1 தாருக்கு 200 முதல் 400 ரூபாய்... வாழைத்தாருக்கு அடித்த ஜாக்பாட்... மேலும் விலை உயருமா?
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு, பழைய வத்தலக்குண்டு, கணவாய்ப்பட்டி, ஜி.தும்மலப்பட்டி, கோம்பைபட்டி, விருவீடு உள்ளிட்டப் பகுதிகளில் அதிக பரப்பளவில் வாழை விவசாயம் நடைபெற்று வருகிறது. இதில் செவ்வாழை, ரஸ்தாளி, பூவன், கற்பூரவள்ளி, நாட்டு வாழை எனப் பல ரகங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.
வத்தலக்குண்டுவில் வாழைத்தார் விற்பனைக்கு இரண்டு பெரிய வாழைச் சந்தைகள் செயல்படுகின்றன. ஒவ்வொரு வாரமும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சந்தை நடைபெறுகிறது. இந்தச் சந்தைகளுக்கு திண்டுக்கல் மட்டுமல்லாது தேனி, கரூர் மாவட்டங்களில் சாகுபடி செய்யப்படும் வாழைத்தார்களும் விற்பனைக்காகக் கொண்டு வரப்படுகின்றன. ஒவ்வொரு சந்தைக்கும் சுமார் 10,000 தார்கள் கொண்டு வரப்படுகின்றன.
இதுகுறித்து வாழை வியாபாரிகளிடம் பேசியபோது, ``கடந்த மாதங்களில் பெய்த தொடர் மழை காரணமாக விளைச்சல் குறைந்துவிட்டது. தற்போது 3,000 வாழைத் தார்கள் மட்டுமே சந்தைக்கு வருகிறது. ஆடி மாத விசேஷ காலம் என்பதால் தேவை அதிகம் இருந்து வருகிறது. ஆனால், வரத்து குறைவாக இருப்பதால் நல்ல தரமான வாழைத்தார் ஒன்று 500 ரூபாய் முதல் 700 ரூபாய் வரை கூடுதலாக விற்பனையாகிறது.
.jpg)
தற்போது செவ்வாழை ஒரு தார் 400 முதல் 1200 ரூபாயும், ரஸ்தாளி ஒரு தார் 300 முதல் 700 ரூபாயும், கற்பூரவள்ளி 350 முதல் 750 ரூபாயும், பூவன் 300 முதல் 550 ரூபாயும், நாழிப் பூவன் 250 முதல் 450 ரூபாயும் என விற்பனையாகிறது. சமையலுக்கு பயன்படுத்தப்படும் நாட்டு வாழைக்காய் 200 முதல் 600 ரூபாய் வரை விற்பனையாகிறது" என்றார். வரத்து குறைந்த போதிலும் வாழைத்தார்களுக்கு நல்ல விலை கிடைத்திருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இன்னும் இந்த விலை உயர்வு எத்தனை நாள்களுக்கு இருக்கும் என்பது குறித்து வாழை கமிஷன் மண்டி உரிமையாளர் சேசுராஜ் என்பவரிடம் பேசியபோது, ``தொடர் மழை காரணமாக சில இடங்களில் வாழை மரங்கள் சேதமடைந்துள்ளன. தற்போது ஆடி மாத காற்றும் அதிகமாக வீசத் தொடங்கியுள்ளதால் வரத்து மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் வாழைத்தாரின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எப்படியும் இந்த ஆடி மாதம் வரை விலை உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்" என்றார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


