Dating App-ல் அறிமுகம்; Pub-க்கு அழைப்பு - பில் வந்ததும் ஆண்களை சிக்க வைத்த பெண்கள்! - உஷார்
இணைய வசதி பரவலாக கிடைக்க தொடங்கிய பின்னர், அது தொடர்பான மோசடிகளும் அதிகரித்துள்ளது. இன்றைக்கு சோசியல் மீடியா மட்டுமல்லாது டேட்டிங் ஆப் மூலம் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் அறிமுகமாகிக்கொள்கின்றனர். அந்த அறிமுகம் நாளடைவில் அவர்களுக்குள் காதல் வர காரணமாகிறது. இதனை பயன்படுத்தி சில மோசடிகளும் நடக்கிறது. மும்பையில் அது போன்ற ஒரு மோசடி நடந்துள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட சுகாஷ்(32) என்பவர் கூறுகையில், டிண்டர் என்ற டேட்டிங் ஆப் மூலம் ஒரு பெண் எனக்கு அறிமுகமானார். அறிமுகமான ஒரே நாளில் என்னை மும்பை அந்தேரி இன்பினிட்டி மால் பகுதியில் சந்திப்பதாக தெரிவித்தார்.
என்னை அங்குள்ள பப் ஒன்றுக்கு அழைத்து சென்றார். அங்கு உணவு மற்றும் மது வகைகளை தொடர்ந்து ஆர்டர் செய்து சாப்பிடுவதும், குடிப்பதுமாக இருந்தார். பில் வந்த போது அதனை பார்த்து ஏன் இந்த அளவுக்கு அதிகமாக ஆர்டர் செய்தாய் என்று கேட்டேன். உடனே வாஷ்ரூம் சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் அதன் பிறகு திரும்பி வரவேயில்லை. அவர் தொடர்ந்து ஆர்டர் செய்த போதே எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. மொத்தம் 8,800 ரூபாய் பில் வந்தது. வெயிட்டரிடம் பேசி 8,000 கொடுத்துவிட்டு வந்தேன்என்றார்.
இதே போன்று 28 வயது வாலிபர் ஒருவருக்கு டேட்டிங் ஆப் மூலம் தன்வி என்ற பெண்ணின் அறிமுகம் கிடைத்தது. அவர் கூறுகையில், ``அப்பெண் தான் டெல்லியை சேர்ந்தவர் என்றும், வேலை நேர்முகத்தேர்வுக்காக மும்பை வந்து உறவினர் வீட்டில் தங்கி இருப்பதாக தெரிவித்தார். அவரை ஓசிவாரா இன்பினிட்டி மாலில் சந்திக்கும்படி கேட்டுக்கொண்டார். நானும் அங்கு சென்றேன். அவர் என்னை பப் ஒன்றுக்கு அழைத்துச்சென்று மது, உணவு, ஸ்டார்டர் என வாங்கி சாப்பிட்டுக்கொண்டே இருந்தார். அவர் சாப்பிட்டதில் நான் பாதிதான் சாப்பிட்டு இருப்பேன். தொடர்ந்து மது ஆர்டர் செய்து குடித்துக்கொண்டே இருந்தார். பில் 24,000 ரூபாயிக்கு வந்த போது அதிர்ச்சியாகி என்னிடம் இந்த அளவுக்கு பணம் இல்லை என்று சொன்னேன். உடனே தனது தோழியிடம் பேசி ஏற்பாடு செய்வதாக கூறி வெளியில் சென்றவர் அதன் பிறகு வரவேயில்லை. இதனால் பப் ஊழியர்கள் என்னை அடித்து உதைத்தனர். அவர்களிடமிருந்து தப்பித்து வெளியில் ஓடினேன். ஆனாலும் பப் மேலாளர் என்னை பின் தொடர்ந்து வந்து பணம் கேட்டார். நான் என்னிடம் இருந்த 14 ஆயிரத்தை கொடுத்தேன். அதன் பிறகு எனது உறவினரிடம் ரூ.6 ஆயிரம் வாங்கி கொடுத்து பிரச்னையை சமாளித்தேன்என்றார்.

மற்றொருவர் இதே முறையில் வேறு ஒரு பெண்ணிடம் ரூ.43 ஆயிரத்தை இழந்துள்ளார். பெண்கள் டேட்டிங் ஆப்களில் அறிமுகமாகும் நபர்களை உணவங்கள், ரெஸ்டாரண்ட்களுக்கு அழைத்து சென்று நன்றாக சாப்பிட்டுவிட்டு தலைமறைவாகும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இது போன்ற மோசடி டெல்லி, ஐதராபாத், இந்தூர் போன்ற இடங்களில் அதிகமாக நடக்கிறது என்கிறார்கள். தற்போது அது மும்பைக்கும் வந்திருக்கிறது. மும்பையில் நடந்திருக்கும் இம்மோசடி ஒரே பப்பில் நடந்திருக்கிறது. இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் ஆண்கள் நலனுக்காக பாடுபடும் தீபிகா நாராயண் என்பவரிடம் தெரிவித்தனர். அவர் மூவரின் புகார்கள் குறித்து போலீஸில் புகார் செய்துள்ளார். அதன் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களிடம் போலீஸார் வாக்குமூலம் வாங்கி இருப்பதாக தீபிகா தெரிவித்துள்ளார். பலர் பாதிக்கப்பட்டது குறித்து வெளியில் சொல்வதில்லை என்றும் தீபிகா தெரிவித்துள்ளார். இம்மோசடி இளைஞர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


