Paris Olympics 2024: நீரஜ் சோப்ரா முதல் வினேஷ் போகத் வரை; இந்தியப் படையின் பதக்க வாய்ப்புகள் எப்படி?

உலகின் மிகப்பெரிய விளையாட்டு தொடரான ஒலிம்பிக்ஸ் இன்னும் சில தினங்களில் தொடங்கப்போகிறது. பாரிஸ் 2024 தொடரில் இந்தியா தங்கள் மிகச் சிறந்த செயல்பாட்டைக் கொடுக்கும் என்று இந்திய மக்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள். டோக்கியோவில் 7 பதக்கங்கள் (1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம்) வென்றதுவே இந்தியாவின் மிகச் சிறந்த ஒலிம்பிக் செயல்பாடு. இந்த முறை அதை மிஞ்சுவதோடு மட்டுமல்லாமல், இரட்டை இலக்க பதக்கங்களை இந்திய அணி எட்டவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. இந்தியா சார்பில் மொத்தம் 117 வீரர்கள் பாரிஸுக்குச் செல்கிறார்கள். அவர்களுள் பதக்கம் வெல்ல வாய்ப்புள்ள டாப் 10 வீரர்களின் பட்டியல் இங்கே...

நீரஜ் சோப்ரா (ஈட்டி எறிதல்)

நீரஜ் சோப்ரா

டோக்கியோ ஒலிம்பிக்கில் 87.58 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து இந்தியாவுக்கு தடகளத்தில் முதல் ஒலிம்பிக் பதக்கத்தை வென்று கொடுத்தார் நீரஜ். கடந்த ஆண்டு உலக தடகள சாம்பியன்ஷிப்பிலும் தங்கம் வென்று தன் பெயரை இந்திய விளையாட்டு வரலாற்றில் தங்கத்தாலேயே செதுக்கியிருக்கிறார் இந்த சூப்பர் ஹீரோ. மேலும் டயமண்ட் லீக் தொடரிலும் மிகச் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறார். தொடர்ந்து சீராகச் செயல்பட்டுக்கொண்டிருக்கும் இவர், பாரிஸிலும் இந்தியாவின் மிகப்பெரிய நம்பிக்கையாக இருப்பார். பாரிஸில் பங்கேற்கப்போகும் பெரும்பாலான ஈட்டி எறிதல் வீரர்கள் 86 முதல் 89 மீட்டர் வரையிலேயே வீசுவதால், நீரஜ் தன்னுடைய வழக்கமான செயல்பாட்டைக் கொடுத்தாலே இந்தியாவுக்கு தன் இரண்டாவது ஒலிம்பிக் பதக்கத்தை வென்றுவிடுவார்.

சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி - சிராக் ஷெட்டி (பேட்மிண்டன்)

சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி - சிராக் ஷெட்டி

கடந்த 3 ஆண்டுகளில் இந்த பேட்மிண்டன் இணை இரட்டையர் அரங்கில் உச்சத்தை அடைந்திருக்கிறது. அடுத்தடுத்து இரு காமன்வெல்த் தங்கங்கள் வென்று அசத்தியவர்கள் கடந்த ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் தங்கம் வென்று சரித்திரம் படைத்தார்கள். அதுமட்டுமல்லாமல் 2022 உலக சாம்பியன்ஷிப்பிலும் வெண்கலம் வென்றார்கள். இப்படி மிகப்பெரிய அரங்கில் தங்களைத் தொடர்ந்து நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். சிராக் நெட்டுக்கு அருகே அரணாக விளங்கினால், சாத்விக் தன் மிரட்டல் அட்டாக்கால் எதிரணி வீரர்களைக் கலங்கடித்துவிடுவார். இரட்டையர் பிரிவில் உலகின் நம்பர் 1 அந்தஸ்த்தை அடைந்தவர்கள் இப்போது மூன்றாவது இடத்தில் இருக்கிறார்கள். எந்தவொரு இணையையுமே வெல்லும் திறமை கொண்டவர்கள் நிச்சயம் இந்தியாவுக்கு பேட்மிண்டன் மூலம் இன்னொரு பதக்கத்தை வென்று கொடுப்பார்கள்.

நிகாத் சரீன் (குத்துச்சண்டை)

நிகாத் சரீன்

ஒருவழியாக இந்தியாவுக்காக ஒலிம்பிக்கில் பங்கேற்கவேண்டும் என்று நிகாத் சரீனின் கனவு இப்போது நனவாகியிருக்கிறது. ஆனால் அவர் வெறுமனே பங்கேற்க மட்டும் போவதில்லை. இரண்டு முறை உலக சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற அவர், 50 கிலோ எடைப் பிரிவில் பதக்கம் வெல்ல அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. உலக அரங்கில் தொடர்ந்து அசத்திக்கொண்டிருக்கும் இவருக்கு நிச்சயம் நிறைய சவால்கள் இருக்கின்றன. கடந்த ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற துருக்கியின் பூஸ் நாஸ் சாகிரோக்லு, ஆசியன் கேம்ஸில் தங்கம் வென்ற சீனாவின் வு யு, அந்தத் தொடரில் நிகாத்தை அரையிறுதியில் வீழ்த்திய சுதாமத் ரக்‌ஷத் ஆகியோர் இந்தியாவுக்கும் பதக்கத்துக்கும் இடையே இருப்பார்கள். ஆனால் நிகாத்தின் ஃபார்ம், நம்பிக்கை அவருக்குச் சாதகமாக இருக்கும்.

