``வேட்டி கட்டினால் உள்ளே வராதீங்க என்று சொல்லிய ஷாப்பிங் மாலை மூட உத்தரவு... என்ன நடந்தது?

கர்நாடக மாநிலம், பெங்களூருவின் மாகடி சாலை அருகே ஜி.டி. மால் என்ற வணிக வளாகம் உள்ளது. இங்குள்ள ஒரு தியேட்டரில் படம் பார்ப்பதற்காக 70 வயதான பாகீரப்பா என்ற விவசாயி வேட்டி கட்டிக்கொண்டு வந்தபோது பாதுகாவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திரைப்படம் பார்க்க வேட்டி கட்டிவந்த காரணத்திற்காக அந்த முதியவர் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறார். உடன் வந்த பாகீரப்பாவின் மகன் நாகராஜ் எவ்வளவோ கெஞ்சியும் அவரை அனுமதிக்கவில்லை. சமூக வலைளதங்களில் இந்த செய்தி பரவ பலரும் மாலின் செயலை கண்டித்தனர்.

கன்னட அமைப்பினர் போராட்டம்

இந்த சம்பவம் வைரலானதை தொடர்ந்து கன்னட அமைப்பினர் மற்றும் விவசாய சங்கத்தினர் வேட்டி மற்றும் லுங்கி அணிந்து கொண்டு வந்து நேற்று ஜி.டி வேர்ல்டு மால் வாசலில் போராட்டம் நடத்தினர். வேஷ்டி கட்டி வந்ததற்காக விவசாயியை மாலுக்குள் அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தியதற்காக மால் நிர்வாகம், விவசாயி பகீரப்பாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய விவசாயி பகீரப்பா, "கிராமத்திலிருந்து வேட்டி கட்டி கொண்டு வருபவர்கள், படம் பார்ப்பதற்காக திரும்பவும் ஊருக்குச் சென்று பேன்ட் அணிந்துகொண்டா வர முடியும்?" என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

பாகீரப்பா மற்றும் அவரது மகன்

இந்த சம்பவம் தொடர்பாக பேசியுள்ள கர்நாடக அமைச்சர் சந்தோஷ் லாட், "வேட்டி அணிந்து வந்த விவசாயியை மாலுக்குள் அனுமதிக்காமல் தடுத்து நிறுத்திய விவகாரத்தில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்திருக்கிறார்.

பல இடங்களிலுமிருந்து கண்டன குரல் எழுந்ததையொட்டி சம்பந்தப்பட்ட விவசாயி மற்றும் அவரது மகனிடம் வணிக வளாக பாதுகாவலர்கள் மன்னிப்பு கேட்டுள்ளனர்.

இந்நிலையில் வணிக வளாகத்தை மூட கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. ஒரு வாரம் வரை வணிக வளாகத்தை திறக்கக் கூடாது என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.