Fly Me to the Moon: `அப்போலோ 11 மிஸ்ஸானால்? இது ஃபேக் லேண்டிங்கைப் படம்பிடிக்கும் குழுவின் கதை!
ரொமான்ஸ், காமெடி, பீரியட் டிராமா, கொஞ்சம் சயின்ஸ் எனப் பல ஜானர்களை உள்ளடக்கிய திரைப்படமாக உருவாகியிருக்கிறது `ஃப்ளை மீ டு தி மூன் (Fly Me to the Moon).
1955-ம் ஆண்டு அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான ஸ்பேஸ் ரேஸ் எனப்படும் விண்வெளி யுத்தம் தொடங்கியது. இந்த ரேஸில் 1967-ல் நிலவுக்கு மனிதனை அழைத்துச் செல்லும் முயற்சியை முதல் முதலில் மேற்கொண்ட அமெரிக்காவின் அப்போலோ 1 திட்டம் தோல்வியைத் தழுவியது. அதன் பிறகு சில பல முயற்சிகளுக்குப் பிறகு 1969-ல் அப்போலோ 11 திட்டத்தைக் கையில் எடுத்து நிலவுக்கு முதல் முறையாக மனிதனை அனுப்பி வெற்றி கண்டது. இந்த அப்போலோ 11 புராஜெக்ட்டின் கமாண்டர்தான் நீல் ஆம்ஸ்ட்ராங். இந்தச் சம்பவத்தை மையமாக வைத்துத்தான் இத்திரைப்படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர் க்ரெக் பெர்லாண்டி.
அப்போலோ 1 மிஷனில் தோல்வி கண்ட பிறகு நாசா அப்போலோ 11 புரொஜெக்ட்டில் அதிக கவனம் செலுத்துகிறது. ஒருவேளை இந்த மிஷனும் தோல்வி அடையும் சூழலுக்குச் சென்றால் செயற்கையான செட்களை அமைத்து நிலவில் மனிதன் காலூன்றுவதைப் போலப் போலியான படத்தை வெளியிட வேண்டுமெனத் திட்டமிடுகின்றனர். அந்த வகையில் ரஷ்யாவுக்கு முன்னமே நிலவில் கால் பதித்ததாய் காட்டிவிட முடியும் என்பதே அவர்களின் திட்டம். இந்த ஷூட்டிங் பணியை மார்கெட்டிங் நிபுணரான கெல்லி ஜோன்ஸிடம் (ஸ்கார்லெட் ஜோஹன்சன்) ஒப்படைக்கிறது நாசா.
அப்போலோ 11 நிலவில் தரையிறங்கிய கதையையும், இந்த ஷூட்டிங் கதை என்னவானது என்பதையும் சொல்கிறது இத்திரைப்படம்.
மார்கெட்டிங் நிபுணராக வரும் ஸ்கார்லெட் ஜோஹன்சன் தன் வேலையில் மட்டுமின்றி நடிப்பிலும் தந்திரங்களை வெளிப்படுத்தி ஜொலிக்கிறார். இந்த ஃபேக் மிஷனுக்கான பொறுப்புகளுடன் சுற்றி வரும் கெல்லி ஜோன்ஸாக கோபம், காதல் என அனைத்தையும் காட்டி அசத்துகிறார். நிலவில் தரையிறங்கும் போலியான படத்தை எடுக்கும் விளம்பரப் பட இயக்குநர் கதாபாத்திரத்தில் ஜிம் ராஷ் ரசிக்க வைக்கிறார். தனது பேச்சு நடையால் பார்வையாளர்களைக் கைதட்டிச் சிரிக்க வைத்துப் படத்தின் முக்கிய கதாபாத்திரமாகக் கோலோச்சுகிறார். கதையின் நாயகனாக சேனிங் டேடம் முகத்தில் இன்னும்கூட எக்ஸ்பிரஷன்களைக் கொண்டு வந்திருக்கலாம். இதைத் தாண்டி மற்ற கதாபாத்திரங்கள் அனைவரும் தங்களது வழக்கமான பணிகளை டீசன்ட்டாக செய்து கடந்து செல்கிறார்கள்.
