``மரணத்தைத் தள்ளிப்போட ஒரு சைக்கிள் போதும்..! ஆய்வு சொல்வதென்ன?
சைக்கிள் ஓட்டிச் செல்பவர்களை விநோதமாகப் பார்க்கும் காலம் இது. ஒரு காலத்தில் வீட்டுக்கு வீடு அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக இருந்த சைக்கிள், இன்று காட்சிப் பொருளாகிவிட்டது. பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள்தான் காலை மாலை நேரங்களில் சைக்கிள் ஓட்டிச் செல்வதைப் பார்க்க முடிகிறது.
சைக்கிள் ஓட்டுவதும் ஒருவகையிலான உடற்பயிற்சிதான். உடல் ஆரோக்கியத்திற்கு சைக்கிள் ஓட்டுவது நல்லது என்று பல்வேறு ஆய்வுகள் தெரிவித்திருக்கின்றன. இந்த நிலையில், பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று, சைக்கிளை பயன்படுத்துவோருக்கு முன்கூட்டியே மரணம் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவதாகக் கண்டறிந்துள்ளது.
இது தொடர்பாக பிரிட்டனைச் சேர்ந்த ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள், BMJ Public Health இதழில் வெளியாகி உள்ளன. அதன்படி, 16 முதல் 74 வயது வரையிலான 82,000 பிரிட்டன்வாசிகளை 18 ஆண்டுகளாக ஆய்வாளர்கள் கண்காணித்து வந்தனர்.
இது தொடர்பான கணக்கெடுப்பின் போது, தனிநபர்கள் தாங்கள் வழக்கமாகப் பயன்படுத்திய முதன்மையான போக்குவரத்து வழிமுறைகள் கேட்டறியப்பட்டன. கணக்கெடுப்பாளர்களின் மருந்துச்சீட்டுகள், அவர்கள் மருத்துவமனையில் தங்கியிருந்ததற்கான ஆவணங்கள் மற்றும் இறப்புகள் உள்ளிட்ட விவரங்களும் ஆராய்ச்சியாளர்களால் ஆய்வு செய்யப்பட்டன.
இதன் முடிவில், "உடலை சுறுசுறுப்பாக்கும் பயணங்கள் மேற்கொண்டிருந்தவர்கள் ஆரோக்கிய பலன்களைக் கொண்டிருக்கின்றனர் என்பதற்கான ஆதாரத்தை இந்த ஆய்வு வலுப்படுத்துகிறது. நோய் ஏற்படுவதற்கான குறைந்த வாய்ப்புகளை அவர்கள் கொண்டிருந்தனர். சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு மற்றவர்களைக் காட்டிலும் முன் கூட்டியே மரணம் ஏற்படும் ஆபத்து 47 சதவிகிதம் குறைவு" என்று BMJ Public Health இதழின் கட்டுரை தெரிவிக்கிறது.

சைக்கிளை பயன்படுத்துவோருக்கு புற்றுநோயால் இறப்பதற்கான வாய்ப்பு 51 சதவிகிதம் குறைவு, இதய நோய்க்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான வாய்ப்பு 24 சதவிகிதம் குறைவு, மனநலப் பிரச்னைகளுக்குப் பிறகும் மருந்துகளைப் பெறுவதற்கான வாய்ப்பு 20 சதவிகிதம் குறைவு என்று அந்த ஆய்வு மேலும் தெரிவிக்கிறது. இந்த ஆய்வில், நடைப்பயிற்சி அல்லது சைக்கிள் ஓட்டுதல் சுறுசுறுப்பான பயணமாக வகைபடுத்தப்பட்டது. வாகனம் ஓட்டுதல் உள்பட பிற போக்குவரத்து முறைகள் "செயலற்றதாக" கருதப்பட்டன.
அதே நேரம், சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு இன்னோர் ஆபத்து உள்ளது. சாலை விபத்து போன்ற காரணிகளின் அடிப்படையில் பார்த்தால் "செயலற்ற" போக்குவரத்து முறை கொண்டுள்ளவர்களுடன் ஒப்பிடும்போது, சைக்கிள் பயணிகளுக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான வாய்ப்பு இரு மடங்கு அதிகம் உள்ளது.
"இது, பாதுகாப்பான சைக்கிள் ஓட்டுதலுக்கான உள்கட்டமைப்பின் தேவையை வலுப்படுத்துகிறது. கரியமில வாயு உமிழ்வைக் குறைப்பதற்கும், மிகவும் சுறுசுறுப்பான மற்றும் நிலையான பயண முறைகளுக்கு மாற்றுவதற்கும் சைக்கிள் பயன்பாடு மிகவும் உதவும்" என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


