கடலூர்: `அம்மாவுக்காக பழிவாங்கினேன்’ - சிறுவன் உள்ளிட்ட மூவர் கொலை வழக்கில் குற்றவாளி `பகீர்’ தகவல்
கடலூர், நெல்லிக்குப்பத்தை அடுத்திருக்கும் காராமணிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சுரேஷ் – கமலேஷ்வரி தம்பதியினர். இவர்களுக்கு சுரேந்திரகுமார், சுகந்தகுமார் என இரண்டு மகன்கள் இருந்தனர். தனியார் சர்க்கரை ஆலையில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற சுரேஷ், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஆண்டு உயிரிழந்தார். மூத்த மகன் சுரேந்திரகுமார் காக்கிநாடாவில் குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில், ஐதராபாத்தில் உள்ள ஒரு ஐ.டி நிறுவனத்தில் சுகந்தகுமார் பணியாற்றி வந்தார். மனைவியை பிரிந்து வாழ்ந்த இவருக்கு, நிஷாந்த்குமார் என்று 10 வயதில் ஒரு ஆண் குழந்தை இருந்தான். அவன் நெல்லிக்குப்பத்தில் இருக்கும் தன்னுடைய பாட்டி கமலேஸ்வரியுடன் தங்கி, படித்து வந்தான். ஐதராபாத்தில் இருந்த சுகந்தகுமார், அடிக்கடி நெல்லிக்குப்பம் வந்து தன்னுடைய மகனைப் பார்த்துவீட்டுச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.
அதன்படி கடந்த வாரமும் மகன் நிஷாந்த் குமாரை பார்ப்பதற்காக நெல்லிக்குப்பம் வந்திருந்தார். இந்த நிலையில் அதிகாலையில், கமலேஸ்வரி வீட்டின் மேல் மாடியில் இருந்து அதிகளவில் கரும்புகை வெளியேறியிருக்கிறது. அதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் கமலேஸ்வரியை செல்போனில் தொடர்பு கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர் செல்போனை எடுக்கவில்லை என்றதும், காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்திருக்கின்றனர். அதையடுத்து அங்கு விரைந்த நெல்லிக்குப்பம் போலீஸார், வீட்டின் கதவுகளை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர். அப்போது கமலேஸ்வரி அங்கு கருகிய நிலையில் சடலமாக கிடந்தார். அதேபோல மற்றொரு அறையில் சிறுவன் நிஷாந்த்குமாரும், வேறொரு அறையில் சுகந்தகுமாரும் தீயில் கருகிக் கொண்டிருந்தனர். அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த போலீஸார், தீயணைப்பு வீரர்களை உள்ளே வரவழைத்து தீயை அணைக்கும்படி கூறினர்.
அதையடுத்து மூன்று பேரின் கருகிய உடலை கைப்பற்றி, கடலூர் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். `வீட்டினுள் ரத்தக் கறைகள் மற்றும் ரத்தக் கறை படிந்த கத்திகள் இருந்ததுடன், உயிரிழந்தவர்களின் உடல்களிலும் காயங்களும் இருக்கின்றன. மூன்று பேரையும் கொலை செய்துவிட்டு, உடல்களை எரித்திருக்கலாம். எப்படி இருந்தாலும் இது தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை. கொலையாகவே இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன’ என்றனர் போலீஸார்.
தொடர்ந்து, காக்கிநாடாவில் இருந்த மகேஸ்வரியின் மூத்த மகன் சுரேந்திரகுமாருக்கு தகவல் கொடுத்ததால், அவரும் குடும்பத்துடன் வந்து அம்மா மற்றும் தம்பியின் உடல்களைப் பார்த்து கதறியழுதார். சம்பவ இடத்தை ஆய்வு செய்த கடலூர் மாவட்ட எஸ்.பி ராஜாராம், டி.எஸ்.பி தலைமையில் ஒரு குழு, டெல்டா பிரிவில் ஒரு குழு, தலா இரண்டு எஸ்.ஐ-க்களின் தலைமையில் ஒரு குழு என, கொலையாளிகளைப் பிடிக்க 7 தனிப்படைகளை அமைத்து உத்தரவிட்டார்.

