ரூ.100 கோடி நிலமோசடி: எம்.ஆர்.விஜயபாஸ்கர் சிக்கிய வழக்கில் கைதான காவல் ஆய்வாளர்!
ரூ. 100 கோடி மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்த வழக்கில், கடந்த ஒருமாதத்துக்கும் மேலாக தலைமறைவாக இருந்து வந்த முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு உதவியதாக வில்லிவாக்கம் காவல் நிலைய ஆய்வாளரையும் சி.பி.சி.ஐ.டி போலீஸார் கைது செய்துள்ளனர்.
கரூர் வாங்கல் அருகே உள்ள காட்டூர் பகுதியில் சேர்ந்தவர் தொழிலாதிபர் பிரகாஷ். இவர், தோரணக்கல்பட்டியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட இருந்த பகுதி அருகே தனக்குச் சொந்தமான ரூ. 100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை, போலி ஆவணம் கொடுத்து அதன்மூலம் மூலம் பத்திரப்பதிவு செய்துள்ளதாக, கரூர் நகர காவல் நிலையத்தில் கடந்த ஜூன் 14 - ம் தேதி புகார் ஒன்றை அளித்தார். அதோடு, இவரைப்போலவே மேலக்கரூர் சார்பதிவாளர் (பொறுப்பு) முகமது அப்துல் காதர், போலி ஆவணங்கள் கொடுத்து பத்திரபதிவு செய்ததோடு, தனக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அளித்த புகார் அடிப்படையில், கரூர் நகர காவல் நிலைய போலீஸார் 7 பிரவீன், செல்வராஜ், மாரப்பன் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்த நிலையில், சி.பி.சி.ஐ.டி போலீசாரிடம் ஜூன் 18-ம் தேதி இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டது.
இதற்கிடையில், எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரின் சகோதரர் சேகர் உள்ளிட்டவர்கள் தலைமறைவானார்கள். இதன் பின்னர், கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் -1 நீதிமன்றத்தில், எம்.ஆர்.விஜயபாஸ்கர் மூன்றுமுறை கோரி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதால், கடந்த 34 நாள்களுக்கு மேல் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவாக இருந்து வந்தார். அவரைப் கைது செய்வதற்காக சி.பி.சி.ஐ.டி தரப்பில் 13 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. கேரளா, கொடைக்கானல், வடமாநிலங்கள் என்று பல்வேறு இடங்களுக்கு அவரை தேடி சி.பி.சி.ஐ.டி தனிப்படை போலீஸார் பயணித்தனர்.
இதற்கிடையில், முதலில் புகார் கொடுத்த தொழிலதிபர் பிரகாஷ் வாங்கல் பகுதியை பூர்வீகமாக கொண்டவர் என்பதால், அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வாங்கல் காவல் நிலையத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரின் சகோதரர் சேகர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், கரூரில் உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நெருக்கமானவர்கள் தொடர்புடைய இடங்களில் இரண்டு முறை சி.பி.சி.ஐ.டி போலீஸார் சோதனை மேற்கொண்டனர். தலைமறைவாக இருந்து வந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்பு, முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாகல் செய்தது.
இந்நிலையில், நேற்று கேரள மாநிலம் திருச்சூர் பகுதியில் உள்ள தனியார் விடுதியில், தங்கி இருந்தபோது, எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் நில மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள தொழிலதிபர் பிரகாஷின் உறவினர் பிரவீன் ஆகிய இருவரையும் கைது செய்து, கரூர் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்திற்கு மதியம் 2 மணி அளவில் அழைத்து வந்தனர். கரூர் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் வைத்து ஆறு மணி நேரத்துக்கு மேலாக, சி.பி.சி.ஐ.டி போலீஸார் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் விசாரணை நடத்தினர். இரவு 8 மணி அளவில் கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் பிரவீன் ஆகிய இருவரையும் போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வந்தனர். இதனை அறிந்து அ.தி.மு.க-வினர் அங்கு கூடி தி.மு.க அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
பின்னர், மருத்துவ பரிசோதனை முடிந்து, எம்.ஆர்.விஜயபாஸ்கரை அழைத்துச் சென்ற பொழுது, செய்தியாளர்களை பார்த்து எம்.ஆர்.விஜயபாஸ்கர், "என் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பதியப்பட்டுள்ள வழக்கு இது. நீதிமன்றம் மூலம் இதை சந்திப்பேன்" என்று கூறினார். இதன் பின்னர், மீண்டும் சி.பி.சி.ஐ.டி அவர்களை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்ற போலீஸார் நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் கரூர் குற்றவியல் நடுவர் எண்-1 நீதிபதி பரத்குமார் முன்பு, ஆஜர்படுத்தினர். வரும் ஜூலை 31-ம் தேதி வரை அவர்களை திருச்சி மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன் பின்னர் உரிய போலீஸ் பாதுகாப்புடன் போலீஸார் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் பிரிவீன் ஆகிய இருவரையும் திருச்சி மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர்.
இதனிடையே, எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் நீதிமன்றத்திற்கு அழைத்து வர கூடுமென தெரிந்து, நேற்று மாலை நூற்றுக்கணக்கான அ.தி.மு.க-வினர் அங்கு கூடியிருந்ததால், நீதிமன்றத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. இதனிடையே, தொழிலதிபர் பிரகாஷ் தனது மகளுக்கு 22 ஏக்கர் நிலத்தை தான செட்டில்மென்ட் எழுதிதந்த ஆவணம் தொலைந்துவிட்டதாக கூறி சான்றிதழ் வழங்கிய வில்லிவாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் பிரித்திவிராஜை சி.பி.சி.ஐ.டி போலீஸார் கைது செய்துள்ளனர். ரூ. 100 கோடி மதிப்பிலான நிலமோசடி வழக்கில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் பிரவீன் ஆகியோர் கைது செய்யப்பட்டிருப்பது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


