நீலகிரி கனமழை: அடுத்தடுத்து விழும் ராட்சத மரங்கள், முடங்கும் போக்குவரத்து - இருளில் மலை கிராமங்கள்!
நீலகிரியில் 5 -வது நாளாக கனமழை நீடித்து வருகிறது. ஊட்டி, குந்தா, கூடலூர் ஆகிய பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய தொடர் மழை பெய்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 216 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவலாஞ்சியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊட்டி, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய பகுதிகளில் இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பொழியும் கனமழையால் நீர்நிலைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகின்றன.
ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. கூடலூர், தொரப்பள்ளி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து காணப்படுகிறது. அந்த பகுதிகளில் உள்ள மக்கள் மீட்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். காற்றின் வேகம் காரணமாக சாலையோரங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள யூக்கலிப்டஸ், சில்வர் ஓக் போன்ற ராட்சத மரங்கள் பெயர்ந்து விழுகின்றன. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன், மின் வினியோகமும் தடைபட்டிருக்கிறது. பல பகுதிகளிலும் ராட்சத மரங்கள் பெயர்ந்து விழுவதால் மக்களுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. விழுந்த மரங்களை உடனுக்குடன் அகற்றும் பணியில் மீட்பு குழுவினர் கொட்டும் மழையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர் கனமழை குறித்து ஊட்டி மக்கள் பேசுகையில், ``5 நாட்களாக மழை தொடர்வதால் கடுமையான குளிர் நிலவிவருகிறது. விவசாய பணிகளில் பாதிப்பு ஏற்படுகிறது. மின்கம்பிகள் மீது மரங்கள் விழுவதால் மலை கிராமங்களுக்கான மின் விநியோகம் இரண்டு நாட்களாக தடை பட்டிருக்கிறது. மழை குறைந்தால் இயல்புக்கு திரும்பும் " என்றனர்.

மழை பாதிப்பு குறித்து வருவாய்த்துறையினர், "மண்சரிவை விட மரங்கள் விழுவது பெரும் பிரச்னையாக இருக்கிறது. மாவட்டத்தின் பல பகுதிகளிலும் சாலையோரங்களில் உள்ள ராட்சத அந்நிய நாட்டு மரங்கள் பெயர்ந்து விழுகின்றன. மின்கம்பிகள் மீதும், வாகனங்கள் மீதும் மரங்கள் விழுவதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தி வருகிறோம். ஆபத்தான நிலையில் உள்ள மரங்களுக்கு அருகில் நிற்கவோ, வாகனங்களை நிறுத்தவோ வேண்டாம் என எச்சரித்து வருகிறோம். பேரிடர் அபாயத்தில் இருந்து மக்களை மீட்கும் வகையில் குழுக்களும் முகாம்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன" என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


