`மீன்களை விட கழிவுகளின் அளவு கடலில் அதிகரிக்கும் அதிர வைக்கும் தரவு... கைகோர்த்த அமைப்புகள்!
உலகளவில், சுற்றுச்சூழல் நாளுக்குநாள் மோசமாகி வருகிறது. மனித சமுதாயத்தின் பொறுப்பற்ற நடவடிக்கைகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு, பருவநிலை மாற்றம் உருவாகி, அதன் தாக்கங்களை பிற உயிரினங்களும் அனுபவிக்க நேரிடுகிறது.
அந்த வகையில் உலகின் குப்பைத் தொட்டியாக கடல் மாறிக் கொண்டே இருக்கிறது. கடலில் எண்ணற்ற கழிவுகள் கலந்து வருவதால், கடல்வாழ் உயிரினங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டு வருகின்றன.
தரவுகளின்படி, 2050-ம் ஆண்டுகளில் கடலில் உள்ள மொத்த மீன்களின் எடையைவிட, பிளாஸ்டிக் கழிவுகளின் எடை அதிகமாக இருக்கும். கடல் உணவுகள், குடிநீர், உணவு, காற்றின் மூலம் ஒரு சராசரி மனிதன் வாரந்தோறும் ஒரு கிரெடி கார்டு அளவிற்கு பிளாஸ்டிக் உட்கொள்கிறான் என்று தகவல் வெளியாகியுள்ளது.
2050-ம் ஆண்டுக்குள் ஒட்டுமொத்த கடல் பறவை இனங்களில் 99% கடலில் உள்ள பிளாஸ்டிக்கை உட்கொண்டிருக்கும் என்று, ஓஷன் கிளீன்அப் அமைப்பின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே தான், பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகள் கடலை தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகின்றன.
கடலை சுத்தம் செய்வது என்பது 2 வகையான நடவடிக்கைகளை உள்ளடக்கியது. ஒன்று, கடலில் ஏற்கெனவே இருக்கும் கழிவுகளை அகற்றுவது; மற்றொன்று கடலில் கழிவுகளை கொண்டு சேர்க்கும் நதிகளை தூய்மைப்படுத்துவது.
இந்நிலையில், இரண்டாவதாக உள்ள நதிகளை தூய்மைப்படுத்துவது மிகவும் அவசியமான ஒன்று. நம் நாட்டில் உள்ள நதிகள், முக்கிய நீர்நிலைகளை தூய்மைப்படுத்தும் பணியில், பாரத் கிளீன் ரிவர்ஸ் அறக்கட்டளை (BCRF), ஓஷன் கிளீன்அப் (Ocean CleanUp) ஆகிய அமைப்புகள் இணைந்துள்ளன. அதன் தொடக்கமாக மகாராஷ்டிராவின் மும்பையில் நீர்நிலைகளை தூய்மைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மும்பை பெருநகரப் பிராந்தியத்தில் பிளாஸ்டிக் மாசுபாட்டை குறைக்கவும், புதிய திட்டங்களை உருவாக்கவும், DialESG மற்றும் West Coast Marine Yacht Services ஆகிய அமைப்புகள், பாரத் க்ளீன் ரிவர்ஸ் அறக்கட்டளைக்கு பங்களிப்பு செய்ய முன்வந்துள்ளன. இதுதொடர்பான ஒப்பந்தம், 2024 ஜனவரியில் கையெழுத்தாகின.
ஒப்பந்த காலமான 10 ஆண்டுகளில், இந்தியா முழுவதும் உள்ள நதிகளில் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் பாரத் கிளீன் ரிவர்ஸ் அறக்கட்டளையின் பணிகளில், ஓஷன் க்ளீன் அமைப்பின் பிளாஸ்டிக் கலப்பு தொடர்பாக ஆராய்ச்சிகளும் நிபுணத்துவமும் கைகொடுக்கும்.

ஓஷன் கிளீன் ஆராய்ச்சி தரவுகளின்படி, மாசுபட்ட 1,000 நதிகளில் 144 இந்தியாவில் உள்ளன. அதில் 47 மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கின்றன. அவற்றில் 13 நதிகள் மும்பை மற்றும் அதைச் சுற்றி இருக்கின்றன. பாரத் கிளீன் ரிவர்ஸ் அறக்கட்டளை கடல் சுற்றுச்சூழல் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது. இதன்மூலம், கழிமுகங்கள் பழைய நிலைக்கு திரும்புவதோடு, நிலையான மீன்பிடித்தலுக்கும் வழிவகுக்கும்.
கடலிலிருந்து பிளாஸ்டிக்கை ஒழிப்பதே தங்களது நோக்கம்; மிகவும் மாசுபடுத்தும் நதிகளிலிருந்து பெருங்கடல்களில் பிளாஸ்டிக் உமிழ்வைக் குறைப்பது அதில் ஒரு முக்கிய பகுதி என்கிறது பாரத் க்ளீன் ரிவர்ஸ் ஃபவுண்டேஷன்.
இந்த பூமியில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. நதிகளை மாசுபடுத்துதல் இங்கு அதிகம். எனவே, அதை தூய்மைப்படுத்தும் பணியை இங்கு தொடங்குவது மிக அத்தியாவசியமானது; வரவேற்கத்தக்கது என்று தெரிவிக்கின்றன சூழல் அமைப்புகள்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


