NCERT: ஆறாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் ராமாயணம், மகாபாரதம், வேதங்கள் - வலுக்கும் எதிர்ப்பு!
என்.சி.இ.ஆர்.டி., பாடப் புத்தகத்தில் பாரதம் என்பதற்கான விளக்கங்கள் இடம்பெற்றிருப்பது சர்ச்சையைக் கிளப்பி இருக்கின்றன.
மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழுள்ள, என்.சி.இ.ஆர்.டி., எனப்படும் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கழகம், பாடப் புத்தகங்களை வடிவமைத்து வருகிறது. இந்த கழகம் தயாரிக்கும் புத்தகங்கள், சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய கல்வி இடைநிலை வாரியம் உட்படப் பல கல்வி வாரியங்களால் பயன்படுத்தப்படுகின்றன. தற்போது, ஆறாம் வகுப்புக்கான சமூக அறிவியல் புத்தகத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சமூக அறிவியல் புத்தகத்தில் வேதங்கள், உபநிடதங்கள், ராமாயணம், மகாபாரதம் ஆகியவை இடம்பெற்றிருக்கின்றன.
ஆனால் இந்தப் பாடப்புத்தகத்தில் முக்கியமாக இடம்பெறக்கூடிய புவியியல் பாடங்கள் குறைக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக இந்தியா இதற்கு முன் பாரதம் என்றே அழைக்கப்பட்டிருக்கிறது என்று சில உதாரணங்களுடன் பாடங்கள் இடம்பெற்றிருக்கின்றன. "ஜம்புத்வீபா மற்றும் பாரதம் என இரு பெயர்கள் இருந்தன. இருப்பினும், பாரதம் என்ற பெயர் காலப்போக்கில் பரவலாகிவிட்டது. பெரும்பாலான இந்திய மொழிகளில் இந்தியாவின் பெயர் பாரதம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பாரதம் என்பது முதன்முதலில் எல்லா வேதங்களிலும் மிகப் பழமையான ரிக் வேதத்திலுள்ள ஒரு பெயராகும். பிற்கால இலக்கியங்களில், ‘பாரதா’ என்ற பெயரில் பல மன்னர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு, ‘பாரதா’ என்பது இந்தியத் துணைக் கண்டத்திற்குப் பொதுவாகப் பயன்படுத்தப்படும் பெயராக மாறியது. உதாரணமாக, விஷ்ணு புராணம் என்று அழைக்கப்படும் ஒரு பண்டைய நூலில், ”கடலுக்கு வடக்கே மற்றும் பனி மலைகளுக்குத் தெற்கே அமைந்துள்ள நாடு பாரதம் என்று அழைக்கப்படுகிறது" என்று உள்ளது. பாரதா என்ற பெயர் இன்றும் வழக்கத்தில் உள்ளது என்பதை வலியுறுத்தி, வட இந்தியாவில் பொதுவாக பாரத் என்றும், தென்னிந்தியாவில் பெரும்பாலும் பாரதம் என்றும் எழுதப்பட்டிருக்கிறது" என்று அந்த பாடப்புத்தகத்தில் இடம்பெற்றிருக்கின்றன.

ஆனால் மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அசோக மன்னரைப் பற்றி ஒரே ஒரு வார்த்தையில் மட்டுமே புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கின்றனர். அதேபோல அந்தக் காலத்தில் பயன்படுத்தப்பட்ட கருவிகள், நாணயங்கள், நீர்ப்பாசன முறைகள், கைவினைப்பொருட்கள், வணிகம் போன்றவை நீக்கப்பட்டுள்ளதோடு, மகாபலிபுரத்தின் ஒற்றைக்கல் கோயில்கள் மற்றும் அஜந்தா குகைகளில் உள்ள ஓவியங்கள் பற்றியும் பாடப்புத்தகத்திலிருந்து நீக்கி இருக்கின்றனர்.
ஏற்கனவே பா.ஜ.க அரசு இந்தியா என்ற பெயரை பாரதம் என்று மாற்றப்பட வேண்டும் என்று கூறி வரும் நிலையில் மாணவர்கள் படிக்கும் சமூக அறிவியல் பாடப்புக்தகத்தில் எது அதிகளவில் இடப்பெற வேண்டுமோ அவற்றை எல்லாம் நீக்கி பாரதம் என்பதற்கான விளக்கங்களும், உபநிடதங்கள் மற்றும் ராமாயணம், மகாபாரதம் குறித்து இடம்பெற்றிருப்பது சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. என்.சி.இ.ஆர்.டி யின் இந்த செயலுக்குப் பலரும் தங்களது எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