லவ்லினா போர்கோஹெய்ன் (குத்துச்சண்டை)

லவ்லினா போர்கோஹெய்ன்

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்று அனைவரும் ஆச்சர்யப்படுத்தினார் லவ்லினா. அதன்பிறகு 2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் வெள்ளி வென்று அசத்தினார். நல்ல ஃபார்மில் இருப்பதால் பாரிஸிலும் அவரால் ஜொலிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டோக்கியோவில் வெல்டர் வெயிட் பிரிவில் பங்கேற்ற அவர், இப்போது மிடில் வெயிட் பிரிவில் பங்கேற்கிறார். இருந்தாலும் கடந்த 2 ஆண்டுகளில் இந்தப் பிரிவிலும் சிறப்பாகச் சோபித்திருக்கிறார். அந்தப் பிரிவில்தான் ஆசியன் கேம்ஸில் அசத்தினார். அந்த இறுதிப் போட்டியில் அவரை வீழ்த்தி தங்கம் வென்ற சீனாவின் லி கியான்தான் அவருக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பார்.

இந்திய ஆண்கள் அணி (ஹாக்கி)

Indian Hockey Team

40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய ஹாக்கி அணி டோக்கியோவில் பதக்கம் வென்று அசத்தியது. பலம் வாய்ந்த ஜெர்மனியை வீழ்த்தி வெண்கலம் வென்ற இந்திய அணிக்கு இம்முறை சவால்கள் சற்று அதிகமாகவே இருக்கின்றன. கடந்த ஒலிம்பிக்கை விட குரூப் பிரிவு சற்று கடினமாக இருக்கிறது. ஆஸ்திரேலியா, பெல்ஜியம் இரு அணிகளும் இந்தியாவின் பிரிவில் இருக்கின்றன. அதனால் இந்தியா மற்ற 3 போட்டிகளிலும் (அர்ஜெண்டினா, அயர்லாந்து, நியூசிலாந்து) வெற்றி பெறுவது அவசியம். இம்மூன்று போட்டிகளிலும் முதலிலேயே வருவது இந்தியாவுக்குச் சாதகமான அம்சம். பெல்ஜியம் அல்லது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா சிறப்பாக ஆடினால் காலிறுதி எளிதாக அமையும். இல்லையேல் நெதர்லாந்து அல்லது ஜெர்மனியை காலிறுதியில் சந்திக்க நேரிடும். கூட்டிக் கழித்துப் பார்த்தால், இந்திய அணி ஒரு பெரிய அணிக்கு ஷாக் கொடுத்தால் அரையிறுதியை அடைந்துவிடலாம்.

அதிதி அஷோக் (கோல்ஃப்)

அதிதி அசோக்

கடந்த ஒலிம்பிக் போட்டியில் நான்காவது இடம்பிடித்து நூலிழையில் பதக்கத்தைத் தவறவிட்டார் அதிதி அஷோக். ஆனால், இம்முறை இன்னும் தன் ஆட்டத்தை மேம்படுத்தியிருக்கும் இவர், பாரிஸில் போடியம் ஏறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வரும் இவர், தன் ஷாட்களையும் மேம்படுத்தியிருக்கிறார். பொதுவாக தொழில்முறை கோல்ஃப் ஆடும் வீரர்கள் பலரும் ஒலிம்பிக்கில் கலந்துகொள்ள மாட்டார்கள் என்பதாலும், ஒரு நாட்டிலிருந்து அதிகபட்சம் 4 வீரர்களே பங்கேற்க முடியும் என்பதாலும், அது அதிதி பதக்கம் வெல்வதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்துகிறது.

மனு பாக்கர் (துப்பாக்கி சுடுதல்)

மனு பாக்கர்

டோக்கியோ ஒலிம்பிக் தொடரிலேயே பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் துப்பாக்கியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மனு பாக்கரால் சோபிக்க முடியவில்லை. ஆனால் இம்முறை அதீத நம்பிக்கையோடு பாரிஸில் களம் காண்கிறார் இந்த இளம் ஹரியானா சூப்பர் ஸ்டார். 10 மீட்டர் ஏர் பிஸ்டல், 25 மீட்டர் பிஸ்டல், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணி என மூன்று பிரிவுகளில் பங்கேற்கும் மனு நிச்சயம் குறைந்தபட்சம் ஒரு பதக்கத்தையாவது இந்தியாவுக்கு வென்று வருவார். பாரிஸ் சம்பவத்துக்குப் பிறகு சற்று பின்தங்கியிருந்த அவர், மனதளவில் பெரும் எழுச்சி கண்டிருக்கிறார். அந்த அனுபவம் அவருக்கு நிச்சயம் பிரான்ஸில் கைகொடுக்கும்.

