குடமுழுக்கு விழாவில் பேனர் வைத்த விவகாரம்; 2 தரப்பு மோதிக்கொண்டதில் 42 பேர்மீது வழக்கு, 9 பேர் கைது!
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே பொய்யாமணி கிராமத்தில் உள்ள மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்த விழாவையொட்டி, ஒரு தரப்பு வைத்த பேனரை மாற்று சமூகத்தினர் கிழித்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால், இரு தரப்புக்கு இடையில் பிரச்னை ஏற்பட்டது. இதில், பேனரை கிழித்த தரப்பினர், பேனர் வைத்தவர்கள் கட்டை, கற்கள் மற்றும் குச்சிகளை கொண்டு தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட பிரச்னையில், இரு தரப்பினரும் மாறி மாறி கட்டை, கற்களால் தாக்கிய சம்பவத்தில் காயமடைந்த 13 பேர் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக குளித்தலை காவல் நிலையத்தில் பொய்யாமணி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சிவபிரகாஷ் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் அதே பகுதியைச் சேர்ந்த மாற்று சமூகத்தைச் சேர்ந்த மகாலிங்கம், கணேசன், பிரசன்னா, கதிரவன், ராஜலிங்கம், அரவிந்த், யுவராஜ், பரத், நவநீதன் ஆகிய 9 பேரை குளித்தலை காவல் நிலைய போலீஸார் கைது செய்துள்ளனர். அதேபோல், பொய்யாமணி கடைவீதியில் பெட்டிக்கடை நடத்தி வரும் ராஜா (53) என்பவர் அளித்த புகாரில் கடந்த 14-ம் தேதி நடந்த இருவேறு சமூகத்திற்கு இடையே ஏற்பட்ட பிரச்னையில் கடையில் இருந்த ராஜாவிடம் ஒரு சமுதாயத்தைச் சேர்ந்தோர் ஒன்று கூடி தகாத வார்த்தையால் திட்டி, `உனது மகன் யுவராஜ் எங்கடா? என கேட்டு கையால் அடித்து கல்லால் கடை முன்புறம் மற்றும் வீடு ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து சேதம் ஏற்படுத்தி கொலை மிரட்டல் விடுத்து தப்பி ஓடிவிட்டதாக ராஜா குளித்தலை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அதன் பேரில், மற்றொரு சமுதாயத்தைச் சேர்ந்த ஜெயபிரகாஷ், தர்மராஜ், ராஜேஷ், கார்த்திக், சந்திரசேகர், பெரியசாமி, ராஜா, சோமன், காளிமுத்து, மயில், முருகானந்தம், கனகராஜ் ஆகிய 12 பேர் மீது போலீஸார் இன்று வழக்கு பதிவு செய்துள்ளனர். மொத்தமாக, இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட கலவரம் தொடர்பாக, இரு தரப்பைச் சேர்ந்த 42 பேர் மீது குளித்தலை காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து, அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் குளித்தலை டி.எஸ்.பி செந்தில்குமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோயில் கும்பாபிஷேகத்தின்போது பேனர் வைத்ததில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட கலவரத்தில் 42 பேர்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ள சம்பவம், குளித்தலைப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


