பயறு, எண்ணெய் வித்து சாகுபடிக்கு மாறினால் ஹெக்டேருக்கு ரூ.35,000... அரசு சொல்வதென்ன?
பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் அதிகளவு ரசாயன உரங்கள் பயன்பாட்டால் விளைநிலங்கள் நஞ்சாகி வருகின்றன. அதோடு அதிகளவு தண்ணீரை உறிஞ்சி வருகின்றன. விளைநிலங்கள் பாழாவதை தடுக்கவும், சுற்றுச்சூழல் பேராபத்திலிருந்து காக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் மத்திய, மாநில அரசுகள் உள்ளன.
இதற்குத் தீர்வு காணும் பொருட்டு வேளாண் கொள்கைகளை மறுசீரமைக்க ஏதுவாக, சர்வதேச பொருளாதார உறவுகளுக்கான இந்தியன் கவுன்சில் (ICRIER-Indian Council for Research on International Economic Relations) நிபுணர்கள் குழு, தனது பரிந்துரைகளை அரசுக்கு வழங்கியுள்ளது.
பொருளாதார வல்லுநர் அசோக் குலாட்டி தலைமையிலான குழு தனது பரிந்துரைகளில், ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் காரீப் பருவத்தில் நெல் சாகுபடியை கைவிட்டு, பயறு மற்றும் எண்ணெய் வித்து சாகுபடிக்கு மாறும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.35,000 ரூபாயை நேரடியாக வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

பயிர் பல்வகைப்படுத்துதல் மூலம் 5 ஆண்டுகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையில் பயறு மற்றும் எண்ணெய் வித்து பயிர்களை கொள்முதல் செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ள குலாட்டி குழு, விவசாயிகளுக்கான ஊக்கத்தொகையை மத்திய மற்றும் மாநில அரசுகள் சமமாக பிரித்து அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
நெல் சாகுபடியிலிருந்து மாற்றுப் பயிர் சாகுபடிக்கு மாறுவதன் மூலமாக அதிகளவில் உறிஞ்சப்பட்டு வரும் நீர், ரசாயன உர நுகர்வு உள்ளிட்டவை கணிசமாகக் குறையும். நெல் சாகுபடி செய்யும்போது ஒரு ஹெக்டேருக்கு சுமார் 5 டன் கரியமில வாயு வெளியேற்றப்படுகிறது.

பஞ்சாப்- ஹரியானா மாநிலங்களில் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், பொருளாதாரம் நிலைத்த தன்மையுடையதாக இருக்கவும், மாற்றுப்பயிர் சாகுபடிக்கு மாறுவது அவசியம். அந்த வகையில் 12-14 லட்சம் ஹெக்டேர் நெல் சாகுபடி நிலங்கள், எண்ணெய் வித்துகள், பயறு வகைகள் சாகுபடிக்கு மாற வேண்டும் என்றும் நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.
இந்தப் பரிந்துரைக்கு அரசு என்ன சொல்லும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


