மதுரை பள்ளி மாணவன் கடத்தல் வழக்கு: பின்னணியில் பெண்? பொய்ப் புகாரால் தற்கொலையா?! - நடந்தது என்ன?
மதுரை எஸ்.எஸ்.காலனி பகுதியில் வசித்துவந்த மைதிலி ராஜலெட்சுமி என்பவரின் 7-ம் வகுப்பு பயிலும் மகன், கடந்த 11-ம் தேதி ஆட்டோவில் பள்ளிக்குச் சென்றபோது ஒரு கும்பல் ஆட்டோ டிரைவர் பால்பாண்டியுடன் சேர்த்து கடத்தியது. பிறகு மைதிலி ராஜலெட்சுமிக்கு போன் செய்து, ரூ.2 கோடி பணம் தர வேண்டும், தராவிட்டாலோ, போலீஸுக்குச் சென்றாலோ பையனைக் கொலைசெய்துவிடுவதாக மிரட்ட, இது குறித்து எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்தில் மைதிலி ராஜலட்சுமி புகாரளித்தார்.
இதைத் தொடர்ந்து வழக்கு பதிவுசெய்த இன்ஸ்பெக்டர் காசி தலைமையிலான தனிப்படையினர், சிறுவன் இருக்கும் இடத்தை ட்ரேஸ் செய்து கடத்தல் கும்பலை விரட்டிச் சென்றனர். இதை அறிந்த கடத்தல் கும்பல், சிறுவனையும், ஆட்டோ டிரைவரையும் மதுரைக்கு அருகேயிருக்கும் நாகமலை புதுக்கோட்டை நான்குவழிச் சாலையில் இறக்கிவிட்டுத் தப்பிச் சென்றது. இதையடுத்து மூன்று மணி நேரத்தில் சிறுவனை மீட்ட காவல்துறையினர், தப்பிச் சென்ற கடத்தல் கும்பலைத் தீவிரமாகத் தேடிவந்தனர்.
தொடர் விசாரணை, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் செந்தில்குமார் என்பவரை தேனி மாவட்டத்தில் கைதுசெய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் கடத்தப்பட்ட சிறுவனின் தாயார் மைதிலி ராஜலெட்சுமிக்கும், விளாத்திகுளத்தைச் சேர்ந்த சூர்யா என்ற பெண்ணுக்கும் இடையே கடன் வாங்கியது தொடர்பாகப் பிரச்னை இருந்ததாகவும், அதில் அந்தப் பெண்ணின் சொத்தை ராஜலட்சுமி தன் பெயருக்கு மாற்றிக்கொண்டதாகவும், அதன் காரணமாக அந்தப் பெண்ணின் தூண்டுதலின் பேரில் தூத்துக்குடியைச் சேர்ந்த ரௌடி தலைமையிலான கும்பல் இந்தக் கடத்தலில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்க, அந்தத் தகவலின் அடிப்படையில் தென்காசியைச் சேர்ந்த வீரமணி, காளிராஜ், நெல்லையைச் சேர்ந்த அப்துல் காதர் ஆகிய மூன்று பேரை போலீஸார் கைதுசெய்தனர். இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளி என்று போலீஸாரால் சொல்லப்பட்ட மதுரையைச் சேர்ந்த மகராஜாவையும், விளாத்திகுளத்தைச் சேர்ந்த பெண் சூர்யாவையும் தனிப்படையினர் தேடிவந்தனர். இவர்களில் சூர்யா, குஜராத்தில் பணியாற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மனைவி என்று சொல்லப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில்தான் போலீஸாரால் தேடப்பட்டதாகச் சொல்லப்பட்ட சூர்யா, குஜராத்திலுள்ள வீட்டில் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து அவரின் தாயார் உமா, மதுரை காவல்துறையில் புகார் கொடுத்தார். அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "குஜராத்தில் பணியாற்றும் ரஞ்சித்குமார் ஐ.ஏ.எஸ்-ஸை மணந்துகொண்ட என் மகள் சூர்யாவுக்கும், மதுரையிலுள்ள மைதிலி என்ற ராஜலட்சுமிக்கும் பிரச்னை இருந்தது. அதில் என் மகளின் பணம், சொத்துகளை மோசடி செய்து அபகரித்துக்கொண்டனர்.
அது மட்டுமின்றி, அவரின் மகனைக் கடத்தினார் என்று போலீஸில் பொய்யான புகார் கொடுத்து ஊடகத்தில் செய்தி வெளியிட்டு அசிங்கப்படுத்தினார்கள். அந்த மன உளைச்சலில் சூர்யா தற்கொலை செய்துகொண்டார். அவர் தற்கொலை செய்ததற்குக் காரணமான மைதிலி ராஜலட்சுமி, கிஷோர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

சூர்யாவின் தாயாரின் புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், மைதிலி ராஜலெட்சுமியின் மகன் கடத்தப்பட்ட வழக்கில் பல கேள்விகள் எழுந்திருக்கின்றன. அது மட்டுமின்றி சூர்யா குஜராத் ஐ.ஏ.எஸ் அதிகாரி ரஞ்சித் குமாரின் மனைவி என்று சொல்லப்பட்டாலும், இருவரும் பிரிந்து வாழ்ந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் சூர்யா குஜராத்திலுள்ள வீட்டில் தற்கொலை செய்துகொண்டதாக அவர் தாயாரின் குற்றச்சாட்டு குறித்து மதுரை மாநகர போலீஸார் விரைவில் விளக்கம் அளிப்பார்கள் என்று சொல்லப்படுகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


