Anurag Kashyap: கேமராமேனைவிட `Touch Up செய்பவர்களுக்கு அதிக சம்பளம்; கொதித்த அனுராக்;பதிலளித்த ஷான்

`Dev.D, `Black Friday, `Gangs of Wasseypur படங்கள் மூலம் பாலிவுட்டில் பிரபல இயக்குநராக வலம் வரும் அனுராக் காஷ்யப் நடிப்பிலும் கவனம் பெற்றுவருகிறார். சமீபத்தில் தமிழில் மகாராஜா படத்தில் நடித்து கவனம் ஈர்த்திருந்தார்.

விஜய் சேதுபதி நடித்த இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே அறிமுகமானவர், அவ்வப்போது தமிழ் திரைப்படங்கள் சிறப்புத் தோற்றத்தில் நடித்து வருகிறார். பாலிவுட்டிலும் தொடர்ந்து பல படங்களிலும், வெப்சீரியஸிலும் நடித்து கவனம் ஈர்த்து வருகிறார்.

அனுராக் காஷ்யப்

சினிமா மீது அதீத காதல் கொண்ட அனுராக், தொடர்ந்து பாலிவுட் மற்றும் திரையுலகில் இருக்கும் பிரச்னைகளை வெளிப்படையாகப் பேசி வருகிறார். உச்ச நட்சத்திரங்கள் படத்தின் பட்ஜெட்டில் 60 சதவிகிதத்தை சம்பளமாகப் பெறுகிறார்கள் என்று அவர் விமர்சித்தது பேசுபொருளாகியிருந்தது. அவ்வகையில் சமீபத்தில், சில நட்சத்திர நடிகர்கள் படப்பிடிப்பின்போது தனக்கெனத் தனி செஃப்களை வைத்துக் கொள்வதாகவும், அந்த செஃப்களுக்கு ஒரு நாளைக்கு 2 லட்சம் ரூபாய் வரை சம்பளம் கொடுக்கச் சொல்கிறார்கள் என்றும் விமர்சித்திருந்தார்.

மேலும், "ஹீரோ/ ஹீரோயின் மேக்கப் ஆர்டிஸ்ட்டுகள் ரூ.2 லட்சம் வரை சம்பளம் கேட்கிறார்கள். படப்பிடிப்பு தளத்தில் நடிகர்களின் வியர்வையைத் துடைப்பவர்கள்கூட, படத்தில் கடுமையாக வேலை செய்யும் கேமாராமேனின் சம்பளத்தை விட அதிகம் கேட்கிறார்கள். படத்தில் கடுமையாகப் பணியாற்றுபவர்கள் கூட அவ்வளவு சம்பளம் வாங்குவதில்லை. நடிகர்களும், அவர்களுடன் வரும் செஃப்கள், மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டுகள், உதவியாளர்கள் அதிக சம்பளம் கேட்கிறார்கள். இதுபோன்றவர்களையெல்லாம் நான் ஒருபோதும் என் படத்தில் சேர்த்துக்கொள்ள மாட்டேன். இதுபோன்றவர்களால்தான் சினிமா கெட்டுப்போகிறது. இதற்கெல்லாம் முடிவு கட்ட வேண்டும். அதற்கு சரியான நேரம் இதுதான்" என்று பேசியிருந்தார்.

மேக்கப் ஆர்டிஸ்ட் ஷான் முத்தாதில்

அனுராக்கின் கடுமையான இந்த விமர்சனம் பாலிவுட்டில் சலசலைப்பை ஏற்படுத்த, பலரும் இது குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். பல முன்னணி மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டுகள் இதற்கு பதிலளித்து வருகின்றனர். அவ்வகையில் முன்னணி நடிகர்களுக்கு மேக்கப் ஆர்டிஸ்ட்டாக இருக்கும் ஷான் முத்தாதில், "நான் கல்லூரிப் படிப்பை பாதியில் விட்டுவிட்டு வந்தவன். இன்று என் திறமையால் டாக்டர், பைலட்டை விடவும் நல்ல சம்பளம் வாங்குகிறேன்.

அனுராக் சார் பல ஹிட் படங்கள் கொடுத்தவர். இன்று அவரால் திறமையான புது இயக்குநர்களிடம் போட்டிபோட முடியவில்லை. அதனால் பொறாமையில் இப்படியெல்லாம் பேசுகிறார் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அவரது படம் கிராமத்தில் நடக்கும் சிறிய சிறிய படங்கள். அதனால் அவரது ஹீரோயின்களுக்கு எந்த மேக்கப்பும் தேவையில்லை. தூங்கி எழுந்ததுபோல் இருந்தால் போதும். வெறும் 250 ரூபாய் சேலை அவர்களுக்குப் போதுமானது. பெரிய திரைப்படங்களில், பிரமாண்டமாக நடிக்க வேண்டிய இடத்தில் ஹீரோயின்கள் 250ரூபாய் சேலை கட்டினால் சரியாக இருக்குமா?

அனுராக், மேக்கப் ஆர்டிஸ்ட் ஷான் முத்தாதில்

பெரிய திரைப்படங்களுக்கு அதிகமான செலவில் மேக்கப் தேவைப்படுவதால் நாங்கள் அதற்கேற்ற சம்பளம் வாங்குகிறோம். இயக்குநர் சொல்வதற்கேற்ப நாங்கள் மேக்கப் போடுகிறோம். நாங்கள் கேட்கும் சம்பளத்தை் தர தயாராக இருப்பவர்கள் எங்களை அணுகுகிறார்கள். இதில் அனுராக் சாருக்கு என்ன பிரச்னை இருக்கிறது. எல்லா மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டுகளும் எங்களைப் போல அதிக சம்பளம் வாங்குவதில்லை. ஒரு பத்து பேர்தான் முன்னணி ஆர்ட்டிஸ்ட்டுகளாக அதிக சம்பளம் வாங்குகிறோம்" என்று பேசியிருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.