சிஃப்ட் கௌர் சம்ரா (துப்பாக்கி சுடுதல்)

சிஃப்ட் கௌர் சம்ரா

இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர்கள் நிச்சயம் பதக்கம் வெல்லக்கூடியவர் என அதிக நம்பிக்கை கொடுத்திருப்பது சிஃப்ட் கௌர் சம்ராதான். 50 மீட்டர் ரைஃபிள் 3 பொசிஷன் பிரிவில் உலக சாதனையை தன் வசம் வைத்திருக்கிறார் இவர். மருத்துவ படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு துப்பாக்கி சுடுதலில் கவனம் செலுத்திய அவர், 2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்று அசத்தினார். மிகவும் கூலாக இருக்கும் அணுகுமுறையே அவரது மிகப் பெரிய பலமாகப் பார்க்கப்படுகிறது. பொதுவாக இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர்கள் பெரிய அரங்குகள் கொடுக்கும் நெருக்கடியால்தான் தடுமாறுகிறார்கள். சிஃப்ட் அதை உணரக்கூடியவர் இல்லை என்பதால், அவர் நிச்சயம் தன் சிறப்பான பங்களிப்பைக் கொடுப்பார்.

வினேஷ் போகத் (மல்யுத்தம்)

வினேஷ் போகத்

கடந்த 2 ஒலிம்பிக் தொடர்களாகவே வினேஷ் பெயரில் ஒரு ஒலிம்பிக் பதக்கம் வரும் என்று எதிர்பார்த்திருந்தோம். ஆனால், காயங்களால் அது நடக்காமல் போய்க்கொண்டே இருந்தது. இருந்தாலும் மூன்றாவது வாய்ப்பில் தன் முத்திரையைப் பதிக்கக் காத்திருக்கிறார் வினேஷ். இதுவரை 53 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்றுவந்த அவர், காயத்துக்குப் பிறகு 50 கிலோ எடைப் பிரிவுக்கு மாறியிருக்கிறார். பாரதிய ஜனதா எம்பி பிர்ஜ் பூஷனுக்கு எதிராக பாலியில் வழக்கு தொடுத்து போராடிவிட்டு இப்போது அதைவிட சற்றே எளிதான களத்துக்குள் நுழையப் போகிறார் வினேஷ். பன்மடங்கு மனத்திடம் அடைந்திருக்கும் அவர் ஒரு தசாப்தமாக தேடிக்கொண்டிருக்கும் அந்த ஒலிம்பிக் பதக்கத்தை வெல்வார்.

அமன் ஷெராவத் (மல்யுத்தம்)

அமன் ஷெராவத்

இந்த ஒலிம்பிக் தொடரில் மல்யுத்தத்தில் பங்கேற்கும் ஒரு இந்திய ஆண் அமன்தான். 57 கிலோ எடைப் பிரிவில் கடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியிருந்தார் ரவிக்குமார் தாஹியா. அவர்தான் அமனின் ரோல் மாடல். அவரையே வீழ்த்தித்தான் இந்த ஒலிம்பிக் தொடருக்குத் தகுதி பெற்றிருக்கிறார் அமன். சுஷில், ரவி தாஹியா ஆகியோர் வளர்ந்த அதே சத்ரசால் மைதானத்தில் வளர்ந்த அமன், அவர்களைப் போலவே ஒலிம்பிக் மெடலோடு தன் உருவமும் வரையப்படவேண்டும் என்ற லட்சியத்தோடு பயிற்சி செய்திருக்கிறார். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை.

பி.வி. சிந்து
இவர்கள் மட்டும்தான் பதக்கம் வெல்வார்கள் என்றில்லை. எந்த துப்பாக்கி சுடுதல் வீரருமே பதக்கம் வெல்லக்கூடியவர்கள்தான். அன்திம் பங்கல் (மல்யுத்தம்), பிரனோய் (பேட்மிண்டன்) போன்றவர்களும் சில அதிர்ச்சிகளை அரங்கேற்றலாம். சிந்து, மீராபாய் சானு போன்ற மெடல் வின்னர்களின் பெயர்கள் இங்கே இடம்பெறாதது உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கலாம். தொடர்ந்து காயத்தால் அவதிப்பட்டுவரும் அவர்களுக்கு பாரிஸில் சவால்கள் அதிகம். ஒருவேளை அவர்களால் அதையும் முறியடிக்க முடிந்தால், அவர்களும் பதக்கப் பட்டியலில் இணையலாம். ஆக, இந்தியாவுக்குப் பதக்க நம்பிக்கைகள் அதிகமாகவே இருக்கின்றன.

ஆனந்த விகடன் சின்னத்திரை விருதுகள் 2023 - Part 01 ஐ காண | https://bit.ly/46h7FAB

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.