எழுத்தாளர் வீட்டில் திருட்டு: உண்மை தெரிந்ததும் திருடன் செய்த `செயல்... வைரலாகும் மன்னிப்பு கடிதம்!

திருடர்கள் சில நேரம் திருடிய பொருள்களை எடுத்துச் செல்லும்போது, மன்னிப்பு கடிதம் எழுதி வைத்துவிட்டுச் செல்வது வழக்கம். அது போன்ற ஒரு திருடன் மும்பையில் திருடிய பொருள்களைக் கொண்டுவந்து கொடுத்துவிட்டு மன்னிப்பு கடிதமும் எழுதிவைத்துவிட்டுச் சென்றுள்ளான். மும்பை நெரூல் பகுதியில் நாராயண் சுர்வே என்ற மராத்தி எழுத்தாளர் வசித்து வந்தார். அவர் முதுமை காரணமாக 2010-ம் ஆண்டே இறந்துவிட்டார். அவரது வீட்டில் அவரது மகள் வசித்து வருகிறார். நாராயண் மகள் சுஜாதா தனது கணவர் மற்றும் மகனுடன் 10 நாள்கள் வீட்டை பூட்டிவிட்டு வெளியில் சென்றார். அந்த நேரத்தில் வீட்டிற்குள் ஒரு திருடன் புகுந்து உள்ளே இருந்த பொருள்களை திருடிச் சென்றான். முதல் நாள் திருடிவிட்டு இரண்டாவது நாளும் மேலும் சில பொருள்களை எடுத்துச் செல்வதற்காக திருடன் வந்தான். அவ்வாறு வந்த போது அங்கு நாராயண் சுர்வேயின் போட்டோவை பார்த்தான்.

நாராயண்

அதோடு நாராயண் சுர்வே பெற்ற பரிசுகள் இருந்தது. அதனை முழுமையாக பார்த்த திருடன், பிரபல எழுத்தாளர் வீட்டிலா திருடினோம் என்று நினைத்து மிகவும் வருத்தப்பட்டான். அதோடு தான் முதல் நாள் திருடிய பொருள்களை எடுத்து வந்து மீண்டும் வீட்டில் வைத்தான். அதோடு அந்த வீட்டில் திருடியதற்காக தன்னை மன்னித்துவிடும்படி கூறி மன்னிப்பு கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துவிட்டு சென்று இருந்தான். வெளியில் சென்று இருந்த சுஜாதா வீட்டிற்கு வந்தபோது திருடன் எழுதி வைத்திருந்த கடிதம் கண்ணில் பட்டது.

திருட்டு

உடனே இது குறித்து போலீஸில் புகார் செய்தார். போலீஸார் கைரேகை நிபுணர்கள் துணையோடு டி.வி போன்ற பொருள்களில் இருந்த கைரேகையை பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். எழுத்தாளர் நாராயண் சுர்வே மும்பை தெருக்களில் ஆதரவற்றவராக வளர்ந்தார். பின்னர் வீட்டு வேலைக்காரனாகவும், பால் பாக்கெட் போடுபவராகவும், நாய் பராமரிப்பவராகவும் என பல்வேறு வேலைகளை செய்தார். நாராயண் சுர்வே தனது கவிதைகளில் நடுத்தர மக்களின் துயரங்களை குறிப்பிட்டு இருப்பார்.

திருடன் எழுதிவைத்து விட்டுச் சென்றிருக்கும் மன்னிப்பு கடிதம், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.