கெர்பரா மலர் சாகுபடியில் லட்சக்கணக்கில் வருமானம்! அசத்தும் பொறியியல் பட்டதாரி!
சரியான திட்டமிடல், அசாத்திய உழைப்பு, துணிந்து முடிவெடுக்கும் திறன் இருந்தால் விவசாயத்தில் பல லட்சங்களை ஈட்டலாம் என்பதை நிரூபித்துள்ளார், உத்தரகாண்டை சேர்ந்த பி.டெக். பட்டதாரியான மனான் அகர்வால்.
ஹரித்வார் அருகே உள்ள பகவான்பூர் தான் மனான் அகர்வாலின் சொந்த ஊர். பி.டெக் பட்டதாரியான இவர், கொரோனா பெருந்தொற்று காலத்தில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு பலருக்கும் பெரும் சோதனையாக அமைய, மனான் அகர்வாலுக்கு அது திருப்புமுனையாக அமைந்தது.
ஆம், ஊரடங்கு காலத்தில் தனது வேலையை உதறித் தள்ளிவிட்டு பகவான்பூருக்கு திரும்பினார் மனான். அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தபோது, தனக்கு எப்போதும் பிடித்தமான விவசாயம் மீது அவரது கவனம் திரும்பியது. மலர் சாகுபடி செய்ய முடிவு செய்த அவர், 2022-ல் பகவான்பூர் அருகே தெஹ்சில் பகுதியில் நிலத்தை வாங்கி அதில் மலர் சாகுபடி மேற்கொண்டார். குறிப்பாக அலங்காரங்களுக்கும் மலர் கொத்துகளுக்கும் அதிகமாக பயன்படுத்தும் கெர்பரா மலர்களை அதிக அளவில் சாகுபடி செய்துள்ளார். சிவப்பு, இளஞ்சிவப்பு, மஞ்சள், நீலம் என பல நிறங்களில் உள்ள பூக்களை சாகுபடி செய்துள்ளார்.
ஆனால், மனான் நினைத்ததுபோல் எடுத்த எடுப்பிலேயே மலர் சாகுபடி மணக்கவில்லை. பூச்சித் தாக்குதல், காலநிலை என்று எதிர்பார்த்த விளைச்சல் இல்லாதபோதும் அவர் வாடிவிடவில்லை. முன் வைத்த காலை பின் வைக்காத அவர், மனம் தளராமல் விவசாயத்தை தொடர்ந்தார்.
பி.டெக். பட்டதாரிக்கு விவசாயம் பற்றிய புரிதலோ, அனுபவமோ குறைவாக இருக்கும். அந்த குழப்பம் மனான் அகர்வாலுக்கும் இருந்தது. விவசாயம் தொடர்பான நூல்களை படித்தார்; விவசாயிகள் பலரை சந்தித்து அனுபவங்களை கேட்டறிந்தார்.
கைகொடுத்த ஆலோசனைகள்!
இதுதவிர, மலர் சாகுபடி தொடர்பான நுட்பங்களை அறிந்து கொள்ள, தேசிய தோட்டக்கலை வாரியத்தின் (NHB) உதவியை மனான் நாடினார். அங்கு அவருக்குக் கிடைத்த ஆலோசனைகள், உதவிகரமாக அமைந்தன. பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்களின் ஆலோசனைகளை பெற்றார்.

இதன் முடிவில், 2023ஆம் ஆண்டில் மனான் அகர்வால், மலர் சாகுபடிக்காக தனது நிலத்தில் பாலி ஹவுஸ் நிறுவினார். அதில் கெர்பெரா மலர்களை நட்டார். அவரது அயராத முயற்சியில் நல்ல தரமான கெர்பெரா மலர்கள் விளைந்தன. 2023 பிப்ரவரியில் அவர் 6 வண்ணங்களில் கெர்பெரா மலர்களை விளைவித்தார். ஜூலை 2023 இல் வணிக உற்பத்தியை தொடங்கிய அவர், தினமும் 3500 பூக்களை அறுவடை செய்தார். ஒரு மலர் 3 ரூபாய்க்கு விற்பனையானது.
மணம் வீசிய மலர் சாகுபடி!
கடின உழைப்புக்கு கைமேல் பலன் கிடைத்தது. 2023-24 நிதியாண்டில் மனான் அகர்வால் ஈட்டிய வருவாய், மொத்தம் ரூ.37.80 லட்சம். இதில் உற்பத்திச் செலவு ரூ.10 லட்சம் போக அவருக்கு லாபமாக கிடைத்தது ரூ.27 லட்சம்!
தேசிய தோட்டக்கலை வாரியத்திடம் மானியத்துடன் கடனாக பெற்ற ரூ.25.08 லட்சம், அவரது மலர் சாகுபடி தொழிலுக்கு பேருதவியாக அமைந்தது.
பொறியியல் பட்டதாரியாக இருந்து விவசாயி ஆக மாறிய மனான் அகர்வாலின் இப்பயணம், உத்தராகண்ட் மாநில மலர் சாகுபடியில் ஒரு மைல் கல் என்றே கூறலாம். பல தடைகளை எதிர்கொண்ட போதும் மனான் ஒருபோதும் சோர்ந்துவிடவில்லை. பல நவீன நுட்பங்களை கற்றறிந்து, கடின உழைப்பின் பலனாக இன்று பல லட்சங்களை ஈட்டி வருகிறார்.

சவால்களை வாய்ப்புகளாக்குங்கள்!
மலர் சாகுபடி அனுபவம் குறித்து மனான் அகர்வால் கூறுகையில், "மலர் சாகுபடி ஆரம்பத்தில் எதிர்பார்த்தபடி அமையவில்லை. எனவே, மாநில, மத்திய அரசு துறைகளுடன் ஆலோசனை செய்தேன். இந்த கற்றல் மிக முக்கியமானது. நான் வெற்றிபெறத் தேவையான அறிவைப் பெற இது எனக்கு உதவியது.
தேசிய தோட்டக்கலை வாரியத்தின் ஆதரவு விலைமதிப்பற்றது. அவர்களின் வழிகாட்டுதலும் நிதியுதவியும் கெர்பரா சாகுபடிக்கு பாலிஹவுஸை நிறுவுவதற்கு முக்கியப் பங்காற்றியது. ஆர்வம் மற்றும் விடாமுயற்சியுடன், நீங்கள் சவால்களை எதிர்கொண்டு வாய்ப்புகளாக மாற்றி சாதிக்கலாம்" என்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


