Mumbai Billboard Collapse: `17 பேர் இறந்தது கடவுள் செயல் - குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பு வாதம்

மும்பையில் கடந்த மே 13-ம் தேதி சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. அந்நேரம் காட்கோபர் கிழக்கு பகுதியில் பெட்ரோல் பம்ப் ஒன்றிற்கு அருகில் நிறுவப்பட்டு இருந்த ராட்சத விளம்பர போர்டு காற்று காரணமாக உடைந்து, கீழே விழுந்தது. கீழே இருந்த பெட்ரோல் பம்ப் மீது விளம்பர போர்டு விழுந்தது. மழைக்கு பெட்ரோல் பம்ப்பில் பலர் ஒதுங்கி நின்றனர். விளம்பர போர்டு அவர்கள்மீது விழுந்தது. இதில் 17 பேர் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 70-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்த விளம்பர போர்டை ஈகோ மீடியா நிறுவனம் நிறுவி இருந்தது. அதன் இயக்குநர் பாவேஷ் பிண்டே கைதுசெய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். அவர் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இம்மனு விசாரணைக்கு வந்த போது பாவேஷ் பிண்டே தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரிஸ்வான் மெர்ச்சண்ட், ``என் மனுதாரரை கைது செய்தது சட்டவிரோதமானது.

மனுதாரர் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யவேண்டும். உடைந்து விழுந்த விளம்பர போர்டு சட்டபூர்வமானது. அனைத்து வகையான அனுமதிகளும் பெறப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் கொலைக்கு நிகரான பிரிவில் தவறுதலாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசியல் நிர்ப்பந்தம் காரணமாக இவ்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட விளம்பர போர்டுக்கும் மும்பை மாநகராட்சிக்கும் எந்த வித தொடர்பும் கிடையாது. விளம்பர போர்டுக்கு ரயில்வே போலீஸ் ஒப்புதல் கொடுத்து இருக்கிறது.

அதோடு தடையில்லா சான்றும் பெறப்பட்டுள்ளது. மாநகராட்சியிடம் கூடுதலாக அனுமதி வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்று இந்த விபத்து குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி தெரிவித்து இருக்கிறார். அதோடு இந்த விளம்பர போர்டு அமைக்கப்படும்போது ஈகோ மீடியாவில் எனது மனுதாரர் பாவேஷ் பிண்டே இயக்குநராக இல்லை. விளம்பர போர்டு விழுந்தது கடவுளின் செயல். வானிலை ஆய்வு மையம் மே 12-ம் தேதி மும்பையில் மே 13-ம் தேதி சூறாவளி காற்றுடன் கூடிய மழை பெய்யும் என்று முன்கூட்டியே தெரிவிக்க தவறிவிட்டது. எதிர்பாராத விதமாக 96 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியதால் விளம்பர போர்டு விழுந்தது. இதற்கு ஈகோ மீடியாவோ அல்லது மனுதாரரோ பொறுப்பாக முடியாது என்று வாதிட்டார். அதோடு மனுதாரருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.