மா சாகுபடியில் கால்பதித்த கோகோ கோலா நிறுவனம்... விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுமா?

கோகா-கோலா இந்தியா நிறுவனம், விவசாயம் சார்ந்த சேவைகளை வழங்கும் கிராம் உன்னதியுடன் இணைந்து “மேங்கோ உன்னதி” என்ற திட்டத்தை அறிவித்துள்ளது. அல்போன்சா மற்றும் தோதாபுரி மாம்பழ ரகங்களின் உற்பத்தியில் கவனம் செலுத்தி, கர்நாடகாவில் நீடித்த மா சாகுபடியில் புரட்சியை ஏற்படுத்துவதை, இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டிருக்கிறது.

கர்நாடக தோட்டக்கலை துறை, க்ரிஷி விக்யான் கேந்திரா (KVK), கர்நாடக மாநில மாம்பழ வாரியம், இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் (IIHR) மற்றும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள தோட்டக்கலைத் துறைகளுடன் இணைந்து இந்த திட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

coco cola

கோகோ கோலாவுடன் கைகோர்த்த கிராம் உன்னதி!

கிராம் உன்னதி (Gram Unnati) தலைமை நிர்வாக அதிகாரியும் நிறுவனருமான அனீஷ் ஜெயின் கூறுகையில், “நிலையான விவசாயம் மற்றும் விவசாயிகளை மேம்படுத்துவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டும் இந்த திட்டத்தில் கோகோ-கோலா இந்தியாவுடன் கூட்டு சேர்வதில் பெருமிதம் கொள்கிறோம்.

நவீன நடைமுறைகளைப் பின்பற்றி, தரத்தில் கவனம் செலுத்துவதன் மூலம் கர்நாடகாவில் உள்ள மா விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கணிசமாக மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். மாம்பழ விவசாயத்தில் நிலையான வளர்ச்சி மற்றும் புதுமைகளை உருவாக்குவோம்" என்றார்.

வாழ்வாதாரத்தை உயர்த்தும்

கோகோ கோலா இந்தியா மற்றும் தென்மேற்கு ஆசியாவுக்கான மூத்த இயக்குநர் ராஜேஷ் அயாபில்லா கூறுகையில் "நாங்கள் முன்னெடுக்கும் மாம்பழ உன்னதி திட்டத்தில் மேம்பட்ட தோட்டக்கலை தொழில்நுட்பங்கள் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். அவர்களின் வருமானத்தை கணிசமாக அதிகரிக்கும் அதிகாரத்தை இது அளிக்கிறது. விவசாயப் பொருளாதாரத்தை தன்னிறைவு எட்டும் நோக்கத்தை கொண்ட மத்திய அரசின் ஆத்ம நிர்பார் என்ற தொலைநோக்குத் திட்டத்துடன் இது ஒத்துப்போகிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

இதனால் மா சாகுபடி விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுமா என்ற சந்தேகத்தை உள்ளூர் விவசாயிகள் சிலர் எழுப்பியுள்ள நிலையில் கோகோ கோலா தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், "மாம்பழத்தின் தரம், அளவு மற்றும் ஆயுளை மேம்படுத்துவதன் மூலம் மாம்பழ விளைச்சலையும் விவசாயிகளின் வருமானத்தையும் அதிகரிக்க ‘நிலையான விவசாய நடைமுறைகளை’ இந்த திட்டம் ஊக்குவிக்கும். இது சந்தையில் விவசாயிகளுக்கு கூடுதல் விலை கிடைக்க உதவும்.

விவசாயத்தில் பாலின சமத்துவம்

இந்தத் திட்டம் பழைய மாம்பழத்தோட்டங்கள் மற்றும் அடர் நடவு முறையில் சாகுபடி செய்யப்படும் மாந்தோட்ட (HDP) நடைமுறைகளுக்கு புத்துணர்ச்சியூட்டும். வேளாண் தொழில்நுட்பங்களை நடைமுறைப்படுத்துவதையும் எளிதாக்கும். காலநிலை முன்னறிவிப்பு மற்றும் பயிர் எச்சரிக்கை அமைப்புகள் உள்ளிட்ட பயிர் ஆலோசனைச் சேவைகளை விவசாயிகளுக்கு அளிக்கும்.

இது நுண்ணீர் பாசனம், ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை (IPM), தழைக்கூளம் மற்றும் மழைநீர் சேகரிப்பு போன்ற நீர் பாதுகாப்பு நுட்பங்கள் மூலம் நிலையான விவசாயத்தை வலியுறுத்தும். விவசாயிகள் பாதுகாப்பான மற்றும் நவீன விவசாய தொழில்நுட்பங்களில் பயிற்சி பெறுவார்கள். பெண் விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கவும், விவசாயத் துறையில் பாலின சமத்துவத்தை மேம்படுத்தவும் சிறப்பு பயிற்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன" என்று கோகோ கோலா இந்தியா தெரிவித்துள்ளது.

கோகோ கோலா நிறுவனம் சார்பில் மாஸா என்ற பெயரில் பாட்டிலில் அடைக்கப்பட்ட மாம்பழ ஜூஸை விற்பனை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.