`சுமைதூக்கும் பணி 2,200 இடங்களுக்கு முட்டி மோதிய 25,000 பேர்... கடைசியில் நடந்த ட்விஸ்ட்!

ஏர் இந்தியாவில் சுமை தூக்கும் பணிக்கு பட்டதாரிகள் உள்பட 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் விண்ணப்பங்களுடன் முட்டி மோதினர். கட்டுக்கடங்காத கூட்டத்தால், கடைசியில் நேர்காணலையே ஏர் இந்தியா நிர்வாகம் ரத்து செய்தது.

இந்தியா, பொருளாதாரத்தில் முன்னேறி வருகிறது; உலகின் 5-வது பெரிய வல்லரசு என்று நாம் சொல்லிக் கொண்டாலும், நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் என்பது தொடர்கதையாகவே உள்ளது. படித்த இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரித்தாலும் அதற்கேற்ப வேலைவாய்ப்புகள் பெருகவில்லை என்பது நிதர்சனமான உண்மை.

சுமைதூக்கும் காலி பணியிடங்களுக்கு போட்டி.

இதை தோலுத்துக் காட்டும் வகையில், மும்பை ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் நடந்த நிகழ்வு மெய்ப்பித்துள்ளது. மும்பை விமான நிலையத்தில் பயணிகளின் உடமைகளை எடுத்துச் செல்லுதல், உணவுகளை விமானங்களுக்கு எடுத்துச் செல்லும் பணி போன்ற 2,216 சுமைதூக்கும் காலி பணியிடங்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெற உள்ளதாக, ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்தது.

தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு, 3 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் மாதம் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை ஊதியம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த நேர்காணலுக்கு, முதல்நாள் இரவே ஆயிரக்கணக்கானோர், நேர்காணல் நடைபெறும் அலுவலகம் வாயில் முன்பு திரளத் தொடங்கினர்.

சுமைதூக்கும் காலி பணியிடங்களுக்கு போட்டி.

நேரம் செல்லச்செல்ல கையில் சான்றிதழ்களுடன் ஏராளமான இளைஞர்கள் குவிந்தனர். கட்டுக்கடங்காத கூட்டத்தால் அப்பகுதியே பரபரப்பானது. வேலைத்தேடி வந்த இளைஞர்கள் சிக்கித்தவிக்க, அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நிலைமை எல்லை மீறிச் செல்வதை அறிந்த, நேர்காணலுக்கு ஏற்பாடு செய்திருந்த ஏர் இந்தியா நிறுவனம், திடீரென ஒரு முடிவெடுத்தது.

அதன்படி, நேர்காணல் ரத்து செய்யப்படுவதாகவும், விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தை அதற்குரிய பெட்டியில் போட்டுச் செல்லும்படி ஏர் இந்தியா நிர்வாகம் அறிவித்தது. இதையடுத்து, நேர்காணல் கனவில் இருந்த இளைஞர்கள், ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள எதிர்க்கட்சிகள், வேலை தேடி வந்த இளைஞர்களின் கூட்டம் தொடர்பான வீடியோக்களை பகிர்ந்து, அரசை விமர்சித்து வருகின்றன.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.