தூத்துக்குடி: பணம் கொடுக்கல் வாங்கலில் முன்விரோதம்... வாய்த்தகராறு - கொடூரமாக கொல்லப்பட்ட இளைஞர்!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள  மூப்பன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாடசாமி. இவர் தனக்கு சொந்தமான டூரிஸ்ட் வேன் மூலம் தனியார் மில்லுக்கு தொழிலாளர்களை பணிக்கு அழைத்து சென்று வரும் பணியை செய்து வந்தார்.  இவருக்கு மகாதேவி என்ற மனைவி, மகாஸ்ரீ என்ற மகள் மற்றும்  மதி என்ற மகன் உள்ளனர். பணியை முடித்து விட்டு தினமும் இரவு 9 மணிக்கு வீடு திரும்புவது வழக்கம்.

கொலை செய்யப்பட்ட மாடசாமி

நேற்று இரவு வெகுநேரமாகியும் மாடசாமி வீட்டுக்கு வரவில்லை. அவரது மொபைலும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.  இதையடுத்து அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்த நிலையில் மூப்பன்பட்டி கிராமத்து சுடுகாட்டின் எரியூட்டும் தகன மேடையில் உடலில் பல இடங்களில் கொடூரமான வெட்டுக் காயங்களுடன் மாடசாமி கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்துள்ளார். இன்று பகலில் சுடுகாட்டுப் பகுதி வழியாக சென்றவர்கள் பார்த்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கூறியுள்ளனர். 

கொலை செய்யப்பட்டு கிடந்த மாடசாமியின்  உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இக்கொலை சம்பவம் தொடர்பாக கிழக்கு காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், கொலையான மாடசாமிக்கும் அப்பகுதியைச் சேர்ந்த கோபி என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கடந்த  ஒரு வாரத்துக்கு முன்பு கோபி வீட்டுக்கு சென்று மாடசாமி தகராறில் ஈடுபட்டுள்ளார்.

கொலைச் சம்பவம் நடந்த சுடுகாட்டு தகன மேடை

அப்போது மாடசாமி,  கோபியை அடித்து உதைத்தாராம். இருவரின் தகராறை அப்பகுதியினர் தடுத்து நிறுத்தி இருவருக்கும் அறிவுரை கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கோபி, நேற்று இரவு மாடசாமியை வழிமறித்து சுடுகாட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று சரமாரியாக வெட்டி கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தனிப்படை போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.