ஆயுளை அதிகரிக்கும் மருந்து கண்டுபிடிப்பு! எலிகளுக்கு ஓகே... மனிதர்களுக்கு?
எலிகளின் ஆயுளை அதிகரிக்கும் பரிசோதனையில் சாதகமான முடிவுகள் கிடைத்திருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது, மனிதர்களின் ஆயுளை அதிகரிக்கும் சோதனைக்குத் தூண்டுகோலாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
சிங்கப்பூரில் உள்ள டியூக்- என்.யு.எஸ். மருத்துவப் பள்ளி விஞ்ஞானிகள் மற்றும் லண்டனில் உள்ள மெடிக்கல் ரிசர்ச் கவுன்சில் லேபரட்டரி ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் மற்றும் இம்பீரியல் காலேஜ் (MRC LMS) விஞ்ஞானிகள் இது தொடர்பான ஆய்வை மேற்கொண்டனர்.
வயோதிகத்தை ஏற்படுத்தும் இன்டர்லூகின் 11
இதில், மருந்து செலுத்தி இன்டர்லூகின்-11 (IL-11) என்ற புரதத்தைத் தடுப்பதன் மூலம் எலிகளின் வயோதிகம் குறைவதையும், ஆயுட்காலம் அதிகரிப்பதையும் கண்டறிந்துள்ளனர். பொதுவாக, இன்டர்லூகின்-11 புரதமானது எலிகளின் உடலில் வயதான தன்மையை உண்டாக்குகிறது; கொழுப்பு உருவாக்கம் மற்றும் தசை இழப்பை ஏற்படுத்துகிறது.
இது தொடர்பாக, நேச்சர் இதழில் வெளியாகி இருக்கும் ஆய்வு முடிவில், "எலிகள் வயதாகும்போது, அவற்றின் உறுப்புகள் அதிகளவில் இன்டர்லூகின்-11 புரதத்தை உருவாக்குகின்றன. ரத்த அணுக்களின் உருவாக்கம், கொழுப்பு உருவாக்கம் மற்றும் கருவுறுதல் ஆகியவற்றுக்கு உதவும் இந்தப் புரதம், கல்லீரல் மற்றும் வயிற்றில் தேவையற்ற கொழுப்புக் குவிப்பு மற்றும் தசையின் வலிமையைக் குறைக்கிறது. இது வயோதிகத்தின் முக்கிய அறிகுறிகள்.
25% வரை ஆயுள்காலம் அதிகரிப்பு
புதிய கண்டுபிடிப்பின்படி, மருந்துகள் செலுத்தப்பட்ட எலிகள் சராசரியாக 155 வாரங்கள் வாழ்ந்தன; சிகிச்சை அளிக்கப்படாத எலிகள் 120 வாரங்களே இருந்தன. 75 வார வயது முதல் இறக்கும் வரை மருந்து கொடுக்கப்பட்ட எலிகளின் சராசரி ஆயுட்காலம், ஆண் எலிகளில் 22.4% மற்றும் பெண் எலிகளில் 25% அதிகரித்துள்ளது.

சிகிச்சையானது தசை செயல்பாடு மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தி, எலிகளின் ஆயுட்காலத்தை 5% வரை நீட்டித்தது. சிகிச்சையளிக்கப்பட்ட எலிகள் அவற்றின் இளமைத் தோற்றத்தின் காரணமாக ஆய்வகத்தில் "சூப்பர் மாடல் கிரானிகள்" என்று அழைக்கப்பட்டன.
இந்தச் சிகிச்சையானது, விலங்குகளில் புற்றுநோயால் ஏற்படும் இறப்புகளை பெருமளவில் குறைப்பதாகவும், வயதானதன் அடையாளங்களான நாள்பட்ட அழற்சி மற்றும் மோசமான வளர்சிதை மாற்றத்தால் ஏற்படும் பல நோய்களைக் குறைப்பதாகவும் அந்த இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்டர்லூகின்-11 எதிர்ப்பு சிகிச்சையானது பல உபாதைகளைத் தடுக்கிறது; இதய நோய்கள், தசை இழப்பு மற்றும் பலவீனம் ஆகியவற்றிற்கு எதிராக பாதுகாப்பை வழங்குகிறது.
உற்சாகம் தரும் கண்டுபிடிப்பு!
சிங்கப்பூரில் உள்ள டியூக் - என்யுஎஸ் மருத்துவப் பள்ளியின் மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வகத்தின் இணை ஆசிரியராக இருந்த பேராசிரியர் ஸ்டூவர்ட் குக் கூறும்போது, "இந்தக் கண்டுபிடிப்புகள் மிகவும் உற்சாகம் தருகின்றன. சிகிச்சை அளிக்கப்பட்ட எலிகளுக்கு புற்றுநோய் பாதிப்பு குறைவாக இருந்தது; வயதான மற்றும் பலவீனத்தின் வழக்கமான அறிகுறிகளில் இருந்து அவை விடுபட்டன" என்றார்.
குக் மேலும் கூறுகையில், "ஆயுளை அதிகரிக்கும் முந்தைய சிகிச்சைகள், மருந்துகள் மோசமான பக்க விளைவுகளைக் கொண்டிருந்தன. அல்லது இரு பாலினத்திலும் வேலை செய்யாது; அல்லது ஆயுளை நீட்டிக்க முடியும், ஆனால், ஆரோக்கியமான வாழ்க்கை இருக்காது என்ற சிக்கல்கள் இருந்தன.
இந்தக் கண்டுபிடிப்புகள் எலிகளில் மட்டுமே இருந்தாலும், வயதான மனிதர்களிடமும் மருந்துகள் இதேபோன்ற விளைவை ஏற்படுத்தக்கூடும் என்பதற்கான சாத்தியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எங்கள் இலக்கு இன்டர்லூகின்-11 எதிர்ப்பு சிகிச்சையை பரவலாகக் கிடைக்கச் செய்வதாகும். இதன் மூலம் மக்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ முடியும். இருப்பினும், முதுமை தொடர்பான சிகிச்சைகளுக்கு ஒப்புதல் மற்றும் நிதி பெறுவதில் சவால்கள் உள்ளன" என்றார்.

மனிதர்களுக்கு இது பொருந்துமா?
சிங்கப்பூர் டியூக்- என்யுஎஸ் மருத்துவப் பள்ளியின் இணை ஆசிரியராக இருந்த அனிசா விட்ஜாஜா "பரிசோதனைகளை நாங்கள் எலிகளில் செய்திருந்தாலும், இந்தக் கண்டுபிடிப்புகள் மனித ஆரோக்கியத்திற்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என்று நம்புகிறோம். மனித செல்கள் மற்றும் திசுக்களின் ஆய்வுகளில் இதே போன்ற விளைவுகள் இருக்கக்கூடும்" என்றார்.
"இந்த ஆராய்ச்சி வயோதிகத்தைப் புரிந்து கொள்வதற்கான ஒரு முக்கியமான படியாகும். பலவீனம் மற்றும் வயதான உடலியல் வெளிப்பாடுகளைக் குறைப்பதன் மூலம் ஆரோக்கியமான முறையில் வயதை நீட்டிக்கக்கூடிய ஒரு சிகிச்சையை எலிகளில் நாங்கள் நிரூபித்துள்ளோம்" என்றார் விட்ஜாஜா.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


