`தண்ணீர் பற்றாக்குறையுள்ள இடங்களுக்கு பயோ டாய்லெட்கள் மிகவும் ஏற்றவை’ - DRDO விஞ்ஞானி!
கட்டுமானத் தொழில் அகாடமி (Construction Academy) நடத்திய ‘கரிகால் சோழன் பெருவிழா’ மற்றும் ‘தண்ணீர், கழிவுகள், சுற்றுச்சூழல் மேலாண்மை கருத்தரங்கம்’, சென்னையில் கடந்த ஜூலை 13-ம் தேதி நடைபெற்றது.
கட்டுமானத் தொழில் அகாடமியின் ஒருங்கிணைப்பாளர் சிந்து பாஸ்கர் பேசும்போது, “2,000 ஆண்டுகளுக்கு முன்பே நீர் மேலாண்மையின் முக்கியத்துவத்தை உணர்ந்த மன்னர் கரிகால் சோழன் ‘கல்லணை’ எனப்படும் மிகப்பெரிய ஒரு பிரமாண்டத்தை கட்டினார். அவருக்குப் பெருமை சேர்க்கும் விதமாக இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
.jpeg)
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி விமலா, “இன்றைய காலகட்டத்தில் நகர கட்டமைப்பு, நவீனமயமாக்கல் என்று பல விஷயங்களில் மக்கள் கவனம் செலுத்தி வருகின்றனர். அவை அனைத்தும் நமக்கு மிகவும் முக்கியம் என்றாலும், அதே நேரத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது குறித்தும் மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். பண்டைய காலங்களில் நீர்வடிகால் மற்றும் கழிவு நீர் மேலாண்மை ஆகியவை ஒரு நகரம் சிறந்து விளங்குவதற்கு மிக முக்கிய பங்காற்றியுள்ளது. மக்கள் அதை சரியாக பராமரிப்பதில் அதிக கவனம் செலுத்தினர். ஆனால், இப்போது நிலை முற்றிலும் தலைகீழாக மாறியுள்ளது.
தண்ணீர் பற்றாக்குறை, அடைமழையால் வெள்ளம் வரும்போதுதான் மக்களுக்கு தண்ணீரின் அருமை தெரிகிறது. ஆனால், 2000 ஆண்டுகளுக்கு முன்பே நீர் மேலாண்மையில் நமக்கெல்லாம் முன்னோடியாக விளங்கியிருக்கிறார் மன்னர் கரிகால் சோழன்.
இப்போது நீர்நிலைகளில் அதிக ஆக்கிரமிப்புகள் உள்ளன. அவற்றை அகற்றுவதற்கு அரசுக்கு உரிமை உண்டு. அரசு முன்னெடுத்து அகற்றுவதை விட பொதுமக்கள் ஒவ்வொருவரும் இயற்கை வளத்தைப் பாதுகாக்க வேண்டும். நமக்காக மட்டுமல்லாமல், நம் எதிர்கால சந்ததியினருக்கும் தண்ணீர் சேமிக்க வேண்டும் என்று அனைவரும் உறுதி எடுக்க வேண்டும்" என்றார்.
.jpeg)
மற்றொரு சிறப்பு விருந்திரான மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பைச் (DRDO) சேர்ந்த விஞ்ஞானி வி.டில்லிபாபு பேசியபோது, “பனி பிரதேசங்களில் பணிபுரியக்கூடிய ராணுவ வீரர்கள் இயற்கை உபாதைகள் கழிப்பதற்காக ‘உயிரி கழிப்பறை’ (Bio Toilet) DRDO சார்பில் அமைக்கப்பட்டது. இது ராணுவ வீரர்கள் மத்தியில் மிகவும் பயன்னுள்ளதாக அமைந்து அதிகமாக வரவேற்கப்பட்டது.

இதே கழிப்பறைகள் ரயில்களிலும் அமைக்கப்பட்டன. சுற்றுச்சூழலைத் தூய்மையாக வைத்துக்கொள்வதுடன், தண்ணீர் அதிகமாக வீணாவதையும் இந்த பயோ கழிப்பறைகளால் கட்டுப்படுத்த முடிகிறது. பயோ டாய்லெட்கள் தண்ணீர் தட்டுப்பாடு அதிகமுள்ள பகுதிகளில் அமைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கழிவு நீர் மேலாண்மையில் இது குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்துள்ளது” என்று பேசினார்.
பேராசிரியர்கள் ஏ. ஆர். சாந்தகுமார், கண்மணி, மாதவி கணேசன், சரவணன், இந்துமதி நம்பி, ஜனகராஜன் மற்றும் பொறியாளர்கள் சத்தியமூர்த்தி, வீரப்பன், காந்திமதிநாதன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


