100 நாள்களில் 100 புதிய விதை ரகங்கள், பண்ணை தொழில்நுட்பம்... களத்தில் இறங்கும் வேளாண் விஞ்ஞானிகள்!
இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ICAR), ஒரு விஞ்ஞானி ஒரு தயாரிப்பு திட்டத்தின் கீழ், 100 நாள்களில் 100 விதை ரகங்களை உருவாக்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
மத்திய அரசின் கீழுள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ICAR) விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்புத் துறையில் ஆராய்ச்சியை மேம்படுத்தும் நோக்கில், ஒரு விஞ்ஞானி-ஒரு தயாரிப்பு திட்டத்தை தொடங்கி இருக்கிறது. அண்மையில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய வேளாண்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின்படி, 100 நாள்களில் 100 புதிய விதை ரகங்களும், தட்பவெப்ப நிலையைத் தாங்கும் 289 பயிர் வகைகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. தானியங்கள், எண்ணெய் வித்துக்கள், தீவனப் பயிர்கள் மற்றும் கரும்பு உள்ளிட்ட 56 பயிர்களின் 323 ரகங்களை வெளியிடுவது தொடர்பான அறிவிப்பும் செய்யப்பட்டது.
இத்திட்டம் குறித்து பேசிய இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஏஆர்) இயக்குநர் ஹிமான்ஷு பதக் , "ஐ.சி.ஏ.ஆர் நிறுவனத்தின் கீழுள்ள 5,521 விஞ்ஞானிகளுக்கும் ஒரு தயாரிப்பு, ஒரு தொழில்நுட்பம் என்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதன்படி, ஒவ்வோர் ஆண்டின் தொடக்கத்திலும் விஞ்ஞானி அல்லது விஞ்ஞானிகள் குழுவானது, புதிய தயாரிப்பை அடையாளம் காண வேண்டும். ஒவ்வொரு மூன்று மாதத்துக்கும் ஒருமுறை நிறுவன அளவிலும், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை தலைமையக அளவிலும் விஞ்ஞானிகள் கண்காணிப்படுவர். இத்திட்டம் ஐந்து ஆண்டுகளுக்கு செயல்படும்" என்றார்.

அவர் மேலும் கூறுகையில், "100 நாள்களில் 100 புதிய விதை ரகங்கள் மற்றும் 100 பண்ணை தொழில்நுட்பங்களை உருவாக்க ஐ.சி.ஏ.ஆர் செயல்பட்டு வருகிறது. நடப்பாண்டு இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சில், அதிக மகசூல் தரும் எண்ணெய் வித்துக்கள் மற்றும் பயறு வகைகளுக்கான விதை மையங்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது" என்றார்.
விதைப்பெருக்கத்தின் கீழ், சுமார் 16 மில்லியன் ஹெக்டேர் நிலங்கள் பல்வேறு பயிர்களின் உயிரி செறிவூட்டப்பட்ட ரகங்களின் கீழ் உள்ளது. இதில், கோதுமை, அரிசி, சிறுதானியங்களும் அடங்கும் என ஐ.சி.ஏ.ஆர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2014-15 ஆம் ஆண்டு முதல் 2023-24 வரை மொத்தம் 2,593 அதிக மகசூல் தரக்கூடிய ரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றில் 2,177 காலநிலை மாற்றத்தை தாக்குப்பிடிக்கக் கூடியவை; 150 உயிரி செறிவூட்டப்பட்ட பயிர் வகைகள் அடங்கும் என்று இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சில் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


