ஆண்டுக்கணக்கில் மின்சாரம் திருட்டு... `ஷாக் கொடுத்த பக்கத்து வீட்டுக்காரரின் தில்லாலங்கடி!

நம்மூரில் அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டத்திற்கு மின் கம்பத்தில் கொக்கி போட்டு மின்சாரம் திருடுவதைக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், இங்கிலாந்தில் ஒருவர் தனது பக்கத்து வீட்டில் இருந்து, ஆண்டுக்கணக்கில் மின்சாரத்தை திருடி பயன்படுத்தி வந்திருக்கிறார். இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்து, பேசுபொருளாகி இருக்கிறது.

இங்கிலாந்தின் டெய்போர்ட் பகுதி, ஃபைபி என்ற இடத்தில் வசிப்பவர் லெஸ்லி பிரெரி, வயது 51. எலக்ட்ரீஷியனான இவர், 3 படுக்கை அறைகள் கொண்ட ஒரு வீட்டில் வசித்து வந்தார். 2010-ம் ஆண்டு வரை தன் தாயாருடன் இருந்த பிரெரி, அவரது மறைவுக்கு பின்னர் தனி ஆளாக இருந்து வந்துள்ளார்.

ஆனால், அதன் பின்னர் பிரெரி செய்த காரியம் தான், நீதிமன்றத்தில் அபராதம் செலுத்தும் நிலைக்கு அவரை தள்ளி விட்டிருக்கிறது. பிரெரி அப்படி என்ன செய்தார் தெரியுமா?

எலக்ட்ரீஷியனான பிரெரி, தனது வீட்டுக்குரிய மின்சார இணைப்பை லாவகமாக துண்டித்துவிட்டு, தனது தேவைக்கான மின்சாரத்தை, பக்கத்து வீட்டில் இருந்து திருடி எடுத்து பயன்படுத்தி வந்துள்ளார். 2020-ம் ஆண்டு வரை இந்த மின்சாரத் திருட்டு நடந்து வந்துள்ளது.

சம்பந்தப்பட்ட பக்கத்து வீட்டுக்காரரான ஹக் மற்றும் ட்ரேசி டோரன்ஸ் ஆகியோருக்கு துளியும் சந்தேகம் வராதபடி பிரெரி நடந்து கொண்டிருக்கிறார். இதற்காக சில ஏற்பாடுகளையும் அவர் செய்திருந்தார். மின் திருடுவதற்கென ஓர் இணைப்பை ஏற்படுத்தி, அந்தப் பெட்டி வெளியே தெரியாமல் இருக்க, ஓவியச்சட்டம் ஒன்றை மாட்டி மறைத்து வைத்திருந்தார்.

அதேநேரம், பக்கத்து வீட்டுக்காரரான ஹக், மாதாமாதம் தங்களுக்கு அதிக மின்சாரக் கட்டணம் வருவதைக் கண்டு சோர்ந்து போனார். மின் கட்டணமே அவர்களுக்கு நிதிச்சுமையாகி, மாதாந்தர பட்ஜெட்டில் பெரும் தொகையை செலவிட வேண்டியதாயிற்று. இதற்காக, தன் டீன் ஏஜ் மகளை அவர் பணிக்கு அனுப்பினார்.

வழக்கு

இறுதியில் பிரெரியின் மின்சாரத் திருட்டு வெளிச்சத்துக்கு வந்தது. இந்தத் திருட்டு ஹக்- ட்ரேசி குடும்பத்தினருக்கு தெரியவரவே , அவர்கள் ஷாக் ஆகிவிட்டனர். விவகாரம் நீதிமன்றத்திற்கு சென்றது. வழக்கு விசாரணையின் போது, தான் மின்சாரத்தை திருடியதை பிரெரி ஒப்புக் கொண்டார்.

இதையடுத்து, திருட்டில் ஈடுபட்டதற்காக 4,000 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் ஏறத்தாழ ரூ.4,33,000) அபராதம் விதித்த நீதிமன்றம், அதை மாதத்திற்கு 40 பவுண்டுகள் வீதம் செலுத்தலாம் என்று உத்தரவிட்டது.

அடடே, நம்ம பக்கத்து வீட்டுக்காரர் ஒன்றும் தெரியாத பச்சை மண்ணு என்று நம்பிருந்தோமே; ஆனால், நமக்கு இப்படி பேரிடியைத் தந்துவிட்டாரே என்று ஹக் மற்றும் ட்ரேசி டோரன்ஸ் குடும்பத்தினர் வாயடைத்துப் போயுள்ளனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.