Puja Khedkar: `கிரிமினல் வழக்கு பதிவு; தேர்வெழுதுவதிலிருந்து Debar - பூஜா விவகாரத்தில் UPSC அதிரடி!
மகாராஷ்டிரா மாநிலம், புனேயில் பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்த பூஜா கேட்கர் மீது பல்வேறு சர்ச்சைகள் தொடர்ந்த வண்னம் இருக்கிறது. புனேயில் பயிற்சி அதிகாரியாக பணியாற்றிய போது வீடு, கார், சொந்த காரில் சைரன் விளக்கு என சிறப்பு சலுகைகள் கேட்டார். இதற்கு தனது ஓய்வு பெற்ற தந்தை மூலம் புனே மாவட்ட ஆட்சித் தலைவருக்கு நெருக்கடி கொடுத்தார். இதையடுத்து பூஜா வாசிம் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார். இச்சர்ச்சைகளால் அவர் இதற்கு முன்பு செய்த குளறுபடிகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பூஜா தனக்கு பார்வை குறைபாடு இருப்பதாக கூறி யு.பி.எஸ்.சி தேர்வின்போது சான்று கொடுத்து இட ஒதுக்கீடு பெற்று இருந்தார். அதோடு சாதிச்சான்றிதழ் வாங்கும்போது தனது குடும்பத்திற்கு ஆண்டுக்கு 8 லட்சம்தான் வருமானம் இருக்கிறது என்று கூறி இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் கிரீமி லேயர் சான்றிதழ் வாங்கினார். ஆனால் அவரது குடும்பத்திற்கு 40 கோடிக்கும் மேல் சொத்து இருப்பதாக அவரது தந்தை திலிப் கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட போது வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இச்சர்ச்சைகளால் பூஜா பயிற்சி மாவட்ட உதவி கலெக்டர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அதோடு உடனே முசோரியில் உள்ள ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தில் ஆஜராகும்படி பூஜாவிற்கு யு.பி.எஸ்.சி நிர்வாகம் சம்மன் அனுப்பி இருந்தது. இந்நிலையில் பூஜா கேட்கர் மீது மோசடி செய்ததற்காக டெல்லி போலீஸார் வழக்கு பதிவுசெய்துள்ளனர். அதோடு அவரது ஐ.ஏ.எஸ் பணியை ஏன் ரத்து செய்யக் கூடாது என்று கேட்டு பூஜாவிற்கு யு.பி.எஸ்.சி நிர்வாகம் சம்மன் அனுப்பி இருக்கிறது. இது தொடர்பாக யு.பி.எஸ்.சி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரம்பை மீறி மோசடி செய்ய முயன்ற பூஜா கேட்கர் மீது தொடர் நடவடிக்கை தொடங்கி இருக்கிறது. தனது பெயர், தனது பெற்றோர் பெயர், தனது புகைப்படம், கையெழுத்து, இமெயில், மொபைல் நம்பர் மற்றும் முகவரி என அனைத்தை மாற்றி மோசடி செய்து இருக்கிறார். அவர் அளிக்கும் பதில் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கையாக பூஜா மேற்கொண்டு நுழைவுத்தேர்வு எழுத தடை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பூஜாவின் செயல்பாடுகள் குறித்து மகாராஷ்டிரா பணியாளர் நலத்துறை விசாரணை நடத்தி யு.பி.எஸ்.சி நிர்வாகத்திற்கு அறிக்கை அனுப்பி இருந்தது. மகாராஷ்டிரா அரசு அனுப்பிய அறிக்கையில், பூஜாவின் உடல் தகுதி, அவர் அளித்த இதர பிற்படுத்தப்பட்ட சாதிச்சான்று, புனேயில் பணியாற்றிய போது தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது உட்பட பூஜாவிற்கு எதிரான பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை அறிக்கை இடம் பெற்று இருந்தது. அதன் அடிப்படையில் பூஜா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யு.பி.எஸ்.சி-யின் இந்நடவடிக்கையால் விரைவில் பூஜாவின் ஐ.ஏ.எஸ் பதவி பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 2022-ம் ஆண்டு யு.பி.எஸ்.சி தேர்வில் 841-வது தரப்பட்டியலில் பூஜா வந்தார். ஆனால் அவர் பார்வை குறைபாடுள்ள மாற்றுத்திறனாளி சான்று கொடுத்து ஐ.ஏ.எஸ் அதிகாரியாக தேர்வானார்.

ஆனால் பார்வை குறைபாடு தொடர்பாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொள்ள மறுத்துவிட்டார். பார்வை குறைபாடுள்ள மாற்றுத்திறனாளி என்பதை நிரூபிக்க போலி மருத்துவ சான்றிதழ் பெறவும் பூஜா முயன்றுள்ளார். பூஜா எழுப்பிய சர்ச்சைகளால் அவரது பெற்றோருக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பூஜாவின் தாயார் விவசாயி ஒருவரை துப்பாக்கியை காட்டி மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அதோடு பூஜாவின் தந்தை திலிப் தலைமறைவாக இருக்கிறார். அவர் தனக்கு முன் ஜாமீன் வழங்க கோரி கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


