கரும்புச்சாறு கடை, சம்பளம் ரூ.18,000, தகுதி பி.இ., - வைரல் பேனருக்கான காரணம் சொல்லும் கடைக்காரர்!
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகிலுள்ள மெஞ்ஞானபுரத்தில் உள்ள ஒரு கரும்புச்சாறு கடையில் ”கரும்புச்சாறு பிழியும் வேலைக்கு ஆட்கள் தேவை” என அதன் உரிமையாளர் விளம்பர பேனர் வைத்துள்ளார். அந்த விளம்பரத்தில் மாத சம்பளம் ரூ.18,000, வேலை நேரம் காலை 8.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை, கல்வித்தகுதி பி.இ., பி.ஏ., பி.எஸ்.சி., வயது வரம்பு 25 முதல் 40 வரை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து கரும்புச்சாறு கடையின் உரிமையாளரான சாம்ராஜிடம் பேசினோம், “படித்து பட்டம் பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கல்வியறிவு அதிகரித்திருப்பது மகிழ்ச்சிதான். அதே நேரத்தில் படித்த படிப்பிற்கான வேலைக்குத்தான் செல்வேன் எனக் கூறி இளைஞர்கள் பலர் பிடிவாதம் பிடித்து வருகின்றனர். போட்டி நிறைந்த இந்த உலகத்தில் போட்டித்தேர்வு எழுதினால் மட்டுமே அரசுப்பணி கிடைக்கும் என்பது தற்போதைய நிலை. ஆனால், ஒருமுறை மட்டுமே தேர்வு எழுதிவிட்டு அரசுப்பணி கிடைக்கவில்லை என விரக்தி அடைவது அர்த்தமற்றது.
விடாமுயற்சிதான் விஸ்வரூப வெற்றியைத் தரும். அதே நேரத்தில் அரசுப் பணியை எதிர்பார்க்காமல் சுய தொழில் செய்யும் இளைஞர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். பட்டப்படிப்பு படித்த பல இளைஞர்களும் குடும்பச் சூழலால் கூலித் தொழிலுக்குச் செல்வதையும், படித்த படிப்பிற்குச் சற்றும் சம்பந்தமே இல்லாத வேலை செய்வதையும் பார்க்க முடிகிறது. எந்த வேலையும் இழிவில்லை.

பொய், திருட்டு இல்லாமல் இருந்தால் மட்டும் போதும். விடாமுயற்சியைக் கைவிடக் கூடாது என்பதற்காகவும் எந்த வேலையும் செய்யலாம் என்பதை இளைஞர்களுக்கு உணர்த்தும் வகையிலும் இந்த விளம்பர பேனரை வைத்துள்ளேன். இளநிலை பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே வேலை. முதுகலைப் பட்டப்படிப்பு முடித்திருந்தால் கூடுதலாக 2,000 ரூபாய் கூட சம்பளம் தரத் தயாராக இருக்கிறேன். என்னிடம் விளக்கம் கேட்பவர்களுக்கும் இதுவே என் பதில்” எனக் கறாராகச் சொல்கிறார் அந்த கரும்புச்சாறு கடைக்காரர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


