 75,000 ரூபாயாகவும் உயர்த்த வேண்டும் என்பது வரி செலுத்துவோரின் எதிர்பார்ப்பு.
இந்த எதிர்பார்ப்புகள் எல்லாம் எந்தளவுக்கு நிறைவேறும் என்பது இன்று தெரிந்துவிடும்!
`அமிர்த காலத்துக்கு இதுவொரு முக்கியமான பட்ஜெட் - பிரதமர் மோடி
பட்ஜெட் குறித்து நேற்று நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திரமோடி பேசியபோது, “மக்களுக்கு நான் உத்தரவாதங்களை அளித்து வருகிறேன். அவற்றைக் களத்தில் செயல்படுத்த வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அமிர்த காலத்துக்கு இதுவொரு முக்கியமான பட்ஜெட். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எங்களது திசையை இந்த பட்ஜெட் காட்டும். எங்களது கனவுத் திட்டமான விக்சித் பாரத் திட்டத்துக்கும் இந்த பட்ஜெட் ஒரு பலமான அடித்தளத்தை ஏற்படுத்தும். இந்தியா 8 சதவிகித வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி...
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியுள்ள நிலையில், காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முந்தைய நாள் நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுவது வழக்கம். பொருளாதார ஆய்வறிக்கை என்பது இந்தியப் பொருளாதாரத்தின் தற்போதைய நிலை, வளர்ச்சி வாய்ப்புகள், எதிர்பார்ப்புகள் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய ரிப்போர்ட். நேற்று தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில், 2024-25ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5 முதல் 7 சதவீதமாக இருக்கும் என கூறப்பட்டிருந்தது.
பொருளாதார ஆய்வறிக்கையில் உள்ள சிறப்பு அம்சங்கள்:
* இந்தியாவின் நிதித் துறைக்கான எதிர்காலம் பிரகாசமாக உள்ளது.
* 2024-25 நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 6.5% முதல் 7% வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2023-24 நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 8.2 சதவிகிதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
* 2023-24 நிதியாண்டில் உலகப் பொருளாதாரம் நிலையற்றதாக இருந்தாலும், உள்நாட்டு வளர்ச்சிக் காரணிகள் இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு உதவியுள்ளன
* போர் உள்ளிட்ட உலக அரசியல் பதற்றங்களால் ரிசர்வ் வங்கியின் கொள்கை நிலைப்பாட்டில் மாற்றம் இருக்கலாம்.
* 2023-24 நிதியாண்டில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை, ஜி.டி.பியில் 0.7 சதவிகிதமாக இருந்துள்ளது. முந்தைய 2022-23 நிதியாண்டில் நடப்புக் கணக்கு பற்றாக்குறை ஜி.டி.பியில் 2 சதவிகிதமாக இருந்தது.
* 2023-24 நிதியாண்டில் சில்லறை பணவீக்கம் 5.4 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. முந்தைய 2022-23 நிதியாண்டில் சில்லறை பணவீக்கம் சராசரியாக 6.7 சதவிகிதமாக இருந்தது.
* உணவுப் பணவீக்கம் 2022-23 நிதியாண்டில் 6.6 சதவிகிதத்தில் இருந்து 2023-24 நிதியாண்டில் 7.5 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
* மொத்த நிலையான மூலதன உருவாக்கம் 9 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
* உணவுப் பொருள்களின் விலை உயர்வால் ஏழைகள் மற்றும் குறைந்த வருமானம் ஈட்டும் மக்களுக்கு ஆதரவளிக்க, அவர்களுக்கு நேரடியாக பணம் செலுத்தலாம் அல்லது, குறிப்பிட்ட பொருட்களுக்கு கூப்பன்களை வழங்கலாம்.
* இந்தியாவின் நோய் சுமையில் 54 சதவிகிதத்துக்கு ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கமே காரணம். எனவே, சமநிலையான, பரவலாக்கப்பட்ட உணவுப் பழக்கத்துக்கு மாற வேண்டும்.
* இந்தியாவின் கொள்கை சவால்களை சந்தித்து வருகிறது. சர்வதேச அளவில் நிலையற்ற தன்மை இருந்தாலும், விலை ஏற்றம் கட்டுப்பாட்டில் உள்ளது.
* கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் பேலன்ஸ் ஷீட் வலுவாக இருப்பதால், தனியார் முதலீடுகள் பலம் பெறும்.
* பொது முதலீடு அதிகரித்த போதிலும், அரசின் நிதிநிலை வளர்ந்துள்ளது. வரி இணக்கம், செலவுகளை குறைத்தல், டிஜிட்டல்மயமாதல் போன்றவற்றால் இந்திய அரசின் நிதி நிர்வாகத்தில் சமநிலை ஏற்படும்.
* நிதித்துறை முக்கிய மாற்றங்களை சந்தித்து வருகிறது. அதே சமயம், உள்நாட்டிலும், உலகளவிலும் ஏற்படும் சவால்களுக்கு நிதித் துறை தயாராக வேண்டும்.
* இந்தியாவின் வளர்ச்சியில் மூலதன சந்தைகள் முக்கியமான அங்கமாக மாறி வருகின்றன. உலக அரசியல் பிரச்னைகள், பொருளாதார அதிர்வுகளையும் தாண்டி பங்குச் சந்தை ஏற்றம் கண்டுள்ளது.
* டெரிவேடிவ் வர்த்தகம் மிக அதிக லாபம் தரக்கூடிய திறன் கொண்டது. இதனால்தான், டெரிவேடிவ் வர்த்தகம் மனிதர்களின் சூதாட்ட உணர்வுகளைத் தூண்டுகிறது. இதன் விளைவாக, டெரிவேடிவ் வர்த்தகத்தில் சிறு முதலீட்டாளர்களின் பங்களிப்பு அதிகரித்திருக்கலாம்.
* உலகளவில் டெரிவேடிவ் வர்த்தகத்தால் முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்து வருகின்றனர். எனவே, டெரிவேடிவ் வர்த்தகம் பற்றி முதலீட்டாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது முக்கியம். பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்டால், டெரிவேடிவ் வர்த்தகத்தில் ஈடுபடும் சிறு முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்திப்பார்கள்.
* சீனாவில் இருந்து வரும் அந்நிய நேரடி முதலீடுகளால், உலக விநியோக அமைப்பில் இந்தியாவின் பங்களிப்பு அதிகரிக்கும், ஏற்றுமதி வளரும்.
* அயலக இந்தியர்கள் இந்தியாவுக்கு அனுப்பும் பணம் 2024-ம் ஆண்டில் 3.7 சதவிகிதம் அதிகரித்து 124 பில்லியன் டாலராகவும், 2025-ம் ஆண்டில் 4 சதவிகிதம் அதிகரித்து 129 பில்லியன் டாலராகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 7-வது மத்திய பட்ஜெட்
1959-ம் ஆண்டு முதல் 1964 வரையில் நாட்டின் நிதி அமைச்சராக இருந்த மொரார்ஜி தேசாய் தொடர்ந்து ஆறு பட்ஜெட்களை தாக்கல் செய்துள்ளார். தற்போதைய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தனது ஏழாவது பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்... முந்தைய தேசாய் சாதனையை முறியடித்து தொடர்ந்து ஏழு முறை பட்ஜெட் தாக்கல் செய்த நிதி அமைச்சர் என்ற புதிய சாதனையை அவர் படைத்துள்ளார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


