இளம்பெண்ணின் தலையிலிருந்து `77 ஊசிகள் அகற்றம்... சிக்கிய மந்திரவாதி - ஒடிசாவில் `திடுக் சம்பவம்!
ஒடிசா மாநிலத்தின் இச்கான் பகுதியைச் சேர்ந்த ரேஷ்மா பெஹெரா (19) என்ற பெண், கடுமையான தலைவலியால் அவதிப்பட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து, சிகிச்சைக்காக பீமாபோய் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அந்தப் பெண்ணின் தலையை சிடி ஸ்கேன் செய்து சோதித்தனர். அப்போதுதான் அவர் தலையில், ஊசிகள் இருப்பது தெரியவந்தது. உடனே அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட ரேஷ்மா பெஹெராவின் தலையிலிருந்து 7 ஊசிகள் அகற்றப்பட்டன.
ஆனாலும், அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. உடனே அவர், புர்லாவில் உள்ள வீர் சுரேந்திர சாய் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டார். அங்கு சனிக்கிழமையன்று அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு 70 ஊசிகள் அகற்றப்பட்டது. இந்த சிகிச்சைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர், ``இதுவரை இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்து பெண்ணின் தலையிலிருந்து 77 ஊசிகள் அகற்றப்பட்டிருக்கிறது.
அதிர்ஷ்டவசமாக, ஊசிகளால் அந்தப் பெண்ணின் தலை எலும்பு ஓட்டில் எந்த காயமும் இல்லை. மேற்புறமாக மட்டுமே காயங்கள் இருக்கின்றன. உளவியல் ரீதியான பிரச்னைகளால் அந்த பெண் பாதிக்கப்பட்டிருக்கிறார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பெண்ணின் உறவினர் யாரோ இறந்திருக்கிறார். அப்போதிலிருந்து அந்தப் பெண் அடிக்கடி நோய்வாய்ப்பட்டிருக்கிறார். 2021-ல் ஒரு மந்திரவாதியின் உதவியை நாடியிருக்கிறார்.

அப்போதுதான் சிகிச்சை என்ற பெயரில் ஊசி அவரின் தலையில் ஏற்றப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து, தொடர் தலைவலி ஏற்பட்டதால் தற்போது சிகிச்சைக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தார் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கின்றனர். அதன் அடிப்படையில், அந்த மந்திரவாதியை காவல்துறை கைது செய்திருக்கிறது. மேலும், ரேஷ்மா பெஹெரா போல வேறு யாரேனும் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


