குற்றவியல் வழக்குகள், கவர்னர்களுக்கு அளிக்கப்படும் விலக்கு நீக்கப்படுமா? - சுப்ரீம் கோர்ட் மறு ஆய்வு
குற்றவியல் வழக்குகளில் இருந்து கவர்னர்களுக்கு வழங்கப்படும் விலக்கை மறு ஆய்வு செய்ய சுப்ரீம் கோர்ட் சம்மதம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மற்றும் மாநில கவர்னர்களுக்கு, தற்போது குற்றவியல் வழக்குகளில் இருந்து 361-வது சட்டப்பிரிவின் கீழ் விலக்கு அளிக்கப்படுகிறது.
முன்னதாக, மாநிலங்களில் பணியாற்றிய முன்னாள் கவர்னர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன. ஆனால், 361-வது சட்டப்பிரிவின் கீழ் அக்குற்றச்சாட்டில் இருந்து கவர்னர்கள் தப்பித்துக்கொண்டார்.
இந்நிலையில், மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி அரசுக்கும், கவர்னர் ஆனந்த் போஸிற்கும் இடையே மோதல் இருந்து வருகிறது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா ராஜ்பவனில் பணியாற்றிய பெண் ஊழியருக்கு, கவர்னர் ஏப்ரல் 24 மற்றும் மே 2-ம் தேதிகளில் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதை தொடர்ந்து, இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திரிணாமுல் காங்கிரஸை சேந்த பெண் எம்.எல்.ஏ ராஜ்பவன் சென்று எம்.எல்.ஏ.வாக பதவியேற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.
இந்நிலையில், மேற்கு வங்க கவர்னரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண் சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பாக ஒரு மனு தாக்கல் செய்திருக்கிறார். அதில், ’கவர்னர் என்னை பாலியல் தொல்லை செய்த குற்றத்தை போலீஸார் விசாரிக்க அரசியல் சட்டம் 361 தடையாக இருக்கிறது’ என்று குறிப்பிட்டு இருந்தார். இம்மனுவை பாதிக்கப்பட்ட பெண் சார்பாக அவரது வழக்கறிஞர் ஷியாம் திவான் தாக்கல் செய்திருந்தார்.
மனு, தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, ’கவர்னர் தவறு செய்யும்பட்சத்தில் போலீஸாரும், கோர்ட்டும் பார்த்துக்கொண்டு எப்படி அமைதியாக இருக்க முடியும்? 361-வது சட்டப்பிரிவு கொடுத்திருக்கும் சலுகையால் கவர்னர் மீது விசாரணை நடத்த முடியாத நிலையில் போலீஸார் இருக்கின்றனர். எனவே, கிரிமினல் வழக்கு விசாரணைகளில் இருந்து ஜனாதிபதி மற்றும் கவர்னர்களுக்கு தடையற்ற விலக்கு அளிக்க வேண்டுமா என்பதை கோர்ட் மறு ஆய்வு செய்யவேண்டும். இதற்கு காரணமான 361-வது சட்டப்பிரிவை மறு ஆய்வு செய்ய வேண்டும்.

கவர்னர் பணியில் இருந்து விலகிய பிறகு, இரண்டு மாதங்கள் கழித்த பிறகுதான் அவர்கள் மீதான புகார்கள் குறித்து விசாரிக்கப்படும் என்று கூறப்பட்டு இருப்பதை ஏற்க முடியாது. இப்போதே அவருக்கு எதிரான ஆதாரங்களை சேகரிக்க உத்தரவிடவேண்டும். மனுதாரருக்கு இழப்பீடு வழங்குவதோடு, பாதுகாப்பும் கொடுக்கவேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார்.
இவ்வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், மேற்கு வங்க அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. அதோடு, இவ்வழக்கில் மத்திய அரசையும் சேர்த்துக்கொள்ளும்படி பாதிக்கப்பட்ட பெண்ணிடம் கேட்டுக்கொண்டது. மேலும், இவ்வழக்கில் கருத்து தெரிவிக்க அரசு வழக்கறிஞர் வெங்கடரமணிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


