Mumbai Rains: தொடர் கனமழை; விமானப் போக்குவரத்து பாதிப்பு... வெள்ளத்தில் சிக்கிய 60 பேர் மீட்பு!
மகாராஷ்டிராவில் பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. மும்பையில் கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமையான நேற்றும் கனமழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் மும்பை மற்றும் அதனை சுற்றியுள்ள நகரங்களின் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நேற்று காலை தொடங்கி இன்றும் பெய்து கொண்டே இருக்கிறது. இதனால் மும்பை விமான நிலையத்தில் இரண்டு முறை விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஓடுதளத்தில் தண்ணீர் தேங்கியதாலும், வெளிச்சம் குறைவாக இருந்ததாலும் 36 விமான சேவை ரத்து செய்யப்பட்டது. சில விமானங்கள் வேறு நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டன. பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு டிக்கெட் கட்டணம் திரும்பக் கொடுக்கப்பட்டது. நேற்று முழுக்க மும்பையில் 151 மி.மீ அளவுக்கு மழை பெய்தது.
இதனால் மும்பையில் புறநகர் ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. நகர் முழுவதும் மாநகராட்சி ஊழியர்கள் தாழ்வான பகுதியில் நின்று வெள்ள நீர் உடனுக்குடன் சாக்கடையில் செல்ல வழிவகை செய்து கொண்டிருந்தனர். பல இடங்களில் ராட்சத மோட்டார்கள் மூலம் தண்ணீர் சாக்கடைக்குள் அனுப்பப்பட்டது. நகரின் சில இடங்களில் 200 மி.மீ அளவுக்கு மழை பெய்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டிராம்பேயில் 196 மி.மீ மழையும், காட்கோபரில் 191 மி.மீ மழையும் பெய்துள்ளது. ஏற்கெனவே ஞாயிற்றுக்கிழமை கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்ததாலும், விடுமுறை என்பதாலும் மும்பையில் மக்கள் அதிக அளவில் வெளியில் வரவில்லை. அந்தேரி மற்றும் கார்ரோடு சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியதால் அவை இரண்டும் மூடப்பட்டுள்ளது.
கடலில் பல மீட்டர் உயரத்திற்கு அலைகள் எழுந்தது. இதனால் வடலா, சயான், தாதர், இந்து காலனி, கோவண்டி, குர்லா ரயில் நிலையத்திற்கு அருகில், வகோலா, சிவ்ரி, அந்தேரி, கலினா, செம்பூர், பரேல், கோரேகாவ், முலுண்ட் மற்றும் ஐரோலி போன்ற பகுதிகளில் சாலையில் தண்ணீர் தேங்கியதால் வாகனப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. 11 பெஸ்ட் பஸ்கள் வேறு வழித்தடத்தில் திருப்பி விடப்பட்டது. பல இடங்களில் மரங்கள் ஒடிந்துவிழுந்தன. நேற்று இரவில் இருந்து இன்றும் மழை பெய்து கொண்டே இருக்கிறது. எனவே தீயணைப்புத்துறையினர், பேரிடர் மீட்புப் படையினர், மும்பை மாநகராட்சியினர் உஷார் நிலையில் இருக்கும்படி முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கேட்டுக்கொண்டுள்ளார். மழை நீர் காரணமாக ஏராளமான வாகனங்கள் திடீரென பழுதாகி சாலையோரம் நின்றுவிட்டது. நவிமும்பை பேலாப்பூர் மலைப்பகுதியில் இருக்கும் நீர்வீழ்ச்சியைப் பார்க்க ஏராளமானோர் சென்று இருந்தனர். கனமழை காரணமாக திரும்பி வரும் வழியில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால் நீர்வீழ்ச்சியை பார்க்கச் சென்றவர்களால் திரும்பி வர முடியவில்லை. அவர்கள் உதவி கேட்டு போலீஸாரை தொடர்பு கொண்டனர். போலீஸாரும் தீயணைப்புத்துறையினரும் விரைந்து வந்து கயிறு கட்டி 60 பேரை பத்திரமாக மீட்டனர். மழை காலத்தில் மலைப்பகுதிக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் தடையை மீறி மக்கள் சென்று சிக்கிக்கொள்கின்றனர். மும்பையில் நாளை கனமழை பெய்யும் என்று கூறி வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மக்கள் தேவையில்லாமல் வெளியில் செல்ல வேண்டாம் என்று மாநகராட்சி நிர்வாகம் மக்களை அறிவுறுத்தி இருக்கிறது. கனமழை எச்சரிக்கை காரணமாக மாநிலத்தில் நாக்பூர் உட்பட சில நகரங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


