தேர்தல் நேரத்தில் ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட வழக்கு; பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரனிடம் விசாரணை!

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக சோதனை நடத்தி வந்தனர். அப்போது சென்னையிலிருந்து நெல்லைக்குச் செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸில் கோடிக்கணக்கான பணம் கொண்டு செல்லப்படும் தகவல் தேர்தல் பறக்கும் படையினருக்கு கிடைத்தது. சென்னை எழும்பூரிலிருந்து தாம்பரம் ரயில் நிலையத்துக்கு வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அப்போது 4 கோடி ரூபாயை போலீஸார் பறிமுதல் செய்தனர். அதைக் கொண்டு சென்றவர்கள், பா.ஜ.க மாநில துணை தலைவரும், எம்.எல்.ஏ-வுமான நயினார் நாகேந்திரனின் ஆதரவாளர்கள் எனத் தெரியவந்தது. நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரனின் ஆதரவாளர்களிடமிருந்து 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதையடுத்து அவரிடமும் விசாரணை நடத்த தாம்பரம் போலீஸார் சம்மன் அனுப்பினர். ஆனால் தேர்தல் பணி உள்ளிட்ட காரணங்களை குறிப்பிட்டு நயினார் நாகேந்திரன், விசாரணைக்கு ஆஜராகவில்லை.

நயினார் நாகேந்திரன்

இதற்கிடையில் தாம்பரம் போலீஸாரிடமிருந்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டது. அதனால் சி.பி.சி.ஐ.டி போலீஸார் 4 கோடி ரூபாய் வழக்கை விசாரிக்க சம்பந்தப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பினர். பா.ஜ.க-வின் மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் சி.பி.சி.ஐ.டி போலீஸார் சில தினங்களுக்கு முன்பு விசாரணை நடத்தினர். அடுத்து, நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இந்த நிலையில்தான் நயினார் நாகேந்திரன், எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி தலைமை அலுவலகத்துக்கு விசாரணைக்காக வந்தார். அவரிடம் சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரயிலில் பறிமுதல் செய்யப்பட்ட 4 கோடி ரூபாய் யாருக்கு சொந்தமானது என்ற கேள்வியை மையப்படுத்தியே விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நயினார் நாகேந்திரனிடமும் அதுதொடர்பாக கேள்விகள் கேட்கப்பட்டிருக்கின்றன. அவர் அளிக்கும் தகவல்கள் இந்த வழக்கின் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.