Anant Ambani: ரோல்ஸ்-ராய்ஸ் கார், ஸ்போர்ட்ஸ் பைக், பிரான்ஸ் வீடு - வாரி வழங்கிய பாலிவுட்!
தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் கடந்த 12ம் தேதி மும்பை பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்சில் விமரிசையாக நடந்தது. இத்திருமணத்திற்கு முகேஷ் அம்பானி 5000 கோடி ரூபாய் செலவு செய்ததாகக் கூறப்படுகிறது. பாலிவுட் பிரபலங்கள், தொழிலதிபர்கள், உலக தலைவர்கள் என அனைத்து தரப்பினரும் இதில் கலந்து கொண்டனர்.
மூன்று நாட்கள் இத்திருமண நிகழ்ச்சிகள் நடந்தன. இத்திருமணத்திற்கு வந்த வி.ஐ.பி.க்களுக்கு ஆனந்த் அம்பானி ரூ.2 கோடி மதிப்புள்ள கைக்கடிகாரத்தை ரிட்டர்ன் கிப்டாக கொடுத்து கௌரவித்துள்ளார். இது தவிர மற்ற விருந்தினர்களுக்கும் பெரிய அளவில் அம்பானி தரப்பில் கிப்ட் கொடுக்கப்பட்டது. அதே சமயம் திருமணத்திற்கு வந்திருந்த பாலிவுட் பிரபலங்களும் பல கோடி ரூபாய் மதிப்பிலான திருமண பரிசுகளை வாரி வழங்கி இருக்கின்றனர். அது தொடர்பான தகவல் இப்போது வெளி வந்திருக்கிறது. பாலிவுட் மெகா ஸ்டாராக கருதப்படும் நடிகர் ஷாருக்கான் திருமண பரிசாக ஆனந்த் அம்பானி தம்பதிக்கு பிரான்ஸில் 40 கோடி மதிப்புள்ள அபார்ட்மெண்ட் ஒன்றைப் பரிசாகக் கொடுத்துள்ளார்.
அடுத்து பாலிவுட்டில் மூத்த குடும்பமாகக் கருதப்படும் அம்தாப் பச்சன் குடும்பம் 30 கோடி மதிப்புள்ள மரகத மாலை ஒன்றைத் திருமண பரிசாகக் கொடுத்துள்ளது. நடிகர் ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே தம்பதி ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்றைத் திருமண பரிசாகக் கொடுத்துள்ளனர். இந்த காரின் மதிப்பு ரூ.20 கோடியாகும். நடிகர் சல்மான் கான் 15 கோடி மதிப்புள்ள ஸ்போர்ட்ஸ் பைக் ஒன்றைப் பரிசாகக் கொடுத்துள்ளார். நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் தம்பதி 9 கோடி ரூபாய் மதிப்புள்ள மெர்சிடிஸ் கார் ஒன்றை ஆனந்த் அம்பானிக்கு திருமண பரிசாகக் கொடுத்துள்ளனர். கொரோனா காரணமாக முதல் இரண்டு நாட்கள் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத நடிகர் அக்ஷய் குமார் ரூ.60 லட்சம் மதிப்புள்ள தங்கப் பேனா ஒன்றைப் பரிசாகக் கொடுத்துள்ளார்.
நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் அவரது மனைவி கியாரா அத்வானி ஆகியோர் கையால் நெய்யப்பட்ட சால்வை ஒன்றைப் பரிசாகக் கொடுத்துள்ளனர். அதன் மதிப்பு ரூ.25 லட்சமாகும். நடிகை கேத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கெளஷல் தம்பதி 19 லட்சம் மதிப்புள்ள தங்கச் சங்கிலி ஒன்றைப் பரிசாகக் கொடுத்துள்ளனர்.
இத்திருமணத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்துடன் வராமல் தனியாக தனது மகளுடன் வந்து கலந்து கொண்டார். திருமணத்தில் மட்டும் கணவர் அபிஷேக் பச்சனுடன் சென்று அமர்ந்திருந்தார். ஆனால் இருவரும் பேசிக்கொள்ளவில்லை. அதேசமயம் அமிதாப் பச்சனின் முன்னாள் காதலியாக அறியப்படும் நடிகை ரேகாவுடன் ஐஸ்வர்யா ராய் கைகோர்த்துப் பேசியபடி சென்றது அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கும் விதமாக அமைந்தது.

அதே போன்று நடிகர் சல்மான் கானுடன் நெருக்கமாகப் பேசியபடி ரேகா இருந்தார். திருமணத்தில் நடிகர் சல்மான் கானும், ஐஸ்வர்யா ராயும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டது போல ஏ.ஐ.தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தளங்களில் வெளியாகின. இது குறித்து ஐஸ்வர்யா ராய் மிகவும் வருத்தம் தெரிவித்து இருந்தார். ஐஸ்வர்யா ராயிக்கும், அபிஷேக் பச்சனுக்கும் சமீப காலமாகக் கருத்து வேறுபாடுகள் இருந்து வருகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