இந்த சம்பவம் குறித்து அப்போது நம்மிடம் பேசிய எஸ்.பி ராஜாராம், ``திருட்டுக்காக இந்த கொலைகள் நடக்கவில்லை. அவர்கள் அணிந்திருந்த நகைகளும், வீட்டில் இருந்த நகைகள் மற்றும் ரொக்கம் அப்படியே இருக்கின்றன. அதனால் குடும்பப் பிரச்னையில் இந்த கொலை நடந்திருக்கலாம்” என்று தெரிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக கொலை செய்யப்பட்டவர்களுடன் தொடர்ச்சியாக தொடர்பில் இருந்தவர்கள், உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் என அனைவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர் போலீஸார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த 21 வயது சங்கர் ஆனந்த் என்பவர் மீது போலீஸாரின் சந்தேகப் பார்வை விழுந்தது. அந்த சந்தேகத்தை உறுதிப்படுத்தும் விதமாக, கொலைகளுக்குப் பிறகு சங்கர் ஆனந்த் மாயமாகியிருந்தார்.
செங்கல்பட்டில் பதுங்கியிருந்த அவரை வளைத்த போலீஸார், அவரிடம் விசாரணையை மேற்கொண்டனர். அப்போது, தன்னுடைய அம்மா தற்கொலை செய்து கொள்வதற்கு காரணமாக இருந்ததால் சுகந்தகுமாரை கொலை செய்தேன் என்று ஒப்புக் கொண்டிருக்கிறார். மேலும் கமலேஸ்வரி, சிறுவன் நிஷாந்த்குமாரையும் கொலை செய்ததற்கான காரணத்தையும் கூறியிருக்கிறார். தொடர்ந்து அவர் அளித்த வாக்குமூலம் குறித்து நம்மிடம் பேசிய விசாரணை அதிகாரிகள், `` கைது செய்யப்பட்ட சங்கர் ஆனந்தின் அம்மா லட்சுமி, கடந்த ஜனவரி மாதம் ரயிலுக்கு முன்பு விழுந்து தற்கொலை செய்து கொண்டார். சுகந்தகுமார்தான் அதற்கு காரணம் என்று முடிவெடுத்த சங்கர் ஆனந்த், அவரை பழிவாங்குவதற்கு திட்டம் தீட்டியிருக்கிறார்.

அதன்படி 12-ம் தேதி இரவு சுகந்தகுமாரின் வீட்டிற்குள் நுழைந்து, சுகந்தகுமாரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்திருக்கிறார். அப்போது அதை தடுக்க முயற்சி செய்த கமலேஸ்வரியையும் வெட்டிக் கொலை செய்திருக்கிறார். சிறுவன் நிஷாந்த்குமாரை உயிருடன் விட்டால் மாட்டிக்கொள்வோம் என்று நினைத்தவன், தலையணையை அவன் முகத்தில் வைத்து அழுத்தி கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டுச் சென்றிருக்கிறான். அதன்பிறகு 14-ம் தேதி தன்னுடைய நண்பன் ஷாகுல் அமீது உதவியுடன், பெட்ரோல் வாங்கிக் கொண்டு மீண்டும் சுகந்தகுமார் வீட்டிற்குச் சென்றிருக்கிறான். அன்றுதான் மூன்று உடல்களின் மீதும் பெட்ரோல் ஊற்றி எரித்திருக்கிறான். அதனால்தான் அன்று இந்த கொலை தெரியவந்தது. இல்லையென்றால் இன்னும் தாமதமாக தெரிய வந்திருக்கும். தற்போது ஷாகுல் அமீதுவையும் கைது செய்திருக்கிறோம். விசாரணை முடிவில் மேலும் பல தகவல்கள் வரும்” என்று முடித்துக் கொண்டனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


