NEET: நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்; எய்ம்ஸ் மருத்துவர்கள் 3 பேர் கைது... CBI அதிரடி!

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் (NEET) நுழைவுத் தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்றது. இந்தத் தேர்வில் வினாத்தாள் கசிவு முறைகேடு நடந்திருப்பதாகத் தேர்வு சமயத்திலேயே குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதைத் தொடர்ந்து, ஜூன் 4-ம் தேதி திடீரென நீட் தேர்வு முடிவுகள் வெளியானபோது நீட் தேர்வு வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு 67 பேர் முழு மதிப்பெண்கள் பெற்றது பெரும் சந்தேகத்தைக் கிளப்பியது.

NEET

மேலும் இதில், ஒரே தேர்வு மையத்தில் தேர்வெழுதிய 6 பேர் முழு மதிப்பெண்கள் பெற்றதும், பலர் 719, 718 மதிப்பெண்கள் பெற்றதும் சர்ச்சையைக் கிளப்பின. இவை, வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண்கள் வழங்கியதில் முறைகேடு என பல்வேறு குளறுபடிகள் நடந்திருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் குவிய வழிவகுத்தன.

மறுபக்கம் இது தொடர்பாக விசாரணையை மேற்கொண்ட சிபிஐ அதிகாரிகள், வினாத்தாள் கசிவு தொடர்பாக பீகாரில் சிலரைக் கைதுசெய்தனர். பின்னர், நீட் விவகாரம் தொடர்பாகத் தாக்கல்செய்யப்பட்ட 38 மனுக்களை ஒன்றாகச் சேர்த்து விசாரித்த உச்ச நீதிமன்றம், `வினாத்தாள் கசிந்திருக்கிறது. இதனால் பலனடைந்தவர்கள் யார் என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு இது பரவியிருந்தால் மறுதேர்வு நடத்தவேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று கூறியது.

NEET - உச்ச நீதிமன்றம்

மத்திய அரசோ மறுதேர்வு நடத்தக் கூடாது என மறுப்பு தெரிவித்துவருகிறது. இந்த நிலையில், வினாத்தாள் கசிவு தொடர்பாக, பாட்னா எய்ம்ஸ் மருத்துவர்கள் மூன்று பேரை சிபிஐ தற்போது கைதுசெய்திருக்கிறது.

சிபிஐ

பேப்பர் சால்வர் (paper solver) கும்பலுடன் இவர்களுக்கு தொடர்பிருப்பதாக சந்தேகத்தின் பேரில் சிபிஐ இந்த நடவடிக்கை எடுத்திருக்கிறது. தற்போது இதில் விசாரணை நடத்திவரும் சிபிஐ அதிகாரிகள், அவர்கள் தங்கியிருந்த விடுதி அறைகளுக்கு சீல் வைத்து, அவர்களின் செல்போன்கள் மற்றும் மடிக்கணினிகளைப் பறிமுதல் செய்திருக்கின்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.