`கால்நடை வளர்த்தால் இனி வரி 2030-ல் அமலாகிறது சட்டம்! என்ன காரணம்?
பருவநிலை மாற்றத்தின் மோசமான விளைவுகளை உலக நாடுகள் உணர்ந்து வருகின்றன. அதீத கனமழை, கடும் வெப்பம், வறட்சி, பருவம் தவறிய மழை என அதன் தாக்கங்களை கண்ணெதிரே பார்த்து வருகின்றன. சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியத்தை தாமதமாக உணர்ந்து கொண்ட உலக நாடுகள் அதற்குத் தீர்வு காணும் நடவடிக்கைகளில் முனைப்புடன் இறங்கியுள்ளன.
சுற்றுச்சூழலை பாதிக்கும் காரணிகளில் கார்பன் எனப்படும் கரியமில வாயு, மீத்தேன் வாயு உமிழ்வு பெரும்பங்கு வகிக்கிறது. இவற்றின் உமிழ்வை குறைக்க இலக்கு நிர்ணயித்து வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் செயல்பட்டு வருகின்றன. சூரியசக்தி மின்சாரம், மரபுசாரா எரிசக்தியை அதிகரித்தல், பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்தல், காடுகளின் பரப்பை அதிகரித்தல் போன்ற நடவடிக்கைகளை உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன.
சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டுமென்று மேற்கத்திய நாடுகள் குரல் கொடுத்து வந்தாலும், அவற்றின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்று அங்குள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்களே குரலெழுப்பி வருகின்றனர். சுற்றுச்சூழலை பாதுகாக்க நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டுமென்று மேற்கத்திய நாடுகளில் போராட்டங்கள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் சமீபத்தில் எல்லை தாண்டிய கார்பன் வரி என்ற ஒரு திட்டத்தை அறிவித்தது. அதன்படி, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருள்களிலிருந்து வெளிப்படும் கார்பனின் அளவுக்கேற்ப வரி விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த முடிவுக்கு இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்தியாவிலிருந்து அலுமினியம், சிமென்ட், உரங்கள், எஃகு போன்றவை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. எல்லை தாண்டிய வரி திட்டத்தால் கடும் பாதிப்பை இந்தியா போன்ற நாடுகள் சந்திக்க நேரிடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இடம் பெற்றுள்ள டென்மார்க் நாடு, இன்னொருபடி மேலே போய் அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பால் பொருள்கள் உற்பத்தி, கால்நடை வளர்ப்பில் முன்னணியில் உள்ள டென்மார்க், கால்நடைகளுக்கு கார்பன் வரி விதிக்க திட்டமிட்டுள்ளது.

புவி வெப்பமயமாதலில் கரியமில வாயுவைவிட மீத்தேன் அதிக பங்கு வகிக்கிறது. வளிமண்டலத்தில் கலக்கும் மீத்தேனில் 32% கால்நடை வளர்ப்பின் மூலம் வெளிப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, மீத்தேன் வாயு வெளியேற்றத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், கால்நடை வளர்ப்போருக்கு 2030-ம் ஆண்டிலிருந்து வரி விதிக்கப்படும் என்று டென்மார்க் அரசு தெரிவித்துள்ளது.
அதன்படி, ஒரு டன் அளவிலான கரியமில வாயு வெளியேற்றத்திற்கு, இந்திய மதிப்பில் சுமார் 3,600 ரூபாய் வரி விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் இதை இரு மடங்காக உயர்த்தவும் டென்மார்க் அரசு திட்டமிட்டுள்ளது. வருமான வரி செலுத்தும் விவசாயிகளுக்கு மட்டும் இதில் சில சலுகைகள் வழங்கப்படும் என்று தெரிகிறது.

எனினும், இந்த அறிவிப்பு டென்மார்க்கிற்கு கைகொடுக்குமா? அறிவித்தபடி திட்டம் நிறைவேறுமா என்ற சந்தேகங்கள் எழாமல் இல்லை. ஏனெனில், இதேபோன்ற திட்டத்தை அறிவித்த நியூசிலாந்து நாடு, விவசாயிகளின் கடும் எதிர்ப்பால் பின்னர் அதை திரும்பப்பெற்றது.
கார்பன் உமிழ்வு மற்றும் வளிமண்டலத்தில் மீத்தேன் வாயுவின் அளவு அதிகரிக்கும்போதெல்லாம் மேற்குலக நாடுகள் இந்தியாவை நோக்கி கை நீட்டுவது வழக்கம். காரணம் உலக அளவில் அதிக கால்நடைகளை கொண்டிருக்கிறது இந்தியா. மாடு, எருமை, வெள்ளாடு என சுமார் 54 கோடி கால்நடைகள் இந்தியாவில் வளர்க்கப்படுவதாக புள்ளிவிவரம் சொல்கிறது. கால்நடை வளர்ப்பை குறைக்க வேண்டும் அல்லது கால்நடை வளர்ப்புக்கு வரி விதிக்க வேண்டும் என்று இந்திய அரசு முடிவெடுத்தால் அது கிராம புற மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கிவிடும் என்பதால் இந்தியா, இந்த விஷயத்தில் மௌனம் காத்து வருகிறது.
ஒருவேளை மேற்குலக நாடுகள் கால்நடை வளர்ப்புக்கு வரி விதிக்க வேண்டும் என்று இந்தியாவுக்கு நெருக்கடி கொடுத்தால் என்னவாகும்? நம் நாட்டில் இத்தகைய வரியை விதிக்க முடியுமா?அப்படி விதித்தால் அது நடைமுறைக்கு ஒத்துவருமா? உங்கள் கருத்தை கமெண்டில் பகிரலாமே!
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