நிஜமான வரலாற்றுச் சம்பவம் ஒன்றின் பின்னணியில் நடக்கும் புனைவு, அதனுள்ளே டார்க் காமெடி, ரொமான்ஸ் என ஒரு வித்தியாசமான முயற்சியாக இருக்கிறது படத்தின் கதைக்கரு. அமெரிக்கா - ரஷ்யா இடையேயான விண்வெளி யுத்தம் அமெரிக்காவை எந்தளவுக்கு எல்லாம் யோசிக்க வைத்திருக்கும் என்ற ஜாலி கற்பனையே இதன் மையம் எனலாம்.
நீண்ட உரையாடல் காட்சிகளை உள்ளடக்கி வெவ்வேறு டிராக்குகளில் பயணிக்கும் முதல் ஒரு மணி நேரம் ஜவ்வா......க இழுத்து அயர்ச்சியை உண்டாக்குகிறது. கதை பயணிக்கும் சூழலுக்கு ஏற்றவாறு சில சுவாரஸ்யமான விஷயங்களையும் திரைக்கதையாசிரியர் ரோஸ் கில்ராய் சேர்த்திருந்தால் இந்த முதல் ஒரு மணி நேரத்தை இன்னும் சுறுசுறுப்பாக மாற்றியிருக்கலாம். ஆனால், அதற்கு நிவர்த்தி செய்யும் விதமாக அடுத்த ஒரு மணி நேரத்தைக் கச்சிதமாக வடிவமைத்திருக்கிறார். அடுத்தடுத்து என்னென்ன விஷயங்கள் நிகழப் போகின்றன எனப் பார்வையாளர்கள் பரபரக்கும் அளவுக்குப் பரபரப்பாக எழுதி சுவாரஸ்யப்படுத்தியிருக்கிறார். இதைத் தாண்டி நையாண்டியான அரசியல் வசனங்கள் பலவும் சிரிக்க வைக்கின்றன. அதே சமயம் எமோஷனல் வசனங்களும் முக்கியமான காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கின்றன.
காமெடி டிராமா படங்களுக்குப் பெயர் போன இயக்குநர் க்ரெக் பெர்லாண்டி இத்திரைப்படத்தின் மூலம் மீண்டும் தனது டிரேட்மார்க்கை ஆழமாகப் பதிவு செய்திருக்கிறார்.
பீரியட் படங்களில் காட்சிப்படுத்த வேண்டிய அப்போதைய காலத்தின் பொருள்களுடைய செட், ஆடை எனப் பல விஷயங்கள் படக்குழுவுக்கு மிகப்பெரிய சவால். இதில் ஏதேனும் சிறு தவறு நிகழ்ந்தாலும் அவர்கள் எடுக்கும் புனைவு படம் போல இதுவும் ஸ்பூஃப் படமாகியிருக்கும். அந்த சேதாரத்துக்கு வாய்ப்பளிக்காமல் அத்தனை வேலைகளையும் நுணுக்கமாகக் கவனித்து 1960-களின் அமெரிக்காவை அப்படியே கண் முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது படக்குழு.
ராக்கெட், ஜெட் எனப் பறந்து பறந்து அழகாகப் படம்பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் டேரியஸ் வொல்ஸ்கி. படத்தொகுப்பாளர் ஹாரி ஜியர்ஜியன் படத்தின் முதல் ஒரு மணி நேரத்தை இன்னும் கண்டிப்புடன் கத்தரித்திருக்கலாம்.
அப்போலோ 11 விண்கலத்தை நிலவில் தரையிறக்கியது அமெரிக்காவின் வரலாற்றில் ஒரு முக்கியமான சம்பவம். அந்தக் காட்சியையும் படத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால், அந்தக் காட்சியை வலுவான எமோஷனுடன் கடத்துவதற்கு வேண்டிய பின்னணி இசையில் கோட்டைவிட்டிருக்கிறார் இசையமைப்பாளர் டேனியல் பெம்பர்டன். ஏவுதள காட்சிகளில் கிராபிக்ஸை நம்பாமல் லைவ்வாக படம்பிடித்த படக்குழுவுக்குக் கைதட்டல்களைக் கொடுக்கலாம்.
சரியாக விண்ணில் பாய்ந்த இந்த `Fly Me to the Moon, சில இடங்களில் தடம் மாறினாலும் இறுதியாக ஸ்மூத் லேண்டிங் செய்ததை எண்ணிப் பாராட்டலாம்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


