பெற்றோர் தலைமறைவு; பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரி பூஜாவிடம் போலீஸார் இரவில் 2 மணி நேரம் விசாரணை!

மகாராஷ்டிராவைச் சேர்ந்த பெண் பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரி பூஜா கேட்கர் பணியில் சேரும் முன்பு தனக்கு தனி கார், தனி வீடு, தனி அலுவலகம் வேண்டும் என்று புனே மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் கேட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதோடு பார்வைக்குறைபாடுள்ள மாற்றுத்திறனாளி என்று கூறி வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு பெற்றார். இது குறித்து மத்திய அரசு விசாரணை செய்ய கமிட்டி அமைத்திருக்கிறது. பார்வை குறைபாடுள்ளவர் என்று இரண்டு முறை சான்றிதழ் பெற முயன்று இருப்பதும் தெரியவந்துள்ளது. அதோடு பூஜா இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு என்று கூறி சாதிச்சான்றிதழ் வாங்கி இருந்தார். அதில் தனது குடும்பத்திற்கு ஆண்டு வருமானம் 8 லட்சம் என்று குறிப்பிட்டு இருந்தார். ஆனால் பூஜாவின் பெற்றோர் தங்களுக்கு 40 கோடிக்கும் அதிகமாக சொத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

பூஜாவின் பெற்றோர் நிலப்பிரச்னையில் விவசாயியை துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக அகமத்நகர் போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீஸார் பூஜாவின் பெற்றோரை தேடி வருகின்றனர். அவர்கள் இப்போது தலைமறைவாக இருக்கின்றனர். இந்நிலையில் நேற்று இரவு வாசிமில் உள்ள பூஜாவின் வீட்டிற்கு 3 பெண் போலீஸ் அதிகாரிகள் சென்றனர். அவர்கள் பூஜாவிடம் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணைக்கு பிறகு அதிகாலை 1 மணிக்கு பூஜாவின் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றனர். இது குறித்து பூஜா அளித்த பேட்டியில், போலீஸாருடன் சில தகவல்களை பகிர்ந்து கொண்டதாக குறிப்பிட்டார். பூஜாவின் பெற்றோர் தலைமறைவாக இருப்பதால் அது குறித்து விசாரித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பூஜா தன்னிடம் போலீஸார் விசாரணை நடத்தியது குறித்து அளித்த பேட்டியில், ``மீடியாக்கள் தவறான தகவலை பரப்பவேண்டாம். என் மீதான குற்றம் குறித்து மத்திய அரசு விசாரித்து வருகிறது. எனவே என்னைப்பற்றி தவறான தகவலை பரப்பவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.