உ.பி: 40 நாள்களில் 7 முறை பாம்பு கடித்ததா...? ஆட்சியர் இந்துமதி விசாரணையில் வெளிவந்த உண்மைகள்..!

உத்தரப்பிரதேசத்தில் வாலிபர் ஒருவரை 40 நாள்களில் 7 முறை பாம்பு கடித்ததாக வந்த புகாரை தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் இந்துமதி நடத்திய விசாரணையில், அவரை ஒரு முறை மட்டுமே பாம்பு கடித்திருப்பது தெரிய வந்தள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், பதேப்பூர் மாவட்டம் செளரா என்ற கிராமத்தை சேர்ந்தவர் விகாஷ் துபே (24). இவரை கடந்த மாதம் 2-ம் தேதி பாம்பு கடித்தது. அதற்கு அவர் சிகிச்சை எடுத்துக்கொண்டார். அதன் பிறகு, ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் தன்னை பாம்பு கடித்ததாக துபே தெரிவித்தார். அந்த வகையில், 40 நாள்களில் 7 முறை தன்னை பாம்பு கடித்துவிட்டதாக அவர் தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சியர் இந்துமதி

ஒவ்வொரு முறையும் பாம்பு கடித்தாகக் கூறி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டுள்ளார். 4-வது முறை அவரை பாம்பு கடித்ததாகச் சொன்னபோது, அவர் மயங்கி விழுந்துள்ளார். உடனே, அவரை ஏற்கெனவே சிகிச்சை எடுத்துக்கொண்ட மருத்துவமனைக்குக் கொண்டு சென்று உறவினர்கள் சிகிச்சையளித்தனர். விகாஷ் துபே ஏதோ தவறு செய்ததால்தான் பாம்பு தொடர்ந்து அவரை கடிப்பதாக அவரின் உறவினர்கள் தெரிவித்தனர். நான்காவது முறை தன்னை பாம்பு கடித்ததாக அவர் சொன்னபோது, குடும்பத்தினர் அவரை வேறு உறவினர் ஒருவரின் வீட்டிற்கு மாற்றினர். ஆனால், அங்கேயும் பாம்பு அவரை கடித்ததாகக் கூறினார்.

இதையடுத்து, துபேயை மீண்டும் அவரது வீட்டிற்கே அழைத்து வந்தனர். 40 நாள்களில் தன்னை 7 முறை பாம்பு கடித்துவிட்டதாக அவர் தெரிவித்தார். அதோடு, 9-வது முறை பாம்பு கடிக்கும்போது மரணம் சம்பவிக்கும் என்று தனக்குக் கனவு வந்ததாகவும் துபே தெரிவித்தார். இதனால், அவரின் குடும்பத்தினர் கவலை அடைந்தனர்.

இது குறித்த செய்தி மாவட்டம் முழுவதும் வைரலாகப் பரவியது. உடனே, இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி டாக்டர் ராஜிவ் நயன் என்பவரிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் இந்துமதி கேட்டுக்கொண்டார். ஆட்சியர் இந்துமதி, தமிழகத்தின் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர்.

டாக்டர் ராஜிவ், 5 நாள்கள் விசாரணை நடத்தி தனது விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். ராஜிவ், துபேயிடமும் மற்றும் அவர் சிகிச்சை எடுத்துக்கொண்ட மருத்துவமனையில் சென்றும் விசாரித்து இந்த அறிக்கையை சமர்ப்பித்தார். அதில், துபேயை ஒரு முறை மட்டுமே பாம்பு கடித்திருப்பது உறுதி செய்யப்பட்டது.

பாம்பு (கோப்புப் படம்)

அதன் பிறகு நடந்ததாகக் கூறப்படும் பாம்புக் கடி சம்பவங்கள் சந்தேகத்தை ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது என்று டாக்டர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். துபேக்கு, டாக்டர் ஜவஹர்லால் என்பவர்தான் பாம்புக் கடிக்கு சிகிச்சையளித்துள்ளார். அவரும், ஒரு முறை மட்டும் பாம்பு கடித்ததை உறுதி செய்துள்ளார். ஆனால், பாம்புக் கடிக்கு துபே 4 முறை மருத்து எடுத்துக்கொண்டுள்ளார்.

தன்னை ஒரு முறை பாம்பு கடித்ததை நினைத்து, துபேக்கு பாம்பு குறித்த அச்சம் (ophidiophobia) ஏற்பட்டதாகவும் , அதனால் இதுபோன்று நடந்துகொண்டதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். வனத்துறை அதிகாரிகள் இது குறித்து விசாரித்தபோதும், துபேயை பாம்பு கடித்ததை யாரும் பார்க்கவில்லை என்று தெரிய வந்துள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.