15 போலி பேஸ்புக் ஐடி-க்கள்; பெண்களுக்கு அனுப்பிய ஆபாச வீடியோ... சிக்கிய தூத்துக்குடி வியாபாரி!

சேலம் மாவட்டம், காடையாம்பட்டியைச் சேர்ந்த பா.ஜ.க பெண் நிர்வாகி ஒருவர், கடந்த சில நாள்களுக்கு முன்பு சேலம் மாவட்ட சைபர் க்ரைம் போலீஸில் புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார். அதில், `எனது பேஸ்புக்கிற்கு மர்ம நபர் ஒருவர் கடந்த சில நாள்களாக தொடர்ந்து ஆபாச மெசேஜ், ஆபாச படங்கள்,  வீடியோக்களை அனுப்பி வருகிறார். அந்த நபரின் ஐ.டியை பிளாக் செய்தும்  வேறு வேறு ஐ.டிக்களில் இருந்து தொடர்ந்து ஆபாச வீடியோக்களை அனுப்பி தொல்லை கொடுக்கிறார். அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.

கைது செய்யப்பட்ட சபரீஷ்குமார்

இந்தப் புகாரைப் பற்றி சேலம் சைபர் க்ரைம் பிரிவு ஆய்வாளர்  ஹேமாவதி தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் புகார் அளித்த பா.ஜ.க பெண் நிர்வாகிக்கு ஆபாச மெசேஜ், வீடியோக்களை அனுப்பி தொல்லை கொடுத்தவர் கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரத்தைச் சேர்ந்த சபரீஷ்குமார் என்பது தெரிய வந்தது.  

இதனையடுத்து அவரைப் பிடிக்க க்ரைம் பிரிவு தனிப்படை போலீஸார்,  கன்னியாகுமரிக்கு விரைந்தனர். ஆனால், அங்கு சபரீஷ்குமார் இல்லை. அவர், தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளையும் பிரிந்து தூத்துக்குடி மாவட்டம், காயாமொழி பகுதியில் தனியாக வசிப்பதும் அங்கு, மளிகைக்கடை மற்றும் இண்டெர்நெட் சென்டர் நடத்தி வருவதும் தெரிய வந்தது. இதனையடுத்து  காயாமொழிக்கு விரைந்த தனிப்படை போலீஸார், சபரீஷ்குமாரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பா.ஜ.க பெண் நிர்வாகிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியது உறுதிபடுத்தப்பட்டது. 

சேலம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்

இதனையடுத்து அவரை கைதுசெய்த தனிப்படை போலீஸார் சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். சேலம் மாவட்டக்ரைம் பிரிவு தனிப்படை போலீஸாரிடம் பேசினோம், “கருத்து வேறுபாட்டினால் தனது மனைவியைப் பிரிந்த சபரீஷ்குமார், தனிமையில் இருந்ததால் பேஸ்புக்கில் அதிக நேரத்தை செலவிட்டு வந்துள்ளார். அப்போது பெண்களை தனது நண்பர்களாக சேர்த்துக் கொண்டு, அவர்களுக்கு  முதலில் நலம் விசாரிப்பது போல் மெசேஜ் அனுப்பியுள்ளார்.

பின்னர், தனிப்பட்ட முறையில் படங்களை அனுப்பி வைத்துள்ளார். குறிப்பாக மார்பிங் செய்யப்பட்ட நடிகைகளின்  புகைப்படங்களை குறிப்பிட்ட ஐ.டியில் இருக்கும் பெண்களின் புகைப்படங்களை எடுத்து மார்பிங் செய்து அதனை ஆபாசமாக சித்தரித்து பதிவிட்டு வந்துள்ளார். அதே போல பல பெண்களுக்கு ஆபாச வீடியோக்களையும் அனுப்பி வைத்துள்ளார். இதனால், பலரும் அந்த ஐ.டி-க்களை  பிளாக் செய்துள்ளனர். ஒரு ஐ.டி-யை பிளாக் செய்தால் மற்றொரு ஐ.டி-யில் இருந்து ஆபாச படங்கள், வீடியோக்களை தொடர்ந்து அனுப்புவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.  

சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்

இப்படியாக 15 ஐ.டி-க்களில் இருந்து அனுப்பி வந்துள்ளார். அப்படித்தான் புகார் அளித்த பா.ஜ.க-வைச் சேர்ந்த பெண் நிர்வாகிக்கும் தொடர்ந்து அனுப்பியுள்ளர். இதில், பெரும்பாலான பெண்கள் புகார் அளிக்காமல் ஐ.டி-க்களை மட்டுமே பிளாக் செய்துள்ளனர். பா.ஜ.க நிர்வாகியின் புகாரால் சபரீஷ்குமார் சிக்கியுள்ளார். இது போன்று தொல்லைகள் ஏற்பட்டால் பெண்கள் தைரியமாக புகார் அளிக்க முன்வர வேண்டும். ” என்றனர்.        

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.