தொடர் சர்ச்சையால் பயிற்சி பணி நிறுத்தம் - மத்திய பயிற்சி மையத்துக்கு திரும்ப IAS பூஜா-வுக்கு உத்தரவு
புனேயில் பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த பூஜா கேட்கர், பணியாற்ரிய அலுவலகத்தில் பல்வேறு சலுகைகள் கேட்டு சர்ச்சையில் சிக்கினார். இந்த சர்ச்சை மட்டுமல்லாது அவர் பார்வை குறைபாடுள்ள மாற்றுத்திறனாளி என்று போலியாக கூறி வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு பெற்றிருந்தார் என்கிற குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது. இந்த சர்ச்சைகளால் புனேயில் இருந்து வாசிம் மாவட்டத்திற்கு மாற்றப்பட்ட பூஜா சாதிச்சான்றிதழிலும் குளறுபடி செய்து இருந்தார் என்கிறார்கள்.
தொடர் சர்ச்சையால் மத்திய அரசு அவர் மீதான புகார் குறித்து விசாரிக்க ஒரு நபர் கமிட்டி ஒன்றை நியமித்துள்ளது. அதோடு திடீர் திருப்பமாக வாசிம் பயிற்சி பணியை உடனே முடித்துக்கொண்டு ஐ.ஏ.எஸ்.பயிற்சி அகாடமிக்கு பயிற்சி அகாடமிக்கு திரும்பும் படி மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. மாநில அரசு கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் யு.பி.எஸ்.சி நிர்வாகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. முசோரியில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக பயிற்சி அகாடமிக்கு 23-ம் தேதிக்குள் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னதாக மாநில பொது நிர்வாகத்துறை பூஜாவிற்கு அனுப்பி இருக்கும் உத்தரவில், ``உங்களை மாவட்ட பயிற்சி திட்டத்தில் இருந்து விடுவித்து இருக்கிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முசோரி பயிற்சி அகாடமியில் பூஜா கொடுத்திருக்கும் சான்றுகள், குறிப்பாக பார்வைக்குறைபாடு உள்ளவர் என்று கூறி கொடுத்திருக்கும் சான்று குறித்து விசாரணை நடத்தப்படும் எனத் தெரிகிறது.
2018, 21ம் ஆண்டுகளில் அகமத்நகரில் வாங்கப்பட்ட மாற்றுத்திறனாளி சான்றை பூஜா தாக்கல் செய்துள்ளார். ஆனால் அதனை உறுதி செய்ய டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஆஜராகும்படி 2022-ம் ஆண்டு யு.பி.எஸ்.சி.நிர்வாகம் பூஜாவிற்கு உத்தரவிட்டது. ஆனால் பூஜா கொரோனாவை காரணம் காட்டி பரிசோதனைக்கு செல்லவில்லை. அப்படி இருந்தும் அவர் புனேயில் பயிற்சிக்காக உதவி மாவட்ட ஆட்சித்தலைவராக நியமிக்கப்பட்டார். ஆனால் அங்கு தனது தந்தையின் செல்வாக்கை பயன்படுத்தி தனி கார், தனி வீடு, தனி அலுவலகம் கொடுக்கவேண்டும் என்று கேட்டு சர்ச்சையில் சிக்கினார்.
அதனை தொடர்ந்தே அவர் மீதான பழைய புகார்கள் புத்துயிர் பெற்றது. இரண்டு நாட்களுக்கு முன்பு வாசிம் சென்று பூஜாவிடம் போலீஸார் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர். இதில் புனே மாவட்ட ஆட்சித்தலைவர் தன்னை துன்புறுத்தியதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். அவரது புகார் குறித்து விசாரிக்கப்படும் என்று போலீஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பூஜா பணியில் சேரும் முன்பு தனக்கு தனி கார், வீடு, அலுவலகம் கேட்டு புனே மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் யாரோ ஒரு அதிகாரியிடம் வாட்ஸ் ஆப்பில் சாட் செய்த ஸ்கிரீன் சாட் விபரங்கள் இப்போது வெளியாகி இருக்கிறது. பணியில் சேர 10 நாள்கள் இருக்கும் போது இந்த வாட்ஸ் ஆப் சாட்டிங் செய்திருந்தார். அதோடு பூஜாவின் தாயார் விவசாயிகளை துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.
இதனால் பூஜாவின் பெற்றோரும் தலைமறைவாக இருக்கின்றனர். மேலும் பூஜாவின் தந்தை திலிப் கேட்கர் சட்டவிரோதமாக மண்ணை அளவுக்கு அதிகமாக வெட்டி எடுத்தது தொடர்பாக 67 லட்சம் கொடுக்கவேண்டும் என்று கூறி புனே மாவட்ட நிர்வாகம் திலிப்பிற்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. மேலும் பூஜா தனது ஆடி காரில் சட்டவிரோதமாக சிவப்பு, ஊதா சைரன் விளக்கு பயன்படுத்தினார். அந்த கார் பதிவுக்கு கொடுக்கப்பட்ட ஆவணங்கள் சரியில்லை என்று கூறி கார் பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட ஆடி கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என சர்ச்சை மேல் சர்ச்சை வரிசை கட்டுகிறது.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


