Mahindra Roxx: 5 டோர் தார் ஜீப்; அர்மதா இல்லை; பேரு இதுதான்; ஆனா அந்த வசதி இருக்குமா?
தார் ஜீப்பின் 5 டோர் வெர்ஷன் ரிலீஸுக்கு, ‛இந்தா அந்தா’ என்று படம் காட்டிக் கொண்டிருந்தது மஹிந்திரா. ஆனால், ஃபோர்ஸ் மோட்டார்ஸ் தன்னுடைய 5 டோர் கூர்க்காவைக் கொண்டு வந்தே விட்டது. இப்போது மஹிந்திராவிடம் இருந்து இன்னொரு செய்தி.
ஆகஸ்ட் 15-ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் தனது 5 டோர் தார் ஜீப்புக்கு Roxx என்று நாமம் சூட்டியிருக்கிறது. உண்மையில் Cult, Rex, Gladius, Savannah, Centurion என பல பெயர்கள் இதற்குக் காத்திருந்தன. அதேநேரம், 80’ஸ் மற்றும் 90’ஸில் பட்டையைக் கிளப்பிய அர்மதா (Armada) எனும் எஸ்டேட் வேகனின் பெயரைத்தான் இந்த 5 டோர் தாருக்குச் சூட்டப் போகிறது மஹிந்திரா என்று நினைத்திருந்தார்கள். அர்மதா எனும் பெயரில்தான் இது சோஷியல் மீடியாக்களிலும் வலம் வந்தது. 1992- 2001 வரை ஃப்ளாக்ஷிப் மாடலாக மஹிந்திராவுக்குப் பெயர் வாங்கிக் கொடுத்தது இந்த அர்மதா.
இப்போது அர்மதா இல்லை; அதன் பெயர் ராக்ஸ் (Roxx). இதற்கு என்ன அர்த்தம் என்று இன்னும் பெயர்க் காரணம் சொல்லவில்லை மஹிந்திரா. ஆனால், இந்தப் பெயரில் டீஸரை வெளியிட்டுப் பரபரப்பாக்கி விட்டார்கள்.
Brace yourself for THE SUV: Mahindra Thar ROXX.
— Mahindra Thar (@Mahindra_Thar) July 20, 2024
Know More: https://t.co/LQNPXq7lBf #ComingSoon #TheSUV #TharROXX #ExploreTheImpossible pic.twitter.com/EB4KWSjZJq
உண்மையில் தார் மாடலை ஜீப் என்று சொல்வதைவிட Lifestyle SUV என்று சொல்வதுதான் பொருத்தம். அந்த வகையில் இந்த நடப்பு ஜெனரேஷன் தாரைப் போலவே, 4 ஆண்டுகளுக்குப் பிறகு, அதே ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தில் லாஞ்ச் செய்யப் போகிறது மஹிந்திரா.
3 டோர் தாரில் இருக்கும் பெரிய பிரச்னையான இடவசதி, உள்ளே போய் வர Ingress / Egress வசதி, 5 பேர் உட்காருவதற்கு நல்ல தாராள இடவசதி, அதிகரிக்கப்பட்ட நீளம் மற்றும் வீல்பேஸ், புதிய கிரில், C வடிவ எல்இடி டிஆர்எல், வட்டவடிவ ஹெட்லைட்ஸில் எல்இடி ப்ரொஜெக்டர் என்று பல மாற்றங்களுடன் வரப் போகிறது ராக்ஸ். ஃபிக்ஸ்டு செய்யப்பட்ட மெட்டல் டாப் ரூஃப் ஆப்ஷனுடனும் இந்த 5 டோர் தார் கிடைக்கப் போகிறது.
உள்ளே வசதிகளில் 10.25 இன்ச் டிஸ்ப்ளே, பனோரமிக் சன்ரூஃப், 360 டிகிரி கேமரா, ஆல் அரவுண்ட் எல்இடி லைட்டிங், டைமண்ட் கட் அலாய் வீல்கள், முக்கியமாக அடாஸ் தொழில்நுட்பம் என்று வருகிறது ராக்ஸ்.
இன்ஜினைப் பொருத்தவரை பெட்ரோல் - டீசல் என இரண்டையும் கைவிடவில்லை மஹிந்திரா. 1.5 லிட்டர் டீசல், 2.2 லிட்டர் டீசல், 2.0 லிட்டர் பெட்ரோல் என 3 இன்ஜின் ஆப்ஷன்கள் வரப் போகின்றன. மேனுவல், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் என உங்கள் சாய்ஸ். 3 டோர் தாரைப் போலவே ராக்ஸும் 4WD, அதாவது Low Ratio GearBox மற்றும் ரியர் வீல் டிரைவ் என ராக் செய்யப் போகிறது.

ரியர் ஆக்ஸிலுக்கு மெக்கானிக்கல் டிஃப்ரன்ஷியல் லாக் மற்றும் பிரேக் லாக்கிங் முன் பக்க ஆக்ஸிலும் உண்டு. ஆனால், கூர்க்காவைப் போல் இதில் சில ஆழம் தண்ணீருக்குள்ளும் புகுந்து புறப்படும் Snorkel இருக்குமா என்று தெரியவில்லை. கூர்க்கா 700 மிமீ தண்ணீருக்குள்ளும் ஏர் இன்டேக் சிரமம் இல்லாமல் நீச்சல் அடிக்கும். ராக்ஸுக்கு இதை 5 மிமீ ஆச்சும் அதிகம் இருந்தால்தானே கெத்து!
ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்ட்டோஸ், ஃபோக்ஸ்வாகன் டைகூன், மாருதி சுஸூகி கிராண்ட் விட்டாரா போன்ற மிட்சைஸ் எஸ்யூவிகளுக்குப் போட்டியாக…
முக்கியமாக 5 டோர் கூர்க்கா, மாருதி சுஸூகி ஜிம்னிதான் இதன் ஒரிஜினல் போட்டியாளர் என்பதால் - இதன் விலையை மஹிந்திரா கொஞ்சம் பார்த்து பொசிஷன் செய்ய வேண்டும். இது எவ்வளவு விலை இருந்தால் எடுபடும் என கமென்ட்டில் சொல்லுங்கள்...
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


