விவாகரத்து வழக்கு நிலுவையில் இருக்கும்போதே மறுமணம்... 6 வயதில் குழந்தை.. தம்பதிக்கு 6 மாத சிறை!

பொதுவாக, ஒரு திருமண பந்தத்தை விவாகரத்து செய்யாமல் அடுத்த திருமணத்துக்குள் நுழைவது சட்டப்படி செல்லாது. ஆனால் சிலர், விவாகரத்து வழக்கு நடந்து கொண்டிருக்கும்போதே அவசரப்பட்டு மறுமணம் செய்து கொள்வதுண்டு. அது போன்ற ஒரு சம்பவத்தில், சம்பந்தப்பட்ட தம்பதிக்கு உச்ச நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

விவாகரத்து வழக்கு

தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பெண் தன் கணவரிடமிருந்து விவாகரத்துக் கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். மனு நிலுவையில் இருந்தபோது, அப்பெண் வேறு ஒருவரை திருமணம் செய்து குழந்தையும் பெற்றுக்கொண்டார். இதை எதிர்த்து அப்பெண்ணின் முதல் கணவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அம்மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், சட்டப்படி விவாகரத்துப் பெறுவதற்கு முன் அவசரப்பட்டு மறுமணம் செய்துகொண்ட தம்பதிக்கு ஒரு நாள் மட்டும் சிறைத்தண்டனை விதித்தது. இத்தண்டனை போதுமானது கிடையாது என்று கூறி, அப்பெண்ணின் முதல் கணவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார்.

இம்மனு மீதான விசாரணையின் இறுதியில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் ரவி குமார் மற்றும் சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, விவாகரத்துக்கு முன்பாக அவசரப்பட்டு திருமணம் செய்துகொண்ட தம்பதிக்கு தலா 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்தது. அத்தம்பதிக்கு 6 வயதில் குழந்தை இருப்பதால் அதன் நலனை கருத்தில் கொண்டு, முதலில் அப்பெண்ணின் இரண்டாவது கணவர் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும், அவரது தண்டனை முடிந்த பிறகு அப்பெண் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

விவாகரத்து வழக்கு

மேலும், இது போன்ற செயல்கள் மிகவும் வீரியமான குற்றம் என்றும், இது சமுதாயத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். மேலும், சமூகத்தைப் பாதிக்கக்கூடிய ஒரு குற்றத்துக்கான தண்டனையை வழங்கும் விஷயத்தில், குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை லேசான தண்டனையுடன் விடுவிப்பது நல்லதல்ல என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

ஏற்கெனவே, மும்பையில் ஒரு பெண் தன் கணவரிடமிருந்து விவாகரத்து கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். விவாகரத்து வழக்கு நிலுவையில் இருந்தபோது, அப்பெண் இன்னொருவரை விரும்பினார். அவருடன் ஏற்பட்ட உறவில் கர்ப்பமடைந்தார். உடனே, கருவை கலைக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், கோர்ட் கருவை கலைக்க அனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.