Manorathangal: ஆசிஃபிடம் விருது பெற மறுத்ததால் எழுந்த சர்ச்சை; இசையமைப்பாளர் ரமேஷ் நாராயண் விளக்கம்!

மலையாள திரையுலகின் மூத்த இசையமைப்பாளரான ரமேஷ் நாராயண், நடிகர் ஆசிஃப் அலி கையால் அவருக்குக் கொடுக்கப்பட்ட விருதை வாங்க மறுத்த சம்பவம் சர்ச்சையைக் கிளப்பி இருந்தது. இந்நிலையில் ரமேஷ் நாராயண் இது குறித்து விளக்கமளித்திருக்கிறார்.

மலையாள இலக்கியத்தின் மூத்த எழுத்தாளராகவும் திரைக்கதை ஆசிரியராகவும் அம்மாநிலத்தைத் தாண்டு நாடு முழுவதும் புகழ்பெற்றவர் எம்.டி.வாசுதேவன். அவரின் பங்களிப்பைக் கொண்டாடும் விதமாகவும், அவருக்கு மரியாதை செய்யும் வகையிலும் ’மனோரதங்கள்’ என்ற ஆந்தாலஜி திரைப்படத் தொகுப்பு உருவாகப்பட்டுள்ளது. 9 படங்கள் இடம்பெற்றுள்ள இந்த ஆந்தாலஜினியில் மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களான மோகன் லால், மம்மூட்டி தொடங்கி பார்வதி, பஹத் பாசில், பிஜு மேனன் உள்ளிட்ட பல முக்கிய கலைஞர்கள் நடித்துள்ளனர்.

அண்மையில், இந்தப் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. 9 படங்களில் இயக்குநர் ஜெயராஜ் இயக்கிய ஒரு படத்துக்கு ரமேஷ் நாராயண் இசையமைத்திருக்கிறார். மலையாளத்தின் மூத்த இசையமைப்பாளரான இவர் ‘என்னு நிண்டே மொய்தீன்’ உள்ளிட்ட முக்கியமான படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் இந்த டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் ரமேஷ் நாராயணுக்கு விருது வழங்கப்பட்டது. அந்த விருதை மலையாள நடிகர் ஆசிஃப் அலி மேடையிலிருந்து இறங்கி வந்து இசையமைப்பாளர் ரமேஷ் நாராயண் அமர்ந்திருந்த இடத்துக்கே வந்து கொடுத்திருக்கிறார்.

அப்போது அந்த விருதை அவர் கையால் வாங்க மறுத்த ரமேஷ் நாராயண், அதற்குப் பதிலாக இயக்குநர் ஜெயராஜைக் கொடுக்கச் சொல்லி இருக்கிறார். நடிகர் ஆசிஃப் அலி அமைதியுடன் எந்தவித எதிர்வினையும் ஆற்றாமல் அந்த இடத்திலிருந்து நகர்ந்து சென்றார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி சர்ச்சையைக் கிளப்பி இருந்தது. பலரும் இசையமைப்பாளர் ரமேஷ் நாராயணுக்கு எதிராகக் கருத்துக்களைப் பகிர்ந்து வந்தனர்.

#Mammootty #Mohanlal #asifali #malayalam #rameshnarayanan .. Ramesh Narayanan fraud insulting Asif Ali pic.twitter.com/uoMf0CqAor

— കൊണാപ്പൻ (@keanappa1) July 16, 2024

இந்நிலையில் இது குறித்து விளக்கமளித்த ரமேஷ் நாராயண், "என்னை மேடைக்கு அழைக்காதது வருத்தமளிக்கிறது. ஆசிஃப் தான் எனக்கு விருது கொடுக்க வருகிறார் என்பது எனக்குத் தெரியாது. எனக்கு வயதாகிவிட்டது. ஒருவேளை மேடையில் ஏற்றப்பட்டு விருது கொடுக்கப்பட்டிருந்தால், என்னை நோக்கி யாரோ விருது கொடுக்க வருகிறார்கள் என்பதை அறிந்திருப்பேன். யாரையும் புண்படுத்துவது தனது நோக்கம் அல்ல. ஒரு நடிகராக அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருந்தால் அதற்கு வருந்துகிறேன். மன்னித்துக்கொள்ளுங்கள். உண்மையைப் புரிந்து கொள்ளாமல் சமூக வலைத்தளங்களில் எனக்கு எதிராகக் கருத்துக்களைப் பதிவிடுவது வருத்தமளிக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